கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் எந்த நாளிலும் நைரோபி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி டஜன் கணக்கான பெண்களை உங்களால் காண முடியும். காரணம் என்ன தெரியுமா? "சவுதி அரேபியாவுக்குச் சென்றால் நல்ல வேலை கிடைக்கும். அங்கு சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்யலாம்?" என்று பெண்கள் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
வெகு ஆர்வத்தோடு இருக்கும் இப்பெண்களுக்கு நம்பிக்கை கொடுப்பது கென்யா அரசாங்கம் ஆதரிக்கும் தனியார் நிறுவன ஆட்சேர்ப்பு செய்பவர்களே முக்கிய காரணம். இந்நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் பெண்களை வீட்டு பராமரிப்பாளராக பணியமர்த்துகிறது. இங்கு இரண்டு வருடங்கள் வேலை செய்தால் போதும், நீங்கள் ஒரு வீட்டை கட்டுவதற்கும், உங்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்கும் மற்றும் உங்கள் எதிர்காலத்திற்கான போதுமான சேமிப்பு தொகையை உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இந்த நிறுவனங்களை நம்பி வேலை செய்வதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற பெண்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. சிலர் திரும்பி வருகையில் பசியின்றி மெலிந்த உடலோடும், சிலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் நாடு திரும்புகின்றனர். இன்னும் சிலர் சவப்பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு பேசப்பட்ட ஊதியம் கூட கிடைக்கப்படுவது இல்லை.
வன்கொடுமை செய்யும் முதலாளிகளிடம் இருந்து தப்பிக்க ஒரு இளம் பெண் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தனது முதுகெலும்பை உடைத்துக் கொண்டார். மற்றொரு பெண் தனது முதலாளி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவளை கர்ப்பமாக்கி வீட்டிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு நாளும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
கடந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 274 பேர், அதிலும் பெரும்பாலானோர் பெண்களே. கடந்தாண்டு மட்டுமே 55 கென்யா நாட்டு வேலையாட்கள் இறந்து விட்டனர். இந்த இறப்பு சதவிகிதம் அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில் அவர்களது உடம்பில் தீக்காயங்கள் இருந்ததாகவும், எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்ட தடயங்கள் போன்ற அதிர்ச்சியூட்டும் சான்றுகள் வெளியாகின. ஆனால் இவை அனைத்தும் இயற்கையான மரணங்கள் என்றே சவுதி அரசு பெயரிடப்பட்டுள்ளது. கணக்கில் வராத சிலரின் இறந்ததற்கான சான்றை கூட அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.
உண்மையில் இந்த பெண்களை பாதுகாக்க வேண்டிய உரிமை-கென்யாவின் தேசிய சட்டமன்றத்தில் தொழிலாளர் குழுவின் துணைத் தலைவரான ஃபேபியன் கியூல் முலி போன்ற அரசாங்க அதிகாரிகள். இவர்கள் நினைத்தால் முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சவுதி அரேபியாவில் இருந்து சிறந்த பாதுகாப்புகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, சீர்திருத்தம் செய்யப்படும் வரை கென்ய மக்களின் இடம்பெயர்வை கட்டுப்படுத்தும் சட்டங்களையும் நிறைவேற்றலாம். ஆனால் மற்ற கிழக்கு ஆப்பிரிக்க அதிகாரிகளை போலவே ஃபேபியன் கியூல் முலியும் சவுதி அரேபியாவுக்கு பெண்களை அனுப்பும் ஒரு பணியாளர் நிறுவனத்தை வைத்திருக்கிறார். அதனால் அவரிடம் இருந்தும் எந்த நடவடிக்கைகளையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட பணிப்பெண் சீருடையில் நான்கு உகாண்டா பெண்கள் சவுதி அரேபியாவில் ஆறு மாதங்களாக தடுக்க வைக்கப்பட்டுள்ளதாக ஒரு உதவி குழுவிற்கு வீடியோ மூலம் வேண்டுகோள் அனுப்பினர். பெண்களின் அவல நிலையை பற்றி அந்நாட்டு அரசு கண்கூடாக பார்த்துக் கொண்டு தான் உள்ளன. ஆனால், அந்நாட்டு அரசே நினைத்தாலும் அப்பெண்களை காப்பாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று.
காரணம், கென்யாவும் உகாண்டாவும் பல ஆண்டுகளாக பொருளாதார சரிவில் ஆழமாக உள்ளன. மேலும் இது போன்ற வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்படும் பணம் மட்டுமே இவர்களுக்கு குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாக உள்ளது. அதனால், பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகளை கென்ய அரசு ஏற்க மறுக்கின்றன. இவைகளை கருத்தில் கொண்டு சவுதி அரசு வீட்டு பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அபராதம் விதித்துள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆட்களை கென்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து அந்நாட்டு அரசாங்கமே மீண்டும் வேலைக்கு அனுப்புகின்றனர். இன்று வரை சவுதி அரேபியாவில் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் நீதி கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பத்திரிக்கைகள் இவர்களைப் பற்றிய செய்திகள் வெளியிட்டாலும், நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்று கென்ய மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.