இதுவரைக்கும் நிலாவில் வெறும் 12 மனிதர்களே கால் தடம் பதித்துள்ளனர். பூமியிலிருந்து நிலாவிற்கு செல்ல முடிந்த விஞ்ஞானிகள், பூமியில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் செல்வதை தவிர்க்க காரணம் என்ன தெரியுமா? கடலுக்கு அடியில், நீண்ட தூரத்தில் அமைந்திருக்கும் 'மரியானா டிரெஞ்ச்'.
'டிரெஞ்ச்' என்றால் நீண்ட பள்ளம் என்று அர்த்தம். இந்த இடம் அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளுக்கு கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சில இடங்கள் மிகவும் ஆழமானவை. அதை 'சேலஞ்சர்ஸ் டீப்' என்று அழைக்கின்றனர்.
1875-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எச்.எம்.எஸ் சேலஞ்சர் என்ற கப்பல் கடல் சார்ந்த ஆய்வுக்காக புறப்பட்டு சென்றன. அப்போது கடலின் ஆழத்தை அளந்து கொண்டே சென்றனர். 2000,5000 அடி என்று அளந்து சென்ற குழு, மரியானா என்ற தீவின் ஒரு பகுதியில் மட்டும் சுமார் 22,000 அடிக்கு மேல் உள்ள ஆழத்தை கண்டுபிடிக்கின்றனர். இவ்வளவு அடி தூரம் செல்ல வாய்ப்பு இல்லை என்று எண்ணி தாங்கள் கொண்டு வந்த கருவிகளை மீண்டும் மீண்டும் சரிசெய்து ஆய்வு செய்தனர். அந்த இடம் எட்டு கிலோமீட்டர் ஆழம் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி புவியியல் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 2,540 கிலோமீட்டர் ஆழமும், 69 கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது இந்த மரியானா டிரெஞ்ச். உலகத்திலேயே மிக உயரமான மவுண்ட் எவரெஸ்ட் மலை கூட வெறும் 8 கிலோமீட்டர் தான். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆர். எம். எஸ் டைட்டானிக் கப்பல் உள்ள இடத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஆழமானது இந்த மரியான டிரெஞ்ச்.
இதைவிட ஆச்சரியப்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால் இங்கும் உயிர்கள் வாழ்கின்றன. நம் கற்பனைக்கும் எட்டாத பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் இந்த ஆழ்கடலின் இறுதியிலும் இருக்கின்றன. மனிதர்களால் அவ்வளவு எளிதாக இந்த ஆழ்கடலுக்குள் சென்று விட முடியாது.
இக்கடலுக்கடியில் முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு ஆய்வாளர் விக்டர் விஸ்கோவோ என்பவர் 35,853 அடி ஆழத்திற்கு பயணம் செய்து உலக சாதனை படைத்தார். மரியானா டிரெஞ்ச்சில் இருந்து திரும்பிய அவர், கடலுக்கடியில் பிளாஸ்டிக் பை மற்றும் சாக்லேட் ரேப்பர்கள் கிடப்பதை கவனித்தேன். மனிதர்கள் செய்யும் அட்டூழியம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என வேதனை தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் செல்லும்போது, குறைந்த வெப்பநிலை, உயர் அழுத்தம் மற்றும் ஒளி பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் கடல் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அப்படியென்றால், இங்கு வாழும் மீன்கள் மற்றும் பிற உயிரினங்கள் எப்படி வாழ்கிறது என்ற கேள்வி தோன்றும் அல்லவா? பொதுவாகவே இங்குள்ள உயிரினங்கள் தானாகவே ஒளியை உருவாக்கிக் கொள்ளும் தன்மை உடையதாம். குறிப்பாக எலும்புகள் இல்லாத மீன்களே வாழ்கின்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆழ்கடலில் புது வகையான நத்தைமீன் (snail fish) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 2012 ஆம் ஆண்டு மரியானா பிரென்ச்சின் உள்ளே சென்றார். தனது இலக்கை அடைய, கேமரூன் 24 அடி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வடிவமைத்தார். ஆழத்தின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய வகையில் 9-1/2 அங்குல தடிமன் கொண்ட ஒரு ஜன்னல் இருந்தது. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த அவர் நிறைய கேமராக்கள் கொண்டு சென்று இக்கடலின் ஆச்சரியங்களை படம் பிடித்துள்ளார். டைட்டானிக் படத்தின் இயக்குனர் கேமராக்களை எடுத்துச் செல்ல மறந்து விடுவாரா என்ன?
இதுகுறித்து கேமரூன் கூறியது, "இக்கடலுக்குள் 68 புதிய வகை இனங்களை (species) காண முடிந்தது. அவற்றில் பெரும்பாலானவை பாக்டீரியாக்கள். கடலின் மேல் தளத்தை அடைவதற்குள், நான் கொண்டு சென்ற சில உபகரணங்கள் கடல் அழுத்தத்தால் சிதறிப் போனது. ஆனால் நான் நினைத்த சில விஷயங்கள் நடக்கும் போது நிம்மதி பெருமூச்சும் விட முடிந்தது" என்றார். மரியானா டிரெஞ்சிற்குள் அதிக தூரம் பயணித்த ஒரே நபர் ஜேம்ஸ் கேமரூன் ஆவார்.
உலகிலேயே மனிதர்கள் யாரும் கால் பதிக்க முடியாத இடமாக இந்த ஆழ்கடல் அமைந்துள்ளதால், 2009 ஆம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் புஷ் மரியானா டிரெஞ்சை அமெரிக்காவின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார்.