முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருவது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. 33 வயதாகும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. போலிஸ் விசாரணைக்கு பயந்து, பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
प्रधानमंत्री जी आजकल महिलाओं के मंगलसूत्र और गहनों की बातें करते हैं। कर्नाटका में मोदी जी ने जिसके लिए वोट मांगा, उन्होंने हजारों महिलाओं के साथ दुष्कर्म किया। मैं पूछना चाहती हूं कि हमारे प्रधानमंत्री और गृहमंत्री इस बारे में क्या कहते हैं?
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 29, 2024
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க, கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில், "பத்து நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா செய்த குற்றங்களை கேட்கும் போதே நெஞ்சம் நடுங்குகிறது. இது பற்றி பிரதமர் மோடி வாய் திறப்பாரா?. எந்த கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் தற்பொழுது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.