இதை கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் தங்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுமே தங்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி வீட்டிற்கு வெளியே வந்தால் உங்கள் கால் படும் இடமெல்லாம் தங்கத் துகள்களாக இருக்கிறது. அப்படி என்றால் நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அல்லவா? உண்மையிலேயே இப்படி ஒரு நகரம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான்.
தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளுக்குள் 'எல் டொராடோ' என்று கூறப்படும் இந்த தங்க நகரம் உள்ளது. சிலர் இப்படி ஒரு தங்க நகரம் இருப்பது உண்மை என்று நம்பினாலும், பலர் இதை கட்டுக்கதை என்றே கூறுகின்றனர். ஆனால் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்த தங்க நகரத்தை கண்டுபிடிப்பதற்காக பல நூறு ஆண்டுகளாக மக்கள் தேடி வந்ததாக தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட தங்க நகரத்தை பற்றி உலகமே அறிந்து கொள்ள காரணமாக இருந்தது ஸ்பானிஷ் ஆய்வாளர்கள். 15ஆம் நூற்றாண்டில் அவர்கள் தென் அமெரிக்காவை அடைந்த போது, ஆண்டிஸ் மலையில் வாழும் பழங்குடி மக்களைப் பற்றிய கதைகளை கேட்டறிந்தனர். ஒரு புதிய தலைவர் ஆட்சிக்கு வரும்போது குவாதவிதா என்ற ஏரியில் கொண்டாட்டமாக விழா நடைபெறும். அப்போது அந்த தலைவர் தனது உடல் முழுவதும் தங்கத் துகள்களை பூசிக்கொண்டு அந்த ஏரியில் முக்கி எழுவார். அப்போது அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக அந்த ஏரியிலேயே விட்டுச் செல்வது வழக்கம். இந்த சடங்கு பல தலைமுறைகள் தாண்டி நடைபெறுவதாக ஸ்பானிஷ் ஆய்வாளர்களுக்கு தெரியவந்தது.
ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் 'எல் டொராடோ' என்பது அந்த நகரத்தை ஆட்சி செய்த மன்னரின் பெயர் என்று நம்பினர். மேலும் அந்த தங்க நகரத்தை கண்டுபிடிப்பதற்காக 1530-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டுத் தலைவர் 'டியாகோ' தங்க நகரத்தைப் பற்றி முழுமையாக கேட்டறிந்தார். உடனே 100 பேர் கொண்ட குழுவைத் திரட்ட அந்த நகரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனெனில், டியாகோவின் வீரர்கள் அனைவரும் தேடுதல் நடத்திய போது காட்டிற்குள்ளேயே நோய்களால் பாதிக்கப்பட்டும், விஷப்பூச்சிகள் கடித்தும் உயிரிழந்தனர்.
ஜுவான் மார்டின்ஸ் என்ற நபர் மட்டும் 'எல் டொராடோ' நகரத்தில் சிக்கி பத்து வருடங்கள் சிறையில் இருந்து, பிறகு பழங்குடியினரின் உதவியால் தப்பித்து வந்தார். அவர் கூறியதாவது, "நான் என் குழுவினரால் கைவிடப்பட்டு நதியின் ஓரத்தில் மயங்கிக் கிடந்தேன். என்னை முவிஸ்கா பழங்குடியினர் கண்களை கட்டி அவர்களின் 'எல் டொராடோ' நகரத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். அந்த நகரத்து மக்களிடம் இருந்த தங்கத்தின் பயன்பாட்டை கண்டு வியந்து போனேன். சில ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு என்னை விடுவிக்குமாறு அம்மன்னரிடம் நான் கேட்டுக் கொண்டேன். அதேபோன்று என் கண்களை கட்டி என்னை வெகு தூரம் அழைத்துச் சென்று என்னை விடுவித்துச் சென்றனர்" என்றார்.
'எல் டொராடோ' நகரத்தில் மார்டின்ஸ் பார்த்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் ஸ்பானிஷ் மன்னரிடம் கூறினார். "எல் டொராடோ நகரம் முழுவதுமே விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் அங்கு வாழும் மன்னர் தினமும் காலையில் தங்க தூசியில் குளிப்பது வழக்கம். அங்குள்ள மக்கள் அனைவருமே தங்கத்தால் பணக்காரராக இருந்தனர். இந்த உலகத்தையே ஆளக்கூடிய அளவிற்கு அந்த நகரத்தில் தங்கம் நிறைந்துள்ளது. சில முறை அங்கு வாழும் மக்கள் வாரத்தில் ஏழு நாட்களும் விழாக்களை கொண்டாடுவர்" என்று ஜுவான் மார்ட்டின்ஸ் கூறினார்.
மார்ட்டின்ஸ் கூறியதை கேட்ட ஸ்பானிஷ் மன்னருக்கு ஆசை பெருக்கெடுத்தது. தங்க நகரத்தை எப்படியாவது கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று எண்ணி மீண்டும் ஆயிரம் பேர் கொண்ட குழுவை நியமித்து காட்டிற்குள் அனுப்பினார். காட்டிற்குள் சென்றவர்களில் நிறைய பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த நகரத்தை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
1545-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் குவாதவிதா ஏரியை கண்டுபிடித்தனர். மேலும் அந்த ஏரியின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி அதிலிருந்து நூற்றுக்கணக்கான தங்க ஆபரணங்களை கண்டெடுத்தனர். ஆனால் அவர்கள் கேட்டறிந்த கதையைப் போன்று நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த தங்க நகரத்தை பற்றி பல பேர் பல விதமாக சொன்னாலும் அதை நேரில் பார்த்த ஒரே நபர் ஜூவான் மார்ட்டின்ஸ் மட்டுமே. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் 'எல் டொராடோ' நகரம் மட்டுமின்றி இது போன்ற பல வெளி வராத ரகசியங்கள் மறைந்துள்ளன. கண்டிப்பாக ஒரு நாள் இந்த தங்க நகரம் கண்டுபிடிக்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர்.