பண்டைய காலகட்டங்களில் வாழ்ந்த அரசர்கள் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தார்கள் என்பதை கதைகளின் மூலமாகத் தான் தெரிந்திருப்போம். ஆனால் அது உண்மையா பொய்யா என்பது யாருக்கும் தெரியாது. அவ்வப்போது நடக்கும் அகழ்வாய்வுகளின் கண்டுபிடிப்புகள் மூலம் அவர்கள் எப்படிப்பட்ட பொருளாதார வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள் என்பதை கணிக்கிறோம்.
பூமியை தோண்டினால் தண்ணீர் வரும். ஆனால் தங்கக் காசுகளும் தங்க ஆபரணங்களும் கிடைத்தால் சும்மா விடுவோமா? 1972 ஆம் ஆண்டு பல்கேரியாவில் 'வர்ணா' என்ற இடத்தில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தபோது அடித்தளம் போடுவதற்காக நிலத்தை தோண்டினர். அப்போது, நிலத்திற்கு அடியிலிருந்து சில தங்கக் காசுகளை கண்டெடுத்தனர். தங்கக்காசுகளை கண்ட ஆர்வத்தில் மேலும் தோண்ட தோண்ட விலைமதிப்பற்ற பொருட்களை கண்டெடுத்தனர். ஆனால் அவை அனைத்தும் எலும்புக்கூடுகளுடன் ஒன்றிணைந்து இருந்தது. பிறகு தான் அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை புதைத்த சுடுகாடு என்பது தெரியவந்தது.
தோண்ட தோண்ட பலவகையான தங்கத்தால் ஆன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டு மிரண்டு போயினர். அவ்விடத்தை ஆய்வு செய்ததில் மொத்தம் 294 மம்மிக்கள் தோண்டி எடுக்கப்பட்டன, அதில் சுமார் 3000 தங்க பொருட்கள் பலவகையில் இருந்தன. தங்கத்தால் ஆன ஆபரணங்கள், கலைப் பொருட்கள், தங்க காசுகள், பெல்ட்டுகள், கிரீடம், தங்கத்தால் ஆன கோடாரி என பலவகை தங்க பொருட்கள் இருந்தன. சில கல்லறைகளில் எலும்பு கூடுகள் இல்லாமல் வெறும் தங்கப்பொருட்கள் மட்டுமே இருந்தது.
294 கல்லறைகளில் நாற்பத்தி மூன்றாம் கல்லறை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில் அது பழங்காலத்தில் ஆட்சி செய்த ஒரு அரசராக இருக்கலாம் என்று கூறுகின்றனர். காரணம், அவ்விடத்தில் மட்டும் கிரீடத்துடன் சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட அணிகலன்கள் ஏராளம். இவ்வளவு விலைமதிப்புள்ள ஆபரணங்களை பழங்காலத்தில் சாதாரண மக்களால் பயன்படுத்தி இருக்க முடியாது என்பதனால் அக்கல்லறை அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களுடையது என்பதை கணித்தனர்.
இந்த மம்மியின் உயரம் ஐந்து அடி 6 முதல் 8 அங்குலம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த அரசர் 40 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்பதையும் உறுதி செய்தனர். இந்த கல்லரையில் இருந்து மட்டும் 6.5 கிலோ எடை உள்ள தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் தெரிய வருவது கருங்கடலுக்கு அருகே வாழ்ந்து வந்த வர்ணா மக்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்துள்ளனர். மேலும் இங்கிருந்து உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு அதற்கு பதிலாக விலைமதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருக்கலாம்.
இந்த தங்க பொக்கிஷங்கள் உலகின் மிக பழமையான தங்கத்தில் ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரேடியோ கார்பன் டேட்டிங் என்ற முறையில் ஆய்வு செய்தபோது இவை 4000 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது.
பல்கேரியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் இது போன்ற தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் வர்ணா பகுதியில் முழுமையான அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் அனைத்தும் 'வர்ணா தொல்லியல் அருங்காட்சியகத்தில்' பாதுகாக்கப்பட்டு வருகின்றன.