ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே பெரும் சிரமமாக நினைக்கின்றனர். அதனால் ஜப்பான் அரசே அந்நாட்டு மக்கள் தொகை குறைந்து வருவதால் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவில் ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு கிராமத்தையே உருவாக்கும் அளவிற்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான உகாண்டாவில் மூஸா ஹசாயா என்பவர் வாழ்ந்து வருகிறார். 67 வயதான இவர் தனது வாழ்நாளில் பன்னிரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 102. பேரன் பேத்திகள் மட்டுமே 568 பேர் உள்ளனர். அவரவர் ஒரு திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளின் செலவுகளை சமாளிக்கவே 'போதுமடா சாமி' என்று விழி பிதுங்கி நிற்கும் இந்த காலத்தில், மூஸா வெற்றிகரமாக 12 திருமணங்கள் செய்து தனது குடும்பத்தை பேணிக்காத்து வருகிறார்.
மூஸா ஹசாயா 1971 ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, 16 வயதில் முதல் திருமணத்தை செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்குப் பிறகே முதல் குழந்தை பிறந்துள்ளது. அதே வேகத்தில் தொடர்ந்து 11 திருமணங்களை செய்துள்ளார். அவரின் ஒவ்வொரு மனைவிக்கும் 8 முதல் 10 குழந்தைகள் வரை பிறந்துள்ளன. குழந்தைகளுக்கும் நாளடைவில் திருமணமாகி, மூஸாவிற்கு தற்போது மொத்தம் 568 பேரன், பேத்திகள் உள்ளனர்.
உகாண்டாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்வது சட்டபூர்வமாக தவறு இல்லை என்பதற்காக 102 குழந்தைகள் பெற்றுக் கொள்ள மன தைரியம் மிக்க ஒருவரால் தான் முடியும்.
எளிமையான குடும்பத்தில் இருந்து வளர்ந்த இவர், விவசாயம் மற்றும் மாட்டிறைச்சி விற்று லாபம் கண்டு வந்துள்ளார். இதனால் மூஸாவிற்கு பெண் கொடுக்க பலர் முன் வந்ததால் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது மனைவிகள் உகாண்டாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த வெவ்வேறு மொழி பேசுபவர்கள்.
மூஸாவின் கடைசி மனைவியை விட அவரது பேரக்குழந்தைகள் சிலர் வயதில் பெரியவர்களாம். பெரிய குடும்பம் என்பதனால் பேரக் குழந்தைகளின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவே மிகவும் சிரமமாக இருப்பதாக மூஸா கூறுகிறார். அந்தப் பிரச்சினையை சரி செய்ய, தனி பதிவேட்டை பயன்படுத்தி வருகிறார் மூஸா.
இந்நிலையில் மூஸாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் குறைவாகவே இருந்துள்ளது. அதனால் அவரது இரண்டு மனைவிகள் அவரை விட்டு சென்று விட்டார்களாம். வாழ்வாதார செலவு அதிகரித்துக் கொண்டே போகும் காரணத்தினால், மூஸாவால் தனது குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. அதனால் 'இதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை' என்று மூஸா ஒரே மனதாக முடிவெடுத்துவிட்டார்.
இது குறித்து மூஸா ஹசாயா,"செலவுகள் அதிகரித்த நிலையில், எனது வருமானம் குறைவாகவே உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வது நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இப்போது பிரச்சனையாக இருக்கிறது. எனவே இனி குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அதனால் என் மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளேன். நான்கு திருமணங்களுக்கு மேல் செய்ய விரும்புவோர் போதுமான சொத்துக்கள் இல்லாமல் திருமணம் செய்ய வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
இவரது குடும்பத்தை பார்க்கவே தினமும் இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏழ்மையான சூழலில் தற்போது வாழ்ந்து வந்தாலும், ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாகத் தான் கடப்பதாக கூறுகின்றனர் மூஸாவின் மனைவிகளும் குழந்தைகளும்.