தொலைந்து போனவர்களின் கதையை நீங்கள் நிறைய கேட்டிருக்கலாம். ஆனால் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய கதை மிகவும் வித்தியாசமானது மற்றும் மனதை உருக்க வைக்கும். இது ஐந்து வயது சிறுவன் "ப்ரூஸ் ஆன்டர்சன்" பற்றிய கதை.
இந்த கதை அமெரிக்காவின் லூசியான மாகாணத்தில் வசிக்கும் லெஸ்ஸி மற்றும் பெர்சி டன்பார் குடும்பத்தினரிடம் துவங்குகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தை "பாபி டன்பார்"-1908 ஆம் ஆண்டு பிறந்துள்ளான். 1912 ஆம் ஆண்டு டன்பார் குடும்பம் மீன் பிடிப்பதற்காக தன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு ஏரிக்கு சென்றுள்ளனர். அன்றிரவு அவர்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு பாபி விளையாடுவதற்காக யாரும் கவனிக்காத நேரத்தில் வெளியே சென்று விட்டான். வெறும் 4 வயது குழந்தை என்பதால் விளையாட்டாக ஏரிக்கு விளையாடச் சென்று மாயமாகிவிட்டான்.
தொலைந்த சிறுவன்
உடனே டன்பார் குடும்பத்தினர் பாபியை காணவில்லை என்று பதற்றத்தோடு தேடி அலைந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு பாபி ஏரியின் தண்ணீருக்குள் மூழ்கி விட்டான் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு ஏற்றபடியே ஓரிரு நாட்களில் பாபி தலையில் அணிந்திருந்த தொப்பி ஏரியின் மேல் மிதந்து கொண்டிருந்தது. உண்மையில் பாபி தண்ணீரில் தான் மூழ்கி விட்டானா அல்லது யாராவது கடத்திச் சென்று விட்டார்களா என்ற கேள்வியும் அனைவருக்குள்ளும் எழுந்தது.
ஒருவேளை ஏரியில் உள்ள முதலை சிறுவனை சாப்பிட்டு இருக்குமோ என்று எண்ணி காவல்துறையினர் ஏரியில் உள்ள முதலைகளைப் பிடித்து துண்டுகளாக்கியதோடு, தண்ணீரில் இருந்து உடலை வெளியேற்ற டைனமைட்டை ஏரியில் வீசினர். ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதனால், உள்ளூர் காவல் துறையினரும் மாநில காவல் துறையினரும் சிறுவன் கடத்தப்பட்டிருப்பான் என்று எண்ணி நகரம் முழுவதும் தேடி அலைந்தனர். பாபியின் பெற்றோர் தனது மகனை பத்திரமாக மீட்டு கொடுப்பவருக்கு 6000 டாலர்கள் வழங்குவதாக அறிவிப்பு விடுத்தனர்.
வில்லியம் வால்டர்ஸ்
பாபி தொலைந்து எட்டு மாதங்கள் ஆகியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் போலீசார் சாதாரணமாக சோதனை செய்து கொண்டிருந்தபோது, விற்பனையாளரான வில்லியம் வால்டர்ஸ் என்பவருடன் ஐந்து வயதில் ஒரு சிறுவன் இருந்தான்.
யார் இந்த சிறுவன்? என்று போலீசார் விசாரிக்கையில் அந்த சிறுவன் புரூஸ் ஆண்டர்சன் என்று வால்டர்ஸ் கூறினார். சிறுவனை பற்றி விசாரித்த போது அது தனக்குச் சொந்தமான நிலத்தில் பணியாற்றும் ஜூலியா ஆண்டர்சன் என்ற பெண்ணின் மகன் என்றார். மேலும் ஜூலியாவால் மகனை கவனிக்க இயலாத காரணத்தினால், வறுமையின் காரணமாக வால்டர்சுடன் பயணத்திற்கு அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார். அச்சிறுவன் பாபியின் வயதோடும் முக பாவனையோடும் ஒத்துப்போவதால் வால்டர்ஸ் கூறும் எதையும் போலீசார் நம்ப தயாராக இல்லை. அதனால், வால்டர்ஸ் கைது செய்யப்பட்டார்.
பாபியின் தோற்றத்தில் புரூஸ்
போலீசார் லெஸ்லி டன்பார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நடப்பது எதுவுமே என்னவென்று தெரியாமல் ப்ரூஸ் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தான். இதற்கிடையில் வால்டர்ஸ் சொல்வதையும் உறுதி செய்ய புரூசின் தாயார் என்று அவர் கூறும் ஜூலியா என்ற பெண்ணையும் போலீஸ் ஸ்டேஷன் வர அழைப்பு விடுக்கப்பட்டது.
விரைந்து வந்த ஜூலியா புரூஸ் தனது பையன் தான் என்று உறுதியாகக் கூறினார். ஆனால் சந்தேகப்படும்படியான விஷயம் என்னவென்றால் ஜூலியா தனது மகன் சில நாட்களாக வீட்டிற்கு திரும்பாததை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. நடந்தவை, அவர்கள் கூறுபவை அனைத்துமே முரண்பாடாக இருந்ததால் போலீசார் அவர்களை நம்ப மறுத்தனர்.
லெஸ்ஸி மற்றும் பெர்சி டன்பார் குடும்பத்தினர் சிறுவனைப் பற்றிய தகவல் கிடைத்த உடனேயே ரயிலில் புறப்பட்டு வந்தனர். லெஸ்ஸி ஒரு சில அங்க அடையாளங்களை வைத்து இது தொலைந்து போன தனது மகன் பாபி டன்பார் தான் என்று கூறியுள்ளார். ஒரு சில ஊடகங்கள் கூறுவது என்னவென்றால், தூங்கிக் கொண்டிருந்த புரூஸ் எழுந்தவுடன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் லெஸ்ஸியை "அம்மா!" என்று ஓடிப்போய் கட்டி பிடித்து விட்டான் என்கின்றனர். நீதிமன்றத்திலும் அந்த சிறுவன் பாபி டன்பர் தான் என்று தீர்ப்பு வழங்கி சிறுவனை டன்பார் குடும்பத்தினரிடமே ஒப்படைத்து விட்டனர். வீடு திரும்பிய சிறுவனுக்கு மேல தாலங்களோடு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிறுவன் தொலைந்து போனதை காவல்துறையில் புகார் அளிக்காததால் ஜுலியா கூறுவதை யாரும் நம்ப தயாராக இல்லை. மேலும் லெஸ்ஸி தனது மகனை தொலைத்து வெறும் எட்டு மாதங்களே ஆகியிருந்தன. அப்படி இருக்கையில் பார்த்தவுடனே தனது குழந்தைதான் என்று கண்டுபிடிக்க முடியாமல் வெறும் அடையாளங்களை வைத்து ஏன் கண்டுபிடித்தார் என்றும் அச்சமயத்தில் பலர் கேள்வி எழுப்பினர்.
வெளிவந்த உண்மை
பாபி தனது வாழ்நாள் முழுவதும் டன்பார் குடும்பத்தினரோடு இருந்து, தனக்கென ஒரு குடும்பத்தையும் உண்டாக்கிக் கொண்டு 1966 ஆம் ஆண்டு காலமானார். பல வருடங்கள் கழித்து பாபி டன்பார் மற்றும் ஜுலியாவின் பேரக்குழந்தைகள் உண்மையை கண்டுபிடிக்க 'டிஎன்ஏ' (DNA) டெஸ்ட் எடுத்தனர். அதில் பாபியின் டிஎன்ஏ டன்பார் குடும்பத்தினரோடு ஒத்துப் போகவில்லை. உண்மையில் மீட்டு வந்த சிறுவன் புரூஸ் ஆண்டர்சன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
அந்த காலத்தில் டிஎன்ஏ பரிசோதனை இல்லாததால், ஜூலியாவால் தனது மகன் தான் புரூஸ் என்று அழுத்தமாக கூறியும் மற்றவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இதனால் புரூஸ், பாபி டன்பாராக தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தற்போது உண்மை வெளிவர, இந்த தகவலை அறிந்து அனைவருமே அதிர்ந்து போயினர். இதனால் 1912 ஆம் ஆண்டு காணாமல் போன பாபி டன்பார் என்ற சிறுவன் என்ன ஆனான் என்ற விஷயம் இன்னும் மர்மமாக உள்ளது.