உங்களால் சுமார் ஒரு வருட காலம் மனிதத் தொடர்பு இல்லாமல் ஒரு காட்டிற்குள் வாழ முடியுமா? அதுவும் அடர்ந்த காட்டின் நிலத்தடியில் முறையான உணவு மற்றும் ஆடை இல்லாமல், எந்தவித மனிதர்களோடும் தொடர்பு இல்லாமல் 28 ஆண்டுகள் தனியாக வாழ்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
சோயிச்சி யோகோய் என்ற ஜப்பானிய ராணுவ வீரர் ஒருவர் இரண்டாம் உலகப்போர் முடியவில்லை என்று நினைத்து 28 வருடங்கள் 'குவாம்' என்ற காட்டிற்குள், நிலத்தடியில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். சோயிச்சி யோகோய் (1915-1997) இம்பீரியல் ஜப்பானிய இராணுவத்தில் ஒரு சார்ஜென்ட் ஆக பணிபுரிந்து வந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது (டிசம்பர் 1941-ஜூலை 1944) அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக போர் புரிய குவாமில் நிறுத்தப்பட்டார்.
போரில் வெற்றி அடைய போவதில்லை என தெரிந்து, எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலத்தடியில் ஒளிந்து கொண்டார். எதிரிகளிடம் சரணடைவதைவிட மறைந்து கொள்வதே மேல் என்று நினைத்து, சுமார் 29 வருடங்களாக நிலத்தடியில் குகை போன்று அமைத்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் சோயிச்சி.

குவாம் காட்டில் கிடைக்கும் பழங்கள், கொட்டைகள், மீன், தவளை போன்றவை மட்டுமே அவருக்கு உணவு. இரண்டாம் உலகப் போர் மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் மறைந்து வாழும் சோயிச்சி யோகோய்க்கு போர் முடிந்து அமெரிக்காவிடம் ஜப்பான் தோற்றுவிட்டது என தெரிந்ததும், அமெரிக்காவிடம் சரணடைய முன் வராமல் மறைந்து வாழ முடிவெடுத்து விட்டார்.
1972 ஆம் ஆண்டு, சோயிச்சி ஒரு நாள் மீன் பிடிக்க சென்றபோது அங்கு வந்த இரண்டு மீன்பிடி வீரர்களோடு வலையில் சிக்கிய மீனுக்காக சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது சோயிச்சி அணிந்திருந்த மிகப் பழமையான மற்றும் ஆங்காங்கே கிழிந்த உடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த இரண்டு நபர்களும் அவரை மீட்டு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிறகு சோயிச்சி ஜப்பானிய ராணுவ வீரர் என்று தெரிந்ததும் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் குவாம் மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
தனது 56 வயதில் சோயிச்சி சொந்த நாடான ஜப்பானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் ஜப்பானுக்கு திரும்பியபோது அவரை வரவேற்க மேளதாளத்தோடு ஐந்தாயிரம் பேர் காத்துக் கொண்டிருந்தனர். தன்னை அனைவரும் பெருமையோடு வரவேற்பதை கண்டு சோயிச்சிக்கு ஆனந்த கண்ணீர் பொங்கி வழிந்தது.
துளியும் மனதில்லாமல் நாடு திரும்பிய சோயிச்சிக்கு வருத்தம் என்னவென்று தெரியுமா? ராணுவ பணியில் இருந்த போது அவருக்கு கொடுத்த கடைசி ஆர்டர் சரண் அடையாமல் இருப்பது மட்டுமே. ஆனால், தன்னால் அதை காப்பாற்ற முடியவில்லை என்று வருந்துவதாக கூறியுள்ளார். மேலும் தனது உயர் அதிகாரி கொடுத்த துப்பாக்கியையும் பத்திரமாக அரசாங்கத்திற்கு திருப்பி ஒப்படைத்து விட்டார்.
நாடு திரும்பிய சோயிச்சிக்கு 28 வருடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இணங்கி வாழ சிரமமாக இருந்தது. மேலும் அவர் இறப்பதற்கு முன்பு பலமுறை குவாமிற்கு சென்று வந்துள்ளார். என்னதான் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்தாலும், 28 வருடங்கள் வாழ்ந்த தனிமையான வாழ்க்கையை அவரால் எளிதில் மறக்க முடியவில்லை.
சோயிச்சி நாடு திரும்பிய இரண்டு வருடங்களுக்கு பிறகு இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்தது.
லெப்டினன்ட் ஹிரூ ஒனோடா, 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின்னர் பிலிப்பைன்ஸின் லுபாங் தீவில் கண்டுபிடிக்கப்பட்டார். சோயிச்சியைப் போலவே, சரணடைவதற்குப் பதிலாக மரணம் வரை போராடுவதை குறிக்கோளாக வைத்திருந்தார். அவரை மீட்பதற்காக மார்ச் 1974 அன்று அந்நாட்டு அதிகாரிகள் சென்றும் தீவை விட்டு வெளியேற மறுத்துள்ளார். அப்போது அவரது கமாண்டிங் அதிகாரி லுபாங்கிற்குச் சென்று அவரை கடமையிலிருந்து முறையாக விடுவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் மனதை நெகிழ வைத்தாலும், காட்டிற்குள் தனிமையில் வாழ்வதை நினைத்துப் பார்க்கும்போது நம்மை மிகவும் பிரமிப்படைய வைக்கிறது.