"டார்ஜான்" என்ற படத்தைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதில் மிருகங்கள், மரம், செடி என இயற்கையோடு இயற்கையாக ஒன்றி, மனிதர்களின் வாடையே இல்லாமல் காடுகளே கதி என காட்டு மனிதனாக வாழ்ந்திருப்பார் நம்ம ஹீரோ. ஆனால், உண்மையாகவே வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் ரியல் டார்ஜானாக வாழ்ந்துள்ளார்.
நாம் ஒரு சாதாரண ட்ரெக்கிங்காக காட்டிற்கு சென்றாலே ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. திரும்ப எப்போடா வீடு திரும்புவோம் என்று நினைக்கும் அளவிற்கு காடுகள் நம்மை களைப்பில் ஆழ்த்தி விடும். வீடு திரும்பினாலும் அந்த சலுப்பு நீங்க பல நாட்கள் ஆகிவிடும். அதிலும் காட்டில் வாழ்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. பல்வேறு விஷ பூச்சிகள், விஷ தாவரங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி தேவை. அப்படி இருக்கும் நிலையில் காட்டிலேயே முழுமையாக வாழ்வதை நினைத்துப் பாருங்கள்.
உண்மையிலேயே 41 ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் வனவிலங்குகளுடன் மூன்று மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் வெளியுலக மனிதர்களோடு துளியும் தொடர்பு இல்லாமல் 41 ஆண்டுகள் தன்னந்தனியாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைக்கவே திகைப்பூட்டுகிறது. அதிலும் ஒருவர் பெண் என்ற இனமே உலகில் இருப்பது தெரியாமல் வாழ்ந்துள்ளார் என்பதுதான் ஹைலைட். அவர் பெயர்தான் ஹோ வான் லாங்.
ரியல் டார்ஜான் என்று அழைக்கப்படும் ஹோ வான் லாங்கின் வயது 49. வியட்நாமைச் சேர்ந்த இவர் விவரம் தெரியாத சிறுவயதிலேயே அவருடைய தந்தை அவரை காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். இதற்கு ஒரு குட்டி வரலாறு உண்டு. 1972 ஆம் ஆண்டு வியட்நாம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போர் நடந்தது. அப்போது அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் ஹோ வான் குடும்பம் முற்றிலும் சிதைந்தது. ஹோ வானின் தாயும், உடன் பிறந்தவர்கள் இருவரும் அந்த தாக்குதலில் பலியாகினர். அதன் பிறகு கைக்குழந்தையாக இருக்கும் ஹோ வான் மற்றும் அவரின் மற்றொரு சகோதரரை தூக்கிக்கொண்டு அவரது தந்தை நகர வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.
உயிர் பிழைத்துக் கொள்வதற்கு ஒரே வழி அடர் வனத்தில் குடியேறுவது மட்டுமே. அதனால் குவாங் நங்கை மாகாணத்தில் உள்ள அடர் காட்டுப்பகுதிக்கு தனது இரு குழந்தைகளோடு குடியேறினார் ஹோ வானின் தந்தை. ஹோ வான் கைக்குழந்தையாக இருக்கும் போதே காட்டிற்கு வந்து விட்டதால் அவருக்கு வெளி உலக மக்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஹோ வானின் தற்போதைய வயது 49. சிறு வயதிலிருந்தே தனது தந்தை மற்றும் சகோதரரை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் என்பதால் வெளியுலக மனிதர்கள் எவ்வாறு பழகுவார்கள், சமூகம் என்றால் என்ன என்பது குறித்து எந்தவித அறிவும் பெறவில்லை. இவர்கள் காட்டில் கிடைக்கும் பழங்கள், தேன், சில நேரங்களில் பாம்பு, குரங்கு மற்றும் தவளைகளையும் சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் எலியின் தலைப்பகுதியை சாப்பிட ஹோ வானிற்கு அவ்வளவு இஷ்டம்.
காட்டில் வசிக்கும் இவர்களை வெளியுலக மனிதர்கள் யாராவது பார்க்க நேர்ந்தால், தான் தங்கி இருக்கும் இருப்பிடத்தை மாற்றி விடுவார்களாம். ஒவ்வொரு முறை ஒருவர் கண்ணில் படும் போதும் வசிப்பிடத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் வசித்து வந்துள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை காடு மட்டுமே இவர்களது பாதுகாப்பான இருப்பிடம். ஏனென்றால் அமெரிக்கா-வியட்நாம் போர் இன்னும் முடியவில்லை என்று நினைத்து காட்டை விட்டு வெளியேற பயப்படுகிறார்கள். இதுவரை அவர்கள் மொத்தம் ஐந்து பேரை மட்டுமே பார்த்துள்ளார்களாம்.
புகைப்படக் கலைஞரான அல்வரோ செரசோ என்பவர் 2015 ஆம் ஆண்டு மூவரையும் காட்டில் சந்தித்துள்ளார். அதன் பிறகு, அரசு வன அதிகாரிகளின் உதவியோடு அவர்களை மீட்டு, அருகில் உள்ள கிராமத்தில் குடியமர்த்தினர். வியட்நாம் போர் முடிந்துவிட்டது என்பதை தெரிவித்தபோதும் கூட ஹோ வானின் தந்தை நம்பவில்லை. தற்போது இவர்கள் மெதுவாக நாகரிக வாழ்க்கைக்கு ஏற்றவாறு வாழத் தொடங்கியுள்ளனர்.
அல்வரோ செரசோ இவர்களைப் பற்றி பேட்டி கொடுத்ததில் அவர் கூறியிருப்பதாவது," ஹோ வானின் தந்தை வியட்நாம் போர் முடியவில்லை என்று பயந்து நகரத்துக்கு திரும்பவில்லை. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் காட்டில் வசிக்கும் போது ஹோ வானுக்கு பெண்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாது. இன்றும் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காண முடிந்த போதும், அவர்களுக்கு இடையேயான அத்யாவசிய வேறுபாட்டை முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார். ஹோ வானின் தந்தை ஒருபோதும் தனது மகன்களிடம் பாலியல் பற்றி சொல்லவில்லை.
ஹோ வானின் தந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தமும் பதற்றமும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். நான் யாரையாவது அடிக்கச் சொன்னால் ஹோ வான் அடித்து விடுவார். இவருக்கு நன்மை எது, தீமை எது என்ற புரிதல் கிடையாது", என்று ஹோ வானின் நிலையைக் குறித்து பேசியுள்ளார்.
மேலும் தனது முழு வாழ்க்கையையும் காட்டில் கழித்ததால் பல அடிப்படை சமூக கருத்துக்களைப் பற்றிய புரிதல் இல்லை. ஹோ வானைப் பொறுத்தவரை அவர் இன்னும் சிறு குழந்தை போலத்தான். மனிதர்களோடு பேசத் தொடங்கி, மக்களோடு மக்களாக ஒன்றாவதற்கு பல வருடங்கள் ஆகும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.