நீங்கள் இன்று ஒரு சாலையில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வழியில் கிடக்கும் ஒரு கல்லை பார்க்கிறீர்கள். மறுநாள் அதே சாலையில், அதே இடத்தில் சென்று பார்க்கும் போது முந்தைய நாள் பார்த்த கல் அங்கு இல்லை என்றால் என்ன நினைப்பீர்கள்? யாராவது அந்தக் கல்லை அப்புறப்படுத்தியிருப்பார்கள் என்றுதானே.
அதுவே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கற்கள் மறுநாள் வேறு ஒரு இடத்தில் இருந்தால் கண்டிப்பாக குழம்பி விடுவீர்கள். கல் என்று சொன்னாலே அது தானாக நகரக் கூடியது அல்ல. அந்தக் கற்கள் மேல் ஏதாவது ஒரு விசை ஏற்பட்டால்தான் அது நகரும். ஆனால், அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கற்கள் மட்டுமின்றி சிறு பாறைகளும் தானாகவே நகர்கின்றன என்ற விஷயம் உலகத்தையே வியக்க வைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 'ரேஸ்ட்ராக் ப்ளாயா' என்ற மலைப்பகுதி உள்ளது. சுமார் 3700 அடி உயரம் கொண்ட இந்த மலை பகுதியிலிருந்து அவ்வப்போது கற்கள் மற்றும் பாறைகள் கீழுள்ள மரண பள்ளத்தாக்கில் உடைந்து விழுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நடப்பது என்னவென்றால் இந்த மரண பள்ளத்தாக்கில் விழும் பாறைகள் இரவு நேரங்களில் தானாகவே நகர்கின்றன.
'எப்புட்ரா' என்று கேட்பவர்களுக்கு இன்னொரு வியப்பூட்டும் விஷயம் உள்ளது. இந்த மரண பள்ளத்தாக்கில் உள்ள பாறைகள் சுமார் 200 கிலோ வரை எடை கொண்டவை. பெரிய கற்கள் முதல் சிறிய பாறைகள் வரை அனைத்துமே இரவு நேரங்களில் தானாகவே நகர்ந்து செல்கின்றன. இந்த கற்கள் 1000 அடி வரை நகர்ந்து சென்றதற்கான தடயமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'டெத் வேலி' (death valley) என்று அழைக்கப்படும் மரண பள்ளத்தாக்கு ஒரு வறண்ட ஏரி. இது உலகிலேயே வெப்பமான இடங்களில் ஒன்று. வட அமெரிக்காவிலேயே வறண்ட இடம் என்றும் இதனை குறிப்பிடுவர். 2014ஆம்ஆண்டு வரை இந்தப் பாறைகள் நகர்வதை கண்ணால் பார்த்தவர்கள் எவருமில்லை. ஏனென்றால் இந்தப் பாறைகள் எப்போதுமே நகர்வது இல்லை. சில முக்கிய நாட்களில் மட்டுமே இவை நகர்கின்றன.
அப்படி எந்த முக்கிய நாட்கள் தெரியுமா? இங்கு மழைக்கு அடுத்து வரும் குளிர் காலத்தில் கற்கள் அதிகமாக நகர்கின்றன. குறிப்பாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த மரண பள்ளத்தாக்கில் நடக்கும் அபூர்வங்களை காணலாம். இதுகுறித்து விஞ்ஞானிகள் பலரும் பலவிதமாக யூகித்து வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சிலர் இது பேய் என்றும், வேறு சிலர் இது கடவுளின் செயல் என்றும் வெவ்வேறு விதமாக பேசுகின்றனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுவது, "இரவு நேரங்களில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகும். மறுநாள் காலை சூரிய ஒளி பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாறைகளின் இடுக்கில் மறைந்துள்ள பனிக்கட்டிகள் கரைந்து, காற்றடிக்கும் திசையில் அப்பாறைகள் நகரலாம். பெரிய காற்று வீசினால், பெரும்பாறைகளும் நகர்கின்றது" என்கின்றனர்.
நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று விஞ்ஞானி ஒருவர் தானாகவே கற்களை கொண்டு வந்து இந்த மரண பள்ளத்தாக்கில் வைத்துள்ளார். தனது கேமராவில் பாறைகள் நகர்வதை ஆவணப்படமாக எடுத்துள்ளார். அதில் கற்கள் நகர்ந்து செல்வதையும் அதன் தூரத்தையும் உறுதி செய்து கொண்டனர். என்னதான் தோப்புக்கரணம் போட்டு பார்த்தாலும் பாறைகள் நகர்வதற்கான ஆதாரப்பூர்வமான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்றும் பல விஞ்ஞானிகள் கற்கள் நகர்வதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கற்கள் நகர்வது இன்னும் தீராத மர்மமாகத்தான் உள்ளது.