நம்ம வாழ்க்கையில அடுத்ததாக என்ன நடக்கும்? அது வாழ்க்கையாக இருக்கட்டும், தேர்வாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
பொதுவாக வருடக் கடைசி ஆனாலே பாபா வங்காவின் கணிப்புகள் பற்றி எது நடந்தது, எது நடக்கப் போகிறது என்பதை ஒரு முன்னோட்டமாக பார்ப்போம். ஜோதிடம், ஜாதகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட யாராவது அடுத்து நடக்கப்போவது என்னவென்று சொன்னால் 'அப்படி என்ன உருட்டுகிறார்கள் என்று பார்ப்போம்' என அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம்.
அந்த வகையில் பாபா வங்கா பல கணிப்புகளை தான் இறப்பதற்கு முன்பு கூறியுள்ளார். 1911 ஆம் ஆண்டு மாசிடோனியாவில் பிறந்த இவர் இதுவரை கூறிய கணிப்புகளில் 90 சதவிகிதம் பலித்துள்ளது. தனது 12 வயதில் புயலில் சிக்கிய பாபா வங்கா பார்வையை இழந்தார். இருந்தும் எதிர்காலத்தைப் பற்றி அவர் கணித்தது வாயை பிளக்கும் படி தான் உள்ளது.
இவர் கூறிய கணிப்புகளில் இரண்டாம் உலகப் போர் உட்பட அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் அதிபர் ஆவார் என்பது வரை துல்லியமாக கணித்துள்ளார். அமெரிக்க மக்கள் கூட ஒபாமா போன்ற ஒருவர் அதிபராக வருவார் என்பதை நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் பாபா வங்கா அன்றே கணித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தன் இறப்பையும் முன்னதாகவே அறிவித்ததாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு புற்று நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று பாபா வங்கா கூறியிருந்தார். அதே போன்று ரஷ்யா சமீபத்தில் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் அதை 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறியிருந்தது. இது மட்டும் இன்றி 2025 ஆம் ஆண்டு மேலும் நடக்கவிருப்பதை பாபா வங்கா கணித்துள்ளார்.
1. முதலாவதாக செயற்கை கருத்தரிப்பு பற்றி கூறியுள்ளார். இன்று நவீன முறையில் ஐ வி எஃப் (IVF) போன்ற கருத்தரிப்பு முறைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள பெண்ணின் கருப்பை தேவைப்படாது. ஒரு இயந்திரம் மூலமாகவே குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமாகும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் கூறுகிறது.
2. அடுத்ததாக டெலிபதி என்று கூறப்படும் தொலை நுண்ணுணர்வு. எதிர்காலத்தில்
நீங்கள் வாய் திறந்து பேசவே தேவையில்லை. எதிரில் இருப்பவரிடம் பேச வேண்டும் என்றால் எண்ணங்களிலேயே பேசிக் கொள்ளலாம். இதற்கான தொழில் நுட்பமும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர். அதை சரிப்படுத்தும் விதமாக எலான் மஸ்க் டெலிபதியை சாத்தியப்படுத்த முழு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
3. ஐரோப்பிய நாடுகள் 2016 ஆம் ஆண்டே அழிந்து போய்விடும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். அந்த வருடத்தில் அது போன்ற எந்த நிகழ்வும் நடக்கவில்லை. ஆனால் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஆன சூழலை பார்க்கும்போது, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பலரும் கூறுகின்றனர்.
4. அடுத்ததாக மனிதர்கள் எதிர்காலத்தில் தனக்கு தேவையான உடல் பலத்தை கூட்டிக் கொள்ள முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்று இல்லாவிட்டாலும் தனக்கு தேவையான சக்தியை அவர்கள் அதிகரித்துக் கொள்ளும் அளவிற்கு அறிவியலும் மருத்துவமும் வளர்ந்திருக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.
பாபா வங்காவின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக இருக்கும் என்பதை காலம் தான் சொல்லும். எனவே எது நடந்தாலும் நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்வது மிக அவசியம்.