அஜாக்ரதையாக காருக்குள் குழந்தையை விட்டு விட்டு காரை பூட்டிச் சென்ற பெற்றோரால் 3 வயது சிறுமி மூச்சு திணறி இறந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (மே 15-ம் திகதி). ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில், பிரதீப் நாகர் என்பவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அவருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்கள்.
திருமண மண்டபத்தின் பிரதான வாசலில் காரை நிறுத்திய பிரதீப், தான் பார்க்கிங் பகுதிக்கு சென்று காரை நிறுத்தி விட்டு வருவதாகவும், தன் குடும்பத்தினரை பிரதான வாசலில் இறங்கிக் கொள்ள சொல்லியுள்ளார். பிரதீப்-ன் மனைவி மற்றும் மூத்த மகள் இருவரும் காரை விட்டு இறங்கிய நிலையில் இரண்டாவது மகள், 3 வயது கோர்விகா வெளியே இறங்காமால் காரிலேயே இருந்துள்ளார். அதனை பிரதீப்-ன் மனைவி மற்றும் முதல் மகள் கவனிக்கவில்லை, அல்லது அவர்கள் கோர்விகா பிரதீப்புடன் சேர்ந்து வருவார் என நினைத்து விட்டிருக்கலாம்.
பிரதீப் தனது காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திய பொழுதும், மகள் கோர்விகா காருக்குள் இருப்பதை கவனிக்கவில்லை. பார்க்கிங்கில் காரை நிறுத்திய பிரதீப் கார் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பூட்டி லாக் செய்து விட்டு திருமண மண்டபத்திற்கு சென்று விட்டார்.
தன் மனைவி மற்றும் முதல் மகளுடன் சேர்ந்து 2 மணி நேரம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப், தனது நண்பர்கள் உறவினர்களுடன் நேரத்தை செல்வழித்ததால், மகள் கோர்விகா பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்படலாம் என முடிவெடுத்த போதுதான் பிரதீப் மற்றும் அவரது மனைவிக்கு மகள் கோர்விகா பற்றிய சிந்தனை வந்துள்ளது. மகள் கோர்விகா திருமண விழா கூட்டத்தில் எங்கேயே காணாமல் போயிருப்பாள் என நினைத்து திருமண மண்டபம் முழுதும் தேடத் தொடங்கினர். பிரதீப் மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து திருமண விழாவில் பங்கேற்ற மற்றவர்களும் குழந்தை கோர்விகாவை தேடியுள்ளனர். ஆனால், கோர்விகா திருமண மண்டபத்தில் எங்கும் இல்லை.
ஒரு சந்தேகத்தில், பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த தனது காருக்கு வந்து கதவை திறந்து உள்ளே பார்த்துள்ளார் பிரதீப். உள்ளே, சிறுமி கோர்விகா மூச்சு திணறி இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பிரதீப், வேகமாக மகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சையளிக்க முயன்றுள்ளார்.
ஆனால், 2 மணி நேரத்திற்கு மேலாக பூட்டப்பட்ட காருக்குள் தவித்த குழந்தை, மூச்சு திணறி எப்போதோ இறந்து போய் விட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலிசார் மருத்துவமனைக்கு சென்று பிரதீப் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்து குழந்தை கோர்விகா மூச்சு திணறி இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
மேலும், பிரதீப் குழந்தை இறந்தது குறித்து போலிஸாரிடம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், குழந்தை கோர்விகாவின் உடலை மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் பிரதீப் சம்மதிக்கவில்லை என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.