80-ம் நூற்றாண்டுகளில் பிறந்தவர்களுக்கு இருக்கின்ற பயம் வெடிகுண்டு வெடித்து விடுமோ, மேலே பறக்கின்ற விமானம் கீழே விழுந்து விடுமோ என்று பலவிதமான பயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ரத்த மழை பெய்யும் என்று இன்று வரை எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். 1896 ஆம் ஆண்டு முதன் முதலில் கேரளாவில் ரத்த மழை பெய்துள்ளது. அதனை அடுத்து 2001 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.
தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மழை பெய்வது ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் 25 ஜூலை 2001 ஆம் ஆண்டு பெய்த மழை வழக்கத்திற்கு மாறாக இருந்ததை கவனித்த மக்கள் பீதியடைந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் நடந்தது.
ஸ்ரீ விஜயகுமார் என்ற நபர் தனது வீட்டின் பின்வரும் உள்ள இடத்தில் விழுகின்ற மழைத்துளி மண்ணில் பட்ட உடனேயே நிறம் மாறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாத்திரங்களில் குவிந்த மழை நீரும் சிவப்பு நிறத்தில் இருந்தன. வெளியே துவைத்து காய போட்டிருந்த துணிகளிலும் சிவப்பு நிற கரை படிந்திருந்தது. பதறிப் போன விஜயகுமார் அக்கம்பக்கத்தினரிடம் கேட்டுப் பார்த்தபோது அவர்களும் இதே கதையைக் கூறினர். அப்பகுதி மக்களிடம் விசாரிக்கையில் அங்குள்ள 30 வீடுகளுக்கு மட்டும் இது போன்ற ரத்த நிறத்தில் மழை பெய்துள்ளது தெரியவந்தது.
இது ஒரே நாளிள் நடந்த நிகழ்வு அல்ல. இதுபோன்று செப்டம்பர் 23ஆம் தேதி வரை இந்த ரத்த மழை பெய்துள்ளது. சிலர் மழை பெய்யும் முன்பு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ததாக கூறினர். வேறு சிலர் மழைத்துளி மரங்களில் பட்ட உடனேயே அதன் இலைகள் நிறம் மாறியதாகவும் கருகிப்போனதாகவும் கூறினர்.
இந்த இரத்த மழையை பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் இது விண்கல் உடைந்து அதன் துகள்கள் மழை நீரோடு கலக்கும் போது அவை சிவப்பு நிறத்தில் மாறியிருக்கலாம் என்று யூகித்தனர். மழை பெய்யும் முன்பு கேட்ட இடி, மின்னலின் சத்தம் விண்கல் உடைந்ததாக இருக்கலாம் என்று நினைத்தனர். இன்னும் சிலர் அடுத்தபடியாக இது ஏலியன்களின் சதித்திட்டம் என்றும் நம்பினர்.
இதைப் பற்றி தெரிந்து கொண்ட காட்ஃபரி லூயிஸ் என்ற இயற்பியலாளர் அந்த மழைத்துளி மாதிரியை சேகரித்து ஆய்வு செய்தார். ஆனால் அவரால் ரத்த மழையின் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை ஆய்வு செய்த மற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த மழை நீர் ஒரு நுண்ணுயிரியினால்தான் சிவப்பு நிறத்தை பெறுகிறது என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இடங்களிலும் கூட அவ்வப்போது ரத்த மழை பெய்கிறது. ஆஸ்திரேலியாவில் கூட ஒரு முறை மழை பெய்யும் போது மழைநீருடன் மீன்கள் வந்து விழுந்தன. எங்கோ வெகு தொலைவில் இருக்கும் நீர் நிலையிலிருந்த மீன்கள் சுழல் காற்றால் ஆகாயத்தை இழுக்கப்பட்டு காற்றோட்டதால் மீன் மழையாக பெய்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்று புத்தகங்களில் இது போன்ற அபூர்வமான ரத்த மழை பெய்ததாக எழுதப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டில் என்ற எழுத்தாளர் தான் எழுதிய 'ஹிஸ்டோரியா அனிமலம்' என்ற புத்தகத்தில் ரத்த பனிமலை பெய்ததாக எழுதியிருந்தார். இதுபோன்ற மிரள வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.