வியட்நாமில் இருக்கும் தேசிய பூங்காவில் அமைந்திருக்கும் 'சான் டூங்' குகை தான் உலகத்திலேயே இருக்கும் குகைகளில் பெரியது. 1990 ஆம் ஆண்டில் ஹோ கான் என்ற மனிதரால் இந்த 'ஹான் சான் டூங்' குகை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையோடு சேர்த்து இங்கு 400 க்கும் அதிகமான குகைகள் காணப்படுகின்றன. இந்த மிகப்பெரிய சான் டூங் குகை எப்படி உருவானது என்று கேட்டால் அதற்கு நாம் காலப்பயணம் செய்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல வேண்டும்.
சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஆழமற்ற கடல் தான் காணப்பட்டது. கடலில் பல வகையான மீன்கள் உட்பட தாவரங்கள், பவளப்பாறைகள் இருந்தன. அதன் பிறகு பூமியின் கண்டத் தட்டு நகர்வால் கடல் பின்வாங்க, இங்கிருந்த இறந்த உயிரினங்களும், தாவரங்களும், பவளப்பாறைகளும் காலப்போக்கில் சுண்ணாம்பு பாறைகளாக மாறியது. மில்லியன் கணக்கான வருடத்தில் சுண்ணாம்பு பாறைக்கு மேல் மண் அடுக்குகள் சேர்ந்து கொண்டே போயின. அதன் பிறகு பொழிந்த அமில மழையில் இருந்த கார்பன் டை ஆக்சைட் துளைகள் வழியாக பூமிக்கு அடியே இருந்த சுண்ணாம்பு பாறையை அடைந்து, அதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்தது. இதோடு சேர்ந்து நிலத்தடி ஆறுகளும் சுண்ணாம்புப் பாறையை கரைக்கச் செய்ததால் இந்த மாதிரியான மிகப்பெரிய குகைகள் அதிக எண்ணிக்கையில் உருவானது.
சான் டூங் குகையின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர். இதன் உயரம் 200 மீட்டர் மற்றும் அகலம் 150 மீட்டர் ஆகும். இது இவ்வளவு பெரிய குகையாக காணப்படுவதற்கு செங்குத்தான நிலப்பரப்பு, அதிக மழை பொழிவு மற்றும் இப்பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல்லின் தரம் போன்றவையே காரணம்.
சான் டூங் குகை பல ஆண்டுகளாக வெளி உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருந்தது. 1990-ஆம் ஆண்டு உள்ளூர் விவசாயி "ஹோ கான்" என்பவர் வாசனை திரவ பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 'அகர்' மரத்தை தேடி வனப் பகுதிக்குள் சென்றபோது குகையின் நுழைவு வாயிலை கண்டுபிடித்தார். அதன் பிறகு அவரது உதவியுடன் 2009 ஆம் ஆண்டில் இங்கிலாந்து குகை நிபுணரின் குழு உதவியால் இந்த குகை ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு சான் டூங் குகை உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக குகையை கண்டுபிடித்தவர்கள் தான் அதற்கு பெயரிடுவார்கள். சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கு அடியில் ஓடிய ஆறால் இந்த குகை உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இந்த குகைக்கு "மலை ஆறு" என்று பொருள்படும் விதமாக வியட்நாம் மொழியில் சான் டூங் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை குகையின் இறுதி வரை எந்த ஆய்வாளரும் சென்றதில்லையாம். தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதற்கு கடினமாக இருப்பதாலும், நம்ப முடியாத அளவுக்கு ஆழமாக இருப்பதாலும் பாதியிலேயே ஆராய்ச்சிகள் கைவிடப்பட்டது. வரும் காலத்தில் தொழில் நுட்ப உதவியுடன் குகையை முழுமையாக ஆராய்ந்து முடிப்போம் என்று குகை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குகையில் மட்டுமே காணப்படும் சிற்பம்சங்கள் என்னவென்று தெரியுமா? இந்த அகலமான குகையின் பாதை ஒரு பெரிய விமானமே பறக்கும் அளவுக்கு பெரியது. குகையின் உள்ளே காடுகள், புல்வெளிகள், ஆறுகள், மணல் பரப்பு, பல்லுயிரினங்கள் என அனைத்தும் உள்ளன. இங்கு மிக நீளமான நிலத்தடி நதியை காண முடியும். குகையின் உடைந்த மேற்குறையின் வழியாக உள்ளே பார்த்தால் காடுகள் அடர்ந்த சோலைவனம் போல் காட்சியளிக்கிறது.
மேலும் அரிய வகை உயிரினங்கள்-புதிய வகை மீன்கள், சிலந்திகள், தேள்கள், இறால்கள் மற்றும் சில வகை பூச்சிகளையும் காண முடியும். ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள், குகையினுள் இருக்கும் மூடுபனி, பார்ப்பதற்கு நீங்கள் வேறு உலகில் இருப்பது போன்ற அனுபவத்தை அள்ளித் தரும். இந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் எத்தனை முறை ஆய்வு செய்தாலும் மனிதர்களின் காலடித்தடம் ஒன்று கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். 2013ஆம் ஆண்டில் இந்த குகை திறக்கப்பட்டாலும் வனத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேர் மட்டுமே சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த குகையை சுற்றி பார்க்க எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியுமா? சாதாரண பயணங்களை விட சுவாரசியம் நிறைந்த பயணத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனால், சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லும் Oxalis Adventure என்ற நிறுவனம் நான்கு நாட்கள் சுற்றுப்பயணத்திற்காக இரண்டு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறது. ஏனெனில், இது போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு குகையை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது அல்லவா.
இந்த குகையில் பயணிக்கும் போது நிலத்தடி ஆறுகளை கடந்து பிரம்மாண்டமான குகையின் கூரை இடைபாடுகளை பார்வையிட்டு, மழைக்காடுகள் வழியாகச் சென்று உலகின் மிக அற்புதமான முகாம்களில் உறங்கலாம் என்பதால் இந்த குகை த்ரில் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு சிறந்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
இப்பயணத்தில் 17 கிலோ மீட்டர் மலையேற்றம் முடிந்த பிறகு, 8 கிலோமீட்டர் குகையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சான் டூத் குகைக்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த த்ரில் அனுபவம் மிக்க குகைக்கு ஒரு முறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கிறது.