இந்த உலகம் முழுவதுமே மிக அற்புதமான இயற்கை அம்சங்களால் நிறைந்தது. அது மனிதர்கள் கட்டமைக்கப்பட்ட கட்டிடங்களாக இருக்கட்டும், இயற்கை நிகழ்த்தும் ஆச்சரியங்களாக இருக்கட்டும், அனைத்துமே நம்மை வியக்க வைக்கிறது. அந்த பட்டியலில் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு அதிசயமான நிலப்பகுதி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பல அற்புதமான இடங்கள் இருந்தாலும், லோச்சியல் என்னும் இடத்தில் 'பும்புங்கா' என்ற உப்பு ஏரி உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கார் விளம்பரம் ஒன்றில் இந்த பிங்க் ஏரியில் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசுவது போல் இடம்பெற்றிருக்கும். அந்த விளம்பரத்திற்கு எந்தவித சிறப்பு எஃபெக்ட்டுகளும் தேவைப்படவில்லை. இயற்கையாகவே அந்த ஏரி பிங்க் நிறத்தில் காட்சியளித்ததால், விளம்பர வீடியோவை பார்க்கவே கண் கவரும் படி இருந்தது.
மேலும் பல விளம்பரங்கள் இந்த ஏரியில் வைத்து தான் எடுத்துள்ளனர். சமீபத்தில் கொரிய பாடல் ஒன்றிற்கு இங்கு தான் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த ஏரியை பற்றி தொலைக்காட்சிகளில் விளம்பரமாகவோ, பாடலாகவோ ஒளிபரப்பாகும் போது அதிக மக்கள் இந்த இடத்திற்கு பயணம் செய்து பிங்க் நிற ஏரியை பார்த்து ரசிக்கின்றனர்.
முதலில், இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் எப்படி பிங்க் நிறத்தில் இருக்கிறது? ஒருவேளை சாயக்கழிவுகளாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது ஒரு வகை இளஞ்சிவப்பு நிற பாக்டீரியாக்கள் (ஹலோ பாக்டீரியா என அழைக்கப்படுகிறது) வளர்வதன் காரணமாக இந்த ஏரி பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது. சூரிய வெளிச்சம் படும்போது பீட்டா கரோட்டின் என்ற சிவப்பு பிக்மென்ட்டை வெளியிடுகிறது. இந்த நீரின் நிறத்தைக் கொண்டு அழகு பொருட்களில் மற்றும் உணவில் சேர்க்கும் செயற்கை நிறமூட்டிகளாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அப்படி என்றால் எப்பொழுதுமே இந்த ஏரி பிங்க் நிறத்தில் இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். குறிப்பாக காலை நேரங்களில், சூரிய ஒளி படும்போது அதீத பிங்க் நிறத்தில் நீர் காணப்படும். ஆனால் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது. ஒருவேளை இந்த இடத்திற்கு சென்று இயற்கையின் அழகை ரசிக்க விரும்பினால் கோடை காலங்களில் செல்வது பொருத்தமாக இருக்கும். சில நேரங்களில் சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும் கூட இந்த ஏரியின் நீர் காட்சியளிக்கிறது.
பும்புங்கா ஏரி மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் இருக்கும் சில ஏரிகளிலும் கூட தண்ணீர் பிங்க் நிறத்தில் தான் இருக்கின்றன. இதுபோன்ற விசித்திரமான ஏரியை பார்ப்பவர்களுக்கு இங்கு உயிரினங்கள் வாழ்கின்றதா என்ற கேள்வி எழும். இந்த ஏரியில் நுண்ணுயிர்களை தவிர எந்த உயிரினமும் வாழ்வதில்லை. காரணம், நீரில் இருக்கும் அதீத உப்புத் தன்மையால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் சிறிதளவும் இல்லை.
இது போன்ற ஏரியைக் கண்டால் உடனே குதித்து அதனை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. பிங்க் ஏரியில் குளிப்பது ஆபத்தானது அல்ல. ஆனால் பிங்க் ஏரியின் தண்ணீரை விழுங்கினால், நீரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் உங்களது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இருந்தும், இதன் உப்பை சிறிதளவில் பேக்கிங் செய்ய பயன்படுத்துவதன் மூலம் அதன் ருசி கூடுகிறது என்று அதனை பயன்படுத்தும் மக்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற பிங்க் நிற ஏரிகள் ஆஸ்ட்ரேலியாவில் மட்டுமல்ல, மொத்தம் 22 நாடுகளில் காணப்படுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு நீங்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இந்த ஏரியை ஒருமுறையாவது சென்று ரசித்து விட்டு வாருங்கள்.