தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நாகர்ஜுனா அறிவித்திருந்தார். இதனை அடுத்து ஹல்தி போன்ற திருமண சடங்குகள் கோலாகலமாக தொடங்கி விட்டன.
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற சில வருடங்களிலேயே, பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில காலம் டேட்டிங் செய்து வந்தனர். 2022-ல் இருந்தே ஒன்றாக வெளிநாடு சென்று வருவது, பார்ட்டிக்கு செல்வது போன்ற கிசுகிசுக்கள் வந்து கொண்டு தான் இருந்தன. யாரிடமும் சொல்லாமல் கமுக்குமாக இருந்து வந்த ஜோடி கடந்த ஆகஸ்ட் மாதம் சிம்பிளாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தனர்.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியை கூட குடும்பமாக சேர்ந்து கொண்டாடியுள்ளார் நாக சைதன்யா. தற்போது டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தனது மூத்த மகனின் திருமணத்தை கிராண்டாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் நாகார்ஜுனா. முன்னதாக டெஸ்டினேஷன் வெட்டிங் என்று பேசப்பட்டிருந்த நிலையில் ஹைதராபாத்தில் தான் திருமணம் நடக்கப்போவதாக நாகார்ஜுனா உறுதி செய்துள்ளார்.
மங்கல ஸ்நானம் என்று சொல்லக்கூடிய ஹால்தி போன்ற திருமண சடங்குகள் சோபிதாவின் வீட்டில் தற்போது தொடங்கி விட்டன. மஞ்சள் இடிக்கும் சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்நிகழ்ச்சியில் கண்ணை பறிக்கும்படி சிவப்பு நிற சேலை அணிந்து முகம் முழுக்க புன்னகையோடு காட்சி அளிக்கிறார் சோபிதா. அடுத்ததாக மஞ்சள் நிற புடவையில் பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்த வானதி கேரக்டர் போலவே அலங்காரம் செய்துகொண்டு மஞ்சள் நீராடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. நம்ம சைதன்யா சிம்பிளாக வெள்ளை நிற குர்தா அணிந்துள்ளார்.
நாக சைதன்யாவிற்கு என்னவோ இரண்டாவது திருமணம் தான். ஆனால் சோபிதாவிற்கு இதுதான் முதல் திருமணம் அல்லவா?! சந்தோஷமும் குதூகலமும் அதிகம் இருக்கத்தான் செய்யும்.
இவர்களது திருமண வீடியோவை நெட்ஃளிக்ஸ் நிறுவனம் 50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எந்த ஒப்பந்தமும் நடக்கவில்லை என்று உறுதி செய்துள்ளார் நாக சைதன்யா.
இதுகுறித்து மேலும் நாக சைதன்யா கூறியது," எங்கள் திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நடைபெற உள்ளது. இந்த இடம் எங்களுடைய குடும்பத்திற்கு ரொம்பவே சென்டிமென்ட் ஆனது. அதுதான் இந்த நிகழ்வை இன்னும் ஸ்பெஷலாக மாற்றி இருக்கிறது. சோபிதாவின் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் என்னை எப்போதும் மகனாக கருதுகிறார்கள். இத்திருமணத்திற்குப் பிறகு எங்களது உறவு இன்னும் வலிமையாக போகிறது. திருமணத்திற்குப் பிறகும் சோபித்தா படங்களில் நடிப்பார்" என பேட்டியளித்துள்ளார்.
மேலும் இத்திருமணத்திற்கு ரஜினிகாந்த், மகேஷ் பாபு, ராணா தகுபதி, அமீர்கான், அமிதாப்பச்சன் குடும்பம் என பெரிய நட்சத்திரங்கள் வருகை தர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.