மரங்களுக்கு மற்ற உயிரினங்களைப் போலவே உயிர் உள்ளது என்பதை கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ். மரங்கள் தனது சுற்றுச்சூழலை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதாகவும், மரங்களின் அசைவுகள் பற்றியும் முதன் முதலில் கண்டுபிடித்தவர். அவரைப் பின்பற்றி மற்ற விஞ்ஞானிகள் மரங்களின் தனித்துவத்தை பற்றி பல்வேறு வகையில் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்காவில் உள்ள 'அகாசியா' மரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் கண்டிப்பாக வியந்து போவீர்கள்.
மரங்கள் தனது வேர்களின் மூலம் மற்ற மரங்களுக்கு நீர் சத்தை இழுத்து தருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அகாசியா மரம் மற்ற மரங்களைப் போன்று இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது என்றால் நம்ப முடியுமா?
ஆப்பிரிக்காவில் அகாசியா மர ரகங்கள் தனது சிறிய வேர்களின் மூலம் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்கிறது. முக்கியமாக ஒட்டகச்சிவிங்கிகள் தனது இலைகளை சாப்பிட நேர்ந்தால், 'தனின்' என்ற ஒருவகை ரசாயனத்தை வாசனையாக வெளியிடுகிறது. 'ஒட்டகங்கள் வந்துவிட்டன, விஷங்களை வெளியிடுங்கள்' என்பது போன்ற சிக்னலை அனுப்புகிறது. உடனே மற்ற அகாசியா மரங்கள் சிக்னலை பெற்றுக் கொண்டு விஷச் சத்துள்ள இரசாயனத்தை வெளியிட்டு தன்னை முன்னதாகவே பாதுகாத்துக் கொள்கிறது. இலைகள் விஷங்களால் நிறைந்த பிறகு, 'எதிலின்' என்ற வாயு வெளியாகிறது. அந்த இலைகளை ஒட்டகங்கள் பெரிதளவில் சாப்பிட்டால் இறந்து போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இந்த வகை மரங்கள் முழுக்க நீளமான மற்றும் கூர்மையான முட்களால் நிறைந்தவை. சில மரங்களின் முட்களில் கொடிய வகை எரும்புகள் உயிர்வாழும். இம்மரங்களில் காணப்படும் சிறு சிறு புற்றுகளே இவைகளின் வீடு. அவை ஏதாவது உயிரினங்கள் இம்மரத்தின் இலைகளை சாப்பிட நேர்ந்தால் உடனே புற்றிலிருந்து வெளிவந்து கடுமையாக தாக்கிவிடும். இம்மரங்களில் உள்ள பறவைகளின் கூடு பாதுகாக்கப்படவும் எறும்புகள் பெரிதும் உதவுகிறது.
அகாசியா மரத்தில் காணப்படும் எரும்பு புற்றுகளில் உள்ள துளைகள் மூலம், காற்றடிக்கும் போது விசில் சத்தம் உருவாகிறது. பல ஆராய்ச்சியாளர்களும் இதைக்கண்டு வியந்து போய் உள்ளனர். எறும்புகள் செய்யும் உதவிகளுக்கு மாறாக அகாசியாவின் இலை மகரந்த துளிகளை வெளியேற்றுகிறது. வேலை சுமைக்கு ஈடான சர்க்கரை உணவை அந்த மகரந்த துளிகள் மூலம் எறும்புகள் பெற்றுக் கொள்கிறது. அதுமட்டுமின்றி ஆப்பிரிக்க மக்கள் சில அகாசியா மரங்களின் பட்டைகள் மற்றும் இலைகளை தோல் நோய்கள் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறார்கள்.
இந்த மரங்களின் சிறிய இலைகள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும். அதனால் 'சவானா' போன்ற கடும் வறட்சி நிறைந்த பாலைவனங்களில் கூட இம்மரங்கள் உயிர் பிழைத்துக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி அதன் வேர்கள் மிகவும் ஆழமாக சென்று நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்கிறது.
நமீபியாவில் உள்ள டெட்வ்லீ என்ற இடத்தில் 800 ஆண்டுகள் பழமையான இறந்த அகாசியா மரங்கள் உள்ளன. பாலைவனத்தில் காலநிலை மிகவும் வறட்சியானதால் மரங்கள் சிதைந்து போக முடியாமல் இன்னும் நிற்கின்றன. இம்மரங்களே அவ்விடத்திற்கு முத்திரையாக அமைந்துள்ளது. சொல்லப்போனால் சூர்யா நடித்த 'அயன்' திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் கூட இங்கு தான் எடுக்கப்பட்டது. பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த இறந்த மரங்களின் அழகை ரசிப்பதற்காக வருகின்றனர்.