அண்டார்டிகா என்று சொன்னாலே நம் ஞாபகத்திற்கு வருவது ராட்சத படிப்பாறைகளும், பென்குயின்களும் தான். இங்கு உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a, 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நகரத் தொடங்கியுள்ளது. எங்கோ நகரும் பனிப்பாறைக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இது ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. அண்டார்டிகாவின் மொத்த பணிப்பாறைகளும் உருகினால் கடல் நீர்மட்டம் 60 அடி வரையில் உயரும். இது உலகுக்கு நல்லதல்ல.
சுமார் ஒரு ட்ரில்லியன் டன் எடையுள்ள A23a பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரியது. 1986-இல் அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிப்பரப்பிலிருந்து இந்த A23a பனிப்பாறை பிரிந்தது. அடிப்படையில் இது ஒரு பனித்தீவு என்று சொல்லலாம். சுமார் 4,000சதுர கி.மீ. பரப்பளவும் 3,280 அடி ஆழமும் கொண்ட இந்தப் பனிப்பாறை, சென்னையைப் போல 4 மடங்கு பெரியது. கடந்த 2020 ஆம் ஆண்டே A23a பனிப்பாறை மெதுவாக நகரத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின.
A23a, சமீபத்திய மாதங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களால் உந்தப்பட்டு, அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையைக் கடந்து செல்கிறது.
A23a இன் நகர்வை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வளவு அடர்ந்த பணிப்பாறைக்குள் எப்படி இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை கண்காணிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆய்வாளர்கள் செயற்கைக்கோள்கள் மூலமும், அவ்வப்போது முடிந்தவரை ட்ரோண்களை பயன்படுத்தியும் இந்த பனிப்பாறைகளின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் இப்பணிப்பாறைகளின் நகர்வு மற்ற கடலுக்கு எவ்வகையான பாதிப்பை உண்டாக்கும் என்பதையும் கணித்துள்ளனர்.
1956 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் ஆராய்ச்சி நிலையம் இங்கு நிறுவப்பட்டது. அன்று கட்டப்பட்ட ஆராய்ச்சி நிலையம் பல வருடங்கள் கழித்து பணிக்குள் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் ஆராய்ச்சி நிலையங்களை அண்டார்டிகாவில் துவங்கினர். 1957 ஆம் ஆண்டு வோஸ்டோக் என்ற ஏரியின் அருகே ரஷ்யா தனது ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, தற்போது மொத்தமாக ஐந்து ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தான் அண்டார்டிகாவை பற்றி புதுப்புது பிரம்மிப்பூட்டும் விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த A23a பனிப்பாறை ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்தித்து பிறகு கடலுடன் சேரும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
A23a பனிப்பறை நகர்ந்து கடலுக்குள் கலக்க நேர்ந்தால் பல்வேறு வகையான கனிமங்களை கடலுக்கு சேர்க்கும். இதனால், அண்டார்டிகாவில் வாழும் விலங்குகள் இடம்பெயர்ந்து செல்லலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.