இந்த உலகம் பல விடை தெரியா மர்மங்களால் நிறைந்தது. சில மர்மங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன. இன்றைய நவீன உலகத்தில் எவ்வகை புதிராக இருந்தாலும் சரி, அனைத்திற்குமே தீர்வும், பதிலும் உடனே கிடைத்து விடுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மர்மங்களுக்கு இன்னும் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. தீர்வு காண முயற்சி செய்தாலும் சில அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு பதில் கிடைப்பதில்லை.
காடுகள் என்றாலே அடர்ந்த, பசுமையான மரங்களும், அதில் வளைந்து நெளிந்து வளர்ந்த செடி கொடிகளும், காட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ண மலர்களும், பிரம்மாண்டமான அருவிகள் என காடுகளின் அழகைப் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம். பலருக்கும் காடுகள் என்றால் இந்த காட்சிகள் தான் கண்முன் வந்து செல்லும். ஒவ்வொரு காடுகளும் அதன் தனித்தன்மைக்காக பெயர் போனதாக இருக்கும். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கு என்றே ஒரு புகழ்பெற்ற காடு உள்ளது உங்களுக்கு தெரியுமா?
ஜப்பானில் உள்ள அயோகிகஹாரா என்ற காடு தற்கொலை செய்து கொள்வதற்கு உலகின் இரண்டாவது பிரபலமான இடம் என்ற பெயர் பெற்றது. நாம் எத்தனையோ வகை காடுகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இலையுதிர் காடு, பனிக்காடு, அடர்வணக்காடு என்று பல வகைகள் உள்ளன. ஆனால், உலகின் தற்கொலை காடு என்று அழைக்கப்படும் இந்த காடு பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது. நீங்கள் இந்த காட்டிற்குள் நுழையும் போதே அங்கு 'உங்கள் குடும்பம், குழந்தைகள் மற்றும் உங்கள் பெற்றோரின் விலைமதிப்பற்ற பரிசான உங்கள் வாழ்க்கையை பற்றி கவனமாக சிந்தியுங்கள்' என்று எழுதப்பட்டிருக்கும். அப்படி என்ன ஸ்பெஷலோ தெரியவில்லை, சிலர் தற்கொலை செய்து கொள்வதற்காகவே இந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள்.
அயோகிகஹாரா காடு.
அயோகிகஹாரா காடு அழகிய, பசுமையான மரங்களால் சூழ்ந்தது. இங்குள்ள சில தனித்துவமான மரங்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. இக்காடு அடர்த்தியாக இருப்பதால் 'மரங்களின் கடல்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு மட்டும் இங்கு மக்கள் வருவதில்லை. இயற்கையாகவே இந்த காடு அழகாக இருப்பதால் மலையேறுபவர்களும், சாகச ஆர்வலர்களும் காட்டிற்கு அருகில் உள்ள ஃபுஜி மலையின் அழகைக் காண வருகை தருகின்றனர்.
ஃபுஜி மலையின் வட மேற்கே அமைந்துள்ளது இந்த அயோகிகஹாரா காடுகள். சுமார் 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் இந்த அடர் காட்டில் தொலைந்து போய்விட்டால் மீண்டு வருவதைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை. ஏனென்றால், இங்கிருந்து வெளியே செல்வது முற்றிலும் சாத்தியமற்றது. அதனாலோ என்னவோ இங்கு செல்லும் பலர் காணாமல் போய்விடுகின்றனர். அவர்கள் உண்மையிலேயே காணாமல் போய் விட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது யாருக்கும் தெரியாது.
தற்கொலை நடக்க காரணம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து இரண்டு மணி நேரத்தில் இந்த காட்டிற்கு நீங்கள் சென்று விடலாம். இங்கு தற்கொலைகள் அதிகம் நடப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. இக்காட்டை "யுரேயின் வீடு" என்று ஜப்பானிய புராணங்களின்படி அழைக்கப்படுகிறது. அதாவது, தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆவிகள் அயோகிகஹாராவின் மரங்களை ஊடுருவிவிட்டதாக நம்புகின்றனர். இது அங்கு செல்பவர்களை தற்கொலைக்கு ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது. பதிவுகளின் படி, 2003ஆம் ஆண்டில் காட்டிலிருந்து சுமார் 150 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் கடுமையாக சிதைந்து அல்லது காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டது போல் அமானுஷ்யமாக இருந்தன.
இரண்டாவது காரணம், இந்த காட்டிற்குள் சென்று விட்டால் அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் செயல் இழந்து விடுமாம். மொபைல் போன்கள் மட்டுமல்ல, திசை காட்டியும் கூட செயல் இழக்கின்றனவாம். காரணம், இப்பகுதியில் எரிமலை மண்ணால் உருவாக்கப்பட்ட காந்த இரும்புகளின் எண்ணிக்கையால் திசை காட்டும் காம்பஸ் கூட குழம்பி விடுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் இக்காட்டிற்கு வரும்போது எப்பொழுதுமே குழுவாகத்தான் வருகின்றனர். குழுவாக வந்தாலும் கூட அவர்கள் செல்லும் வழியில் உள்ள மரங்களில் அடையாளத்திற்காக பிளாஸ்டிக் டேப்பை ஒட்டிக்கொண்டே செல்வார்களாம். இதனால் அவர்கள் தொலைந்து போனாலும் கூட கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
அச்சுறுத்தும் அயோகிகஹாரா.
இயற்கையாகவே இந்த காடுகளில் உள்ள மரங்கள் பயமுறுத்தக் கூடியவை. அங்குள்ள மரங்களின் வேர்கள் பாம்பு போல காடு முழுவதும் ஊர்ந்து செல்கின்றன. இந்தக் காடு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனால் இதன் நிலம் சீரற்றதாகவும், பாறைகளாகவும், நூற்றுக்கணக்கான குகைகளால் துளையிடப்பட்டதாகவும் உள்ளன. இவைகளைக் கண்டு நாம் அச்சுறுவதை விட, இங்கு நிலவும் அமைதியே அதிக பயத்தைத் தூண்டுகின்றது என இங்கு சென்ற பலரும் கூறுகின்றனர். மேலும், இங்குள்ள மரங்கள் அனைத்தும் இறுக்கமாக நிரம்பி இருப்பதால் காற்று வேகமாக அடிக்க முடியாது. சில சுற்றுலா பயணிகளின் திசை காட்டிகள் உடைந்து போன விசித்திரமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.
காட்டில் யாராவது தற்கொலை செய்து கொண்டால், அவர்களின் உடல்களை காட்டில் தனியாக விடக்கூடாது. தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை காட்டிலேயே விட்டுவிட்டால் துரதிர்ஷ்டம் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் வன ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை மீட்டு வன காவல் நிலையத்தின் சிறப்பு அறையில் வைத்து விடுகின்றனர். தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கைகள் குறையும் என்ற நோக்கில், சமீபத்தில் ஜப்பானிய அரசாங்கம் இக்காடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டது.