ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அரிதினும் அரிது. அதிலும் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்தால் எவ்வளவு அபூர்வமாக இருக்கும். இதேபோன்று ராஜஸ்தானில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் சாதாரண குழந்தைகளை போன்று இல்லாமல், பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா என்ற நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் (fraternal twins) பிறந்துள்ளது. அதாவது இரண்டு வெவ்வேறு கருமுட்டைகள் மூலம் தனித்தனி விந்தணுக்களால் கருவறும்போது உருவாகும் இரட்டை குழந்தைகள் fraternal இரட்டையர் என்று கூறப்படுகிறது.
ஆண் குழந்தையின் எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தையின் எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தோஷக் கடலில் ஆழ்ந்து இருந்தனர். ஆனால் அவர்களின் சந்தோஷமும் ஆச்சரியமும் சிறிது நேரத்திற்கு மட்டுமே நிலைத்திருந்தது.
குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் படி ஒரு விஷயத்தை கூறினர். இந்த குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே. ஏனென்றால் இது போன்ற பிலாஸ்டிக் தோலுடன் பிறப்பது ஒரு அரிய வகை நோய் என்று கூறினர். குழந்தைகளின் பெற்றோருக்கு தூக்கி வாரி போட்டது. இரண்டு குழந்தைகள் பிளாஸ்டிக் தோலுடன் பிறந்ததற்கு பதிலாக, ஒரு குழந்தை நன்றாக பிறந்திருக்கலாமே என்று நினைத்தனர்.
இது போன்ற பிளாஸ்டிக் தோலுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. இந்த தன்மையோடு பிறந்த குழந்தைகளை 'கொலாடியன் பேபி' என்றும் அழைக்கின்றனர். அதாவது பளபளப்பான பிளாஸ்டிக் மூலம் இறுக்கமாக மூடப்பட்ட குழந்தை என்று பொருள். ராஜஸ்தானில் இந்த வகை குழந்தைகள் பிறந்தது இதுவே முதல் முறை. இந்த இரட்டை குழந்தைகள் சில வருடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதிகபட்சம் 'வளரிளம்' பருவம்'(teenage) வரையில் மட்டுமே வாழ்வதற்கான சாத்தியம் உண்டு என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதேபோன்று 2023 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில், வெறும் 36 வாரங்களே ஆன ஒரு பிளாஸ்டிக் ஆண் குழந்தை பிறந்தது. அதன் சருமம் மிகவும் இறுக்கமாக, மெழுகு போல், பளபளப்பாக இருந்துள்ளது. அக்குழந்தைக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவி கொடுத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, 70 சதவீத ஈரப்பதத்துடன் ஒரு இன்குபேட்டரில் வைத்து அக்குழந்தை மருத்துவர்களால் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
நாட்கள் போகப்போக குழந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிய வந்தது.சில நாட்களில், கொலாடியன் தோல் சவ்வு உதிர ஆரம்பித்து, கண் இமைகள் மற்றும் உதடு மேம்பட்டது.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்ட குழந்தை, சாதாரண குழந்தைகளின் தோல் போலவே ஒரு சில வாரங்களில் மாற்றங்கள் தென்பட்டது.
இதுகுறித்து மருத்துவர் பாரிக் கூறியது, "இந்த கேஸ் ரொம்பவே சவாலானது. ஏனென்றால் குழந்தை வேறு மருத்துவமனையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டபோது தொற்றுநோயைப் பெற்றது, மேலும் சுவாசக் கோளாறு இருந்தது. இதற்கு தோல் மற்றும் ஈஎன்டி நிபுணர்களிடமிருந்து உதவி தேவைப்பட்டது. சரியான நேரத்தில் செயல்பட்டதன் மூலமும், எங்கள் குழு மீது பெற்றோரின் நம்பிக்கையின் மூலமும், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது."
நாம் என்னதான் அறிவியலிலும் மருத்துவத்திலும் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருந்தாலும், புதுப்புது நோய்களையும் கால சூழ்நிலைகளையும் தீர்மானிப்பது ஆண்டவன் ஒருவனே..அவனுக்கே வெளிச்சம்.