மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் அடியே உள்ள இரண்டு டெக்டானிக் தகடுகள் பிரிக்கப்பட்டு உருவானது தான் இந்த 'டெட் சீ' (Dead Sea) என்று சொல்லக்கூடிய சாக்கடல். கடல் என்று சொல்வதனால் இது கடல் போன்று பறந்து விரிந்து காணக்கூடிய இடம் கிடையாது. இது மிக அதிகமான உப்பு தன்மை கொண்ட ஒரு ஏரி ஆகும். இது இஸ்ரேலில் உள்ள ஜார்டன் நகரில் காணப்படுகிறது.
சாக்கடல் என்று சொல்லக்கூடிய இந்த ஏரியின் நீர் 30 சதவீதம் உப்பு தன்மை கொண்டது. அதனால் இங்கு மீன்களைப் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் துளியும் இல்லை. இந்த சாக்கடலின் உப்புத்தன்மை சாதாரண கடலை விட 10 மடங்கு அதிகமானது. இந்த ஏரிக்கு அதிகப்படியான நீர் வரத்து ஜோர்டன் ஆறு மற்றும் நீரோடைகளின் வழியாக வந்தாலும் அந்த நன்னீரையும் சாக்கடல் கடுமையான உப்பு தன்மைக்கு மாற்றி விடுகிறது.
இந்த சாக்கடலின் ஆழம் சுமார் 423 மீட்டர், அதாவது 1388 அடி ஆழம் கொண்டது. இதன் நீளம் 67 கிலோ மீட்டர் மற்றும் அகலம் 18 கிலோமீட்டர். அவ்வளவு ஆழமான நீரிலும் நீச்சல் தெரியாதவர்கள் கூட நம்பி குதிக்கலாம். இந்த கடலில் சிலர் ரிலாக்ஸ் ஆக மிதந்து கொண்டு செய்தித்தாள் படிப்பதை உங்களால் பார்க்க முடியும். ஏனெனில் இந்த நீரின் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ள காரணத்தினாலேயே மனிதர்கள் இதன் மேல் மூழ்காமல் அப்படியே மிதக்கிறார்கள்.
இந்த சாக்கடலினால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் ஹாயாக நீச்சல் அடிக்க வாயை திறந்தபடி உள்ளே குதித்தால், அதுவே நீங்கள் உயிரோடு இருக்கும் கடைசி நொடியாக மாறிவிடும். ஏனெனில், சாக்கடலின் நீரை விழுங்கிவிட்டால் அது நுரையீரல் இயக்கத்தை நிறுத்திவிடும். அப்படி சில ஆர்வக்கோளாறுகள் கடலில் குதித்து நீரை பருகியதால் இறந்து போன சம்பவமும் நடந்துள்ளது.
இவ்வளவு ஆபத்தான சாக்கடலில் குளிக்க அதிக செலவு செய்து பிற நாடுகளில் இருந்தும் கூட ஏன் இங்கு செல்கிறார்கள் தெரியுமா? இந்த சாக்கடல் ஆபத்துகளைத் தாண்டி அதிகப்படியான மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் இருக்கும் தாதுக்கள் சொறி, படை மற்றும் பிற தோல் வியாதிகளுக்கு சிறந்த மருத்துவத்தை அளிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக இந்த சாக்கடலின் மண் பயன்படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாக்கடலின் மண் பழங்காலங்களில் இருந்தே முகப்பருக்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த சாக்கடலின் நீரை எடுத்துக்கொண்டு இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மூடிவிட்டால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அந்த மனித உடல் பாதுகாக்கப்படும் என்று ஆய்வில் கூறுகிறார்கள். மேலும் பழங்காலங்களில் இந்த சாக்கடலின் நீரை பயன்படுத்தித்தான் மம்மிகள் பதப்படுத்தப்பட்டன.
பல அம்சங்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட அந்த ஏரியிலும் நம் இந்திய தேசத்தை போன்று கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் சேர்ந்து கொண்டு தான் வருகின்றது. அதனாலேயே இன்னும் பல வருடங்களில் சாக்கடல் அதன் சிறப்பம்சத்தை இலக்க நேரிடலாம்.