கடந்த சில வாரங்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே தலைப்பு சென்டினல் தீவில் கால் வைத்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டது தான். இந்திய பத்திரிகைகள் மட்டுமின்றி உலக செய்திகளிலும் இடம்பெற்று விட்டார் அமெரிக்காவைச் சேர்ந்த மைகாயிலோ விக்டோரோவிச். இவர் ஒரு யூட்யூபர். தனது சேனலில் சென்டினல் தீவிற்கு சென்று வீடியோ வெளியிட்டால் பார்வையாளர்கள் குவிவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு, ஹாயாக சிறு படகு ஒன்றில் சென்றுள்ளான்.
சென்டினல் தீவு எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் கூட கையில் கோகோ கோலாவுடன் அத்தீவு மக்களை சந்திக்கப் போகிறேன் என்று மொபைல் போனில் வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளான். ஆனால் அதிர்ஷ்டவசமாக பழங்குடியினர் யாரையும் மைகாயிலோவால் சந்திக்க முடியவில்லை. "ச்சே, என்னோட பேட் லக். இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தது வீணாக வேண்டாமே", என்று நினைத்து கையில் இருந்த டயட் கோக் மற்றும் இளநீரை அவர்கள் அருந்துவதற்காக கடற்கரை ஓரமாக விட்டுவிட்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி விட்டான்.
மைகாயிலோ திரும்பி வருவதை கண்ட படகு ஓட்டும் நபர் ஒருவர் உடனே அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டார். காவல் துறை அதிகாரிகள் மைகாயிலோ தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தி, அவனது செல்போனில் ரெக்கார்ட் செய்த வீடியோ அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பதிவு செய்த வீடியோக்கள் எதுவும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதுவே பழங்குடியினர்களின் கண்ணுக்கு தென்பட்டிருந்தால் உண்மையிலேயே பேட் லக் ஆகி பரலோகம் சென்றிருப்பான். அவனது அதிர்ஷ்டம் அரசு அதிகாரிகளே அவனை கைது செய்து பத்திரமாக ஜெயிலில் அடைத்து விட்டனர்.
சரி, இப்போது அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வி ஏன் இந்த தீவுக்குள் செல்லக்கூடாது? அரசு ஏன் இந்த தீவை மட்டும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது? பழங்குடியினரிடம் நாம் பழகினால் என்ன நடக்கும்? அவர்களுக்கு ஆபத்தா அல்லது நமக்கு ஆபத்தா? இப்பழங்குடியினர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டாலே அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.
சென்டினல் தீவு வரலாறு
சென்டினல் என்பது அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்குள்ள பழங்குடி மக்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரம் வருடமாக அங்கு வாழ்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெளி உலகோடு துளியும் தொடர்பு இல்லாமல் இன்னும் பழங்கால முறைப்படி மீன் பிடித்தும், பன்றிகள் வளர்த்து அதனை சமைத்து சாப்பிட்டும் உயிர்பிழைத்து வருகின்றனர். அவர்களுக்கு தெரிந்தவை எல்லாம் வேட்டையாடி உணவு சேகரிப்பது மட்டுமே. இன்னும் அங்கு விவசாயம் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாது.
இது போன்று வெளி உலகம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு, உடைகள் அணிந்து கொண்டும், கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டும் ஒரு மனிதன் தென்பட்டால் அவர்களுக்கு பார்க்க வேற்று கிரகவாசியாக தான் தோன்றும். எந்த நேரமும் கையில் அம்போடு சுற்றி திரியும் பழங்குடியினர் யோசிக்காமல் தாக்கி விடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட சென்டினல் தீவுக்கு செல்ல முயன்ற ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கூட மீட்க முடியவில்லை. இதனால் பல காரணங்களை அடிப்படையில் கொண்டு, மக்களின் பழக்கவழக்கத்தை பாதுகாக்கும் விதமாக சென்டினல் தீவை பாதுகாக்கப்பட்ட தீவாக அரசு அறிவித்துள்ளது.
சென்டினல் மக்களை ஏன் சந்திக்கக் கூடாது?
அத்தீவு மக்களின் உடம்பில் நம்மைப் போன்று தெற்று கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி இல்லை. கொரோனா போன்ற கொடிய நோயைக் கூட நாம் ஆங்கில மருத்துவத்தால் கடந்து வந்து விட்டோம். நம்மிடமிருந்து சிறு கிருமி தொற்று அவர்களுக்கு ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும். இப்படிப்பட்ட சூழலில் பழங்கால நடைமுறையை கடைபிடித்து வரும் இத்தீவு மக்களை அவர்கள் போக்கிலேயே விடுவது தான் அனைவருக்கும் நல்லது.
மைக்காயிலோ கொண்டு சென்ற கோக் பாட்டிலில் அவனது தொற்று கிருமிகள் இருந்திருக்கும். நம்மை விட எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அவர்களுக்கு கிருமிகள் தொற்றி விட்டால் அதனை சரி செய்யும் அளவிற்கு மருத்துவ அறிவு அவர்களுக்கு இல்லை. இது மொத்த தீவு மக்களுக்குமே பேராபத்தை உண்டாக்கி பழங்குடியினரின் இனமே அழிந்து போக வாய்ப்புள்ளது. இதை மறந்துவிட்டு அவர்களோடு உறவு கொண்டாட சென்றால் முதலில் ஆபத்து என்னவோ நமக்கு தான்.