சீனாவில் 20 வயதுடைய இளம் பெண் தனது வாழ்நாளில் 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இந்த செய்தியை படித்தவுடன், "அட, சரியாதான் படிச்சோமா? 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரியா?" என்று வாயை பிளக்கும்படியான ஒரு செய்தியாக தோன்றலாம்.
சீனாவைச் சேர்ந்த அபி வூ என்ற இளம் பெண் தனது 14 வயதில் ஆரம்பித்து 100க்கும் மேற்பட்ட அழகுசார் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். சாதாரணமாக பெண்கள் என்றாலே தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள பல விஷயங்களை செய்வது வழக்கம். அது கிராமப்புற பெண்களாக இருந்தாலும் சரி, நகரப்புற பெண்களாக இருந்தாலும் புருவத்தை திரட்டிங் செய்வது முதல் சுயமாக மேக்கப் போட்டுக்கொள்ள பழகுவது வரை தன் அழகை மெருகேற்ற எல்லாவற்றையும் செய்கின்றனர்.
அபி வூ ஆரம்பத்திலேயே முக அழகை மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. 14 வயதில் தனது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட போது 42 ஆக இருந்த உடல் எடை 62 ஆக அதிகரித்தது. உடல் எடை அதிகரித்ததால் அபி வூ பள்ளியில் நடைபெறும் நாடக கலை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது. அதனால், அவளது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடம்பில் உள்ள கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
பக்கபலமாக இருந்த அபி வூவின் தாயார் சிகிச்சைக்கு செல்லும் முன்,"நீ தைரியமா உள்ளே போயிட்டு வா. நீ வெளிய வரும்போது அழகா மாறிடுவ" என்று ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் அபிக்கு முழுமையான மயக்க மருந்து செலுத்தவில்லை. அதனால் சிகிச்சையின் போது தனது உடம்பில் இருந்து கொழுப்புகளை அகற்றுவதை கண்கூடாக பார்த்துள்ளார்.
இது குறித்து அபி வு கூறியது, "சிகிச்சையின் போது பல தவறுகள் ஏற்பட்டிருந்தாலும் என் அழகை மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் நான் தெளிவாக இருந்தேன். என் முகத்தில் சிறிய குறைபாடு இருந்தாலும் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. 100 முறை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும், என் அழகை மெருகேற்றுவதற்கான முயற்சியை எப்போதும் நான் நிறுத்தப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.
இதுவரை இந்திய மதிப்புப்படி கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வரை சிகிச்சைக்காக செலவு செய்துள்ளார் அபி வு. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் பராமரிப்புக்காக சில செய்முறைகளையும் கடைபிடிக்க வேண்டி உள்ளனவாம். இளம்பெண்களுக்கு அபி வு அறிவுறுத்துவது என்னவென்றால் இது போன்ற சிகிச்சை முறைகளில் நிறைய ஆபத்துகளும் உள்ளடங்கி உள்ளன என்று எச்சரித்துள்ளார். ஏனெனில் அபி வுவை போன்று அனைவருக்கும் சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அறுவை சிகிச்சை நினைத்தபடி கை கொடுப்பதில்லை. சிகிச்சை மேற்கொண்ட இடங்களில் தோல் செத்துப் போவது, முகம் கொடூரமாக மாறிவிடுவது என பல பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவில் மட்டுமே வருடத்திற்கு 20 மில்லியன் மக்கள் அழகு சார் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் இளம் பெண்களே அதிகம். 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் இடங்கள் உரிமம் இல்லாமல் அழகு சாதன நடைமுறைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.