அமேசான் காடுகள் ஆச்சரியத்தை விட ஆபத்து நிறைந்தது. மர்மங்கள் நிறைந்த இந்த காடுகளுக்குள் சென்று விட்டால் எளிதில் மீண்டு வர முடியாது. ஏனெனில் பலவிதமான விஷ பூச்சிகளும், முட்கள் நிறைந்த மரங்களும், அபூர்வமான விலங்குகளும் நம் உயிருக்கே பேராபத்தை விளைவிக்கும். அந்த வகையில் அமேசான் காட்டில் உள்ள ஒரு ஆறு 365 நாட்களும் கொதித்துக் கொண்டே இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஷனாய்-டிம்பிஷ்கா என்று பழங்குடியினரால் அழைக்கப்படும் இந்த நதியை உள்ளூர் வாசிகள் புனிதமாக கருதுகின்றனர். மேலும் இந்த கொதிக்கும் நதிக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது என்றும் நம்புகின்றனர். உள்ளூர் வாசிகள் இந்த நீரை பயன்படுத்தித்தான் சமைப்பது, தேனீர் வைத்து குடிப்பது போன்றவற்றை செய்வர்.
சுமார் 120 டிகிரி முதல் 200 டிகிரி ஃபாரன்ஹீட் வரை நீரின் வெப்பநிலை உயரும். காட்டிற்குள் பயணம் செய்பவர்கள் யாராவது இந்த கொதிக்கும் நதியை பற்றி தெரியாமல் 'ஒரு குளியலை போட்டு வருகிறேன்' என்று ஆர்வக்கோளாறில் குதித்து விட்டால் சில நிமிடங்களில் பரலோகத்திற்கு நேரடியாக சென்றுவிட நேரிடும்.
ஆன்ட்ரஸ் ருசோ என்ற நபர் சிறுவயதில் கொதிக்கும் நதி பற்றி தனது தாத்தா சொன்ன கதையை கேட்டுள்ளார். அமேசானில் ஒரு ஆறு உள்ளது; அந்த ஆறு நெருப்பு போன்று கொதிக்கும் தன்மை உடையது என்று ருசோவின் தாத்தா கூறியிருந்தார். இதைக் கேட்ட ருசோவிற்கு அந்த நதியை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தது.
12 வருடங்கள் கழித்து முறையாக பட்டம் பெற்று புவி இயற்பியலாளர் ஆனார் ருசோ. 'பெரு' நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டின் கொதிக்கும் நதியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நவம்பர் 2011-இல் தனியாக மத்திய பெருவிற்கு நான்கு மணிநேர பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக கொதிக்கும் நதியை கண்டுபிடித்தார். ருசோவின் தாத்தா சிறு வயதில் சொன்னதைப் போலவே அந்த நதி காட்சியளித்தது.
மேலும் நதியை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார் ருசோ. அந்த நதியில் தவறி விழும் அனைத்து விலங்குகளும் செத்து மிதந்தன. நதியின் வெப்பநிலை 80 முதல் 200 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தது. அதனால் ஆற்றங்கரையின் ஓரத்தில் கூட நடக்க முடியாத அளவுக்கு சூடாக இருந்ததை ருசோ கவனித்தார். அந்தக் கொதிக்கும் நதியிலிருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஒரு எரிமலை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்த நீரின் வெப்ப நிலை சாதாரணமாக 86 டிகிரி செல்சியஸாக இருப்பது ருசோவை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த கொதிக்கும் நதியின் நீர் சூரியனின் வெப்பத்தால் சூடாகவில்லை. ருசோவின் ஆராய்ச்சிப்படி நில பிளவுகளால் உண்டாகும் வெப்பத்தால் சூடான தண்ணீர் வருவதாக கண்டறிந்தார். மேலும் மற்ற ஆய்வாளர்கள் இந்த கொதிக்கும் நதியை பற்றி வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். சிலர் புவி வெப்பமயமாவதால் ஏற்படும் விளைவுதான் கொதிக்கும் நதி என்றும் வேறு சிலர் இது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர்.
இன்னும் அமேசான் காடுகளில் இது போன்ற வினோதமான விஷயங்களை ஆய்வாளர்கள் மற்றும் அங்கு பயணிக்கும் மக்கள் கண்டுபிடித்து வந்தாலும் அக்காடுகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டவை வெறும் 10 சதவீதம் தான்.