அமெரிக்காவில் உள்ள 'பைக்ஸ் வைல்' என்ற ஒரு சிறு நகரத்தில் வசித்து வந்தவர் ஜேம்ஸ் ஹேச்சர். இவர் மிகவும் பிரபலமான தொழிலதிபர். சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பது மற்றும் மர வியாபாரம் செய்வதுதான் இவருடைய தொழில். ஜேம்ஸ் தொழிலில் முன்னேறி அவர் வசிக்கும் நகரத்தில் 'ஜேம்ஸ் ஹேச்சர்' என்று அவரது பெயரையே வைத்து ஒரு பெரிய ஹோட்டலையும் கட்டினார். ஹோட்டல் லாபியின் சுவர்களில் அவருக்கு விருப்பப்பட்ட சொற்கள் அச்சிடப்பட்டிருந்தது. எந்த விதத்திலும் ஹோட்டல் தீப்பிடிக்காத வகையில் மற்றும் 'பாதுகாப்பாக தூங்க முடியும்' என்ற பாதுகாப்பையும் கொடுத்தது.
கேட்பதற்கு மிகவும் புத்திசாலியான நபர் என்ற தோன்றுகிறது அல்லவா? ஆனால், ஜேம்ஸ்க்கு அடிக்கடி தான் சவப்பெட்டியில் உயிரோடு அடைத்து வைத்தபடி சாகப்போவதாக தோன்றி கொண்டே இருக்கும். அதனால் அவரே ஒரு ஸ்பெஷலான சவப்பெட்டி ஒன்றை தயார் செய்தார். இந்த சவப்பெட்டியின் உள்ளே தாழ்ப்பாள் பொருத்தப்பட்டு, எளிதாக திறந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. காரணம் இல்லாமல் இவருக்கு உயிரோடு புதைக்கும் படி எண்ணங்கள் ஏன் வருகிறது என்று அவருக்கே புரியவில்லை.
ஜேம்ஸ்க்கு பணம் விஷயத்தில் எப்போதுமே கவலை என்பது கிடையாது. கல்யாணம் மட்டுமே அவரது வாழ்க்கையில் பூர்த்தியடையாத ஒன்றாக இருந்தது. ஜேம்ஸ் ஒரு பெண்ணை ஆசையோடு காதலித்து வந்தார். அவளது பெயர் ஆக்டேவியா. இங்குதான் கதை ஆரம்பிக்கிறது. 1889-இல் ஆக்டேவியா மற்றும் ஜேம்ஸ் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷமும் குதூகலமும் ஆக இருந்த அவர்களது வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அடிமேல் அடி விழுந்தது. இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தை சில நாட்களிலேயே இறந்து விட்டது. இந்த சம்பவம் அவர்களது வாழ்க்கையையே புரட்டி போட்டது.
இறந்து போன குழந்தையை நினைத்து ஆக்டேவியா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானாள். நாட்கள் சென்றன, ஆனால் ஆக்டேவியாவால் குழந்தை இறந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. சில மாதங்களிலேயே அவளும் நோய் வாய்ப்பட்டு,கோமாவிற்கு சென்றாள்.
கோமாவில் இருந்து திரும்பி வராத ஆக்டேவியா திடீரென்று உயிரிழந்தார். இறந்ததற்கான காரணம் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆக்டேவியாவை அப்படியே சவப்பெட்டியில் வைத்து புதைத்தனர். மனைவி இறந்த துயரம் தாங்காமல் ஆக்டேவியாவின் கணவர் ஜேம்ஸ் அழுது புலம்பினார்.
நாட்கள் செல்லச் செல்ல பைக் வைல் நகரத்தில் ஆக்டேவியாவை போன்றே பலரும் கோமாவிற்கு சென்று சில நாட்களில் உயிரிழக்கப்பட்டனர். இப்போதுதான் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. தீவிரமாக ஆராய்ச்சி செய்து மருத்துவர்கள் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கண்டுபிடித்தனர்.
இறந்து போன அனைவருமே 'டெட்சி' என்ற ஒரு விஷப்பூச்சி கடித்து பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்தது. இந்த டெட்சி பூச்சி 'ஈ' போன்ற சிறிய உருவம் கொண்டது. இந்த பூச்சி கடித்த அனைவருக்கும் ஒரு விதமான தூக்க நோயை கொண்டு வந்தது. ஆனால் சில நாட்களில் அவர்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். பைக்ஸ் வைல் நகர மக்களுக்கு இது பேரதிர்ச்சியை கொடுத்தது. இது உண்மை என்றால் சுமார் ஆயிரம் உடல்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் என்ற செய்தி தீயாய் பரவியது.
இந்த செய்தியை கேட்ட நமது ஜேம்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அப்படி என்றால் என் மனைவியும் இதேபோன்று பாதிக்கப்பட்டிருப்பார் அல்லவா என்று கதறினார். உடனே ஆக்டேவியாவை புதைத்த இடத்திற்குச் சென்று உடலை தோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜேம்ஸ். ஆக்டேவியாவை பார்க்க நின்று கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
சவப்பெட்டியை திறந்தவுடன் ஆக்டேவியா இறந்து கிடந்தார். ஆனால் சவப்பெட்டியின் மூடி அவளுடைய நகங்களால் முழுமையாக கீறப்பட்டு, ரத்தக்கறையோடு காட்சி அளித்தது. ஆக்டேவியாவின் நகங்கள் முழுவதும் உடைந்து போய் இருந்தன. இதைக் கண்ட ஜேம்ஸ்க்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆக்டேவியா கோமாவில் இருந்து எழுந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருப்பது தெரிய வந்தது. என் மனைவியை நானே உயிருடன் புதைத்து கொன்றுவிட்டேனா என்று அழத் தொடங்கினார். ஆக்டேவியாவின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.
ஆக்டேவியா புதைக்கப்பட்ட அதே இடத்தில் ஜேம்ஸ் தனது மனைவிக்காக சிலை ஒன்றினை வைத்தார். அதில் ஆக்டேவியா தனது கையில் குழந்தையோடு இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரது ஹேட்சர் ஹோட்டலில் இருந்து பார்த்தால் மனைவியின் சிலை தெரியும்படி பொருத்தப்பட்டது. அந்த சிலை வைக்கப்பட்ட பின் அவ்வப்போது சில அமானுஷ்யங்களும் நடந்தன. சிலர் பூனையின் சத்தம் கேட்பதாகவும், வேறு சிலர் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்பதாகவும் கூறுவது வழக்கம்.
வழக்கமாக ஆக்டேவியா புதைக்கப்பட்ட நினைவு நாளில் ஒவ்வொரு வருடமும் அந்த சிலை வேறு திசையில் திரும்பி நிற்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அமானுஷ்ய நிகழ்விற்கு பிறகு அந்த இடத்தை சுற்றியும் வேலிகள் அமைக்கப்பட்டன. இன்றும் பைக்ஸ் வைல் நகரத்தில் ஆக்டேவியாவின் பெயர் மக்களால் பேசப்பட்டு வருகிறது.