Monday 23rd of December 2024 - 07:40:07 PM
500 வருட கல்லறையை திறந்ததால் மூண்டதா இரண்டாம் உலக போர்? உலகை மிரட்டிய மன்னன் தைமூரின் சாபம் என்ன?
500 வருட கல்லறையை திறந்ததால் மூண்டதா இரண்டாம் உலக போர்? உலகை மிரட்டிய மன்னன் தைமூரின் சாபம் என்ன?
எல்லாளன் / 06 மே 2024

உலகின் மிகப்பெரும் படையெடுப்பாளர்களாக  வரலாற்றில் சித்தரிக்கப்படுபவர்களில் மிக முக்கியமானவர்கள்  அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், தைமூர். தைமூர் இந்தியாவிற்குள் புகுந்து டெல்லியில் செய்த அட்டகாசங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரங்கள் என வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கிறார்கள். 

மக்களால் நேசிக்கப்படும் மாபெரும் நல்ல தலைவர்களையே மரணம் விட்டு வைக்காத போது, கொடுங்கோல் மன்னர்கள் மரணத்திற்கு முன் எம்மாத்திரம்.  1405-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவிற்கு செல்லும் வழியில் தற்போதைய கஸகஸ்தான் நாட்டில் ஓட்ரார் என்ற நகரில் சாதாரண காய்ச்சல் சளியால் இறந்தார்.

தைமூரின் உடல் அவரது தைமூரிய பேரரசின் தலைநகரான சமர்கண்டில் (தற்போதைய உஸ்பெஸ்கிஸ்தான்) நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது வாரிசுகளின் உடல்களும்  தைமூரின் கல்லறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டன.

காலங்கள் கடந்து, 500 வருடங்கள் பறந்தோடி போனது.

1941-ம் ஆண்டு உலகம் முழுதும் ஹிட்லரின் நாஜிப் படைகளால் நையப்புடைக்கப்பட்டு கதறி துடித்துக் கொண்டிருந்த நேரம். ஹாயாக தன் இரும்பு கைகளுக்குள் ரஷ்யாவை கட்டி வைத்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சியின் உச்சத்தில் இருந்தார் ஜோஸப் ஸ்டாலின். 

கம்யூனிஸ கொள்கைகளை வெறி கொண்டு பரப்பிக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு, கம்யூனிஸத்தின் சில அடிப்படை கோட்பாடுகளை மையமாக வைத்து இயங்கி வரும் ஹிட்லரின் நாஜிப் படைகள், முதலாளித்துவ நாடுகளையே பதப் பார்க்கும், ரஷ்யாவிற்குள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை மிகுதியாகவே இருந்தது. அதனால், உலகப்போர் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் மேம்போக்காக அதை டீல் செய்தபடி ரஷ்யாவின் வளர்ச்சியில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்படியே இருந்திருந்தால் பிரச்சினையில்லை. ஆனால், அப்போது தேவையில்லாத ஒரு ஆணியை புடுங்க சொன்னார் ஸ்டாலின். ஆம், 500 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட தைமூரின் கல்லறையை தோண்டி அதில் புதைக்கப்பட்டுள்ளது உண்மையில் தைமூர் மற்றும் அவரின் வாரிசுகளின் உடல்கள்தானா என ஆராய்ச்சி செய்ய ஒரு அணியை அனுப்பி வைத்தார்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற மானுடவியலாளர் மிக்கைல் கிராஸ்மோவ் தலைமையில், தொஷ்முகம்மத் கோரி-நியோஸி, யாஹ்யோ குல்மோவ், ஹோடி ஸரிஃபோவ், ஸட்ரின் அய்னி, அலெக்ஸாண்டர் ஷிம்யொனோவ், மிக்கைல் மாஸ்ஸான், லெவ் ஓஸ்ஹனின், என ரஷ்யாவின் புகழ் பெற்ற கல்வியாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என ஒரு பெரும் படை தைமூரின் கல்லறையை திறக்க சமர்கண்ட் நகருக்கு படையெடுத்தார்கள்.  

ஸ்டாலினின் கல்லறை தோண்டி அணி சமர்கண்டை அடைந்து தங்கள் நல்வரவின் நோக்கத்தை சொன்னதுமே, பதறிப் போனார்கள் அங்கிருந்த உள்ளூர் வயோதிக மதவாதிகள்.

"ஐயோ, ஐயா தைமூரின் கல்லறையையா திறக்க போகிறீர்கள், உங்களுக்கு ரஷ்யா நல்லயிருப்பது பிடிக்கவில்லையா? வேண்டாம் வீண் வேலை, மரியாதையாக இங்கிருந்து ஓடி விடுங்கள். ஐயா தைமூரின் கல்லறையை திறக்கும் தலைவனின் ஆட்சி பெரும் படையெடுப்பை சந்திக்கும், அந்த நாட்டு மக்கள் அநியாயமாக தெருவில் அநாதைகள் போல் கொலை செய்யப்படுவார்கள். அவர்களை காப்பாற்ற எந்த தேவ தூதனும் வர மாட்டான். அந்த நாட்டின் தலைவன் மிகக் கொடிய அழிவை சந்திப்பான்." என ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. இது ஒரு சாபம். என சொல்லி கல்லறை தோண்டி அணியில் இடம்பெற்றிருந்த மாபெரும் கல்வியாளர் மத ஞானி  ஸட்ரின் அய்னியிடம், ஒரு குறிப்பை கொடுத்தார்கள்.

அந்த குறிப்பை வாங்கி படித்த ஸட்ரின் அய்னி சிரித்தபடி,  அந்த குறிப்பு 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு. தைமூரின் கல்லறையில் ஏதோ பித்தலாட்டத்தை செய்து விட்டு அது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக கல்லறையை திறக்க விடாமல் செய்வதற்காக உருவாக்கிய போலி சாபம் என சொல்லி அந்த வயோதிகர்களை அங்கிருந்து விரட்டி விட்டார்.

1941-ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி தைமூரின் கல்லறையை திறக்கும் பணி தொடங்கியது. முதலில் தைமூரின் பேரன் உலுக்பெக்கின் மகன்களின் சவப்பெட்டிகள் வெளியில் எடுக்கப்பட்டன, அதன் பின் தைமூரின் மகன் மிரன்ஷா மற்றும் ஷாஹருக்கின் சவப்பெட்டிகள் எடுக்கப்பட்டன. ஜூன் 18ம் திகது தைமூரின் பேரன் உலுக்பெக்கின் சவப்பெட்டி வெளியில் எடுக்கப்பட்டது. இறுதியில் ஜூன் 19ம் திகதி பெரிய பளிங்கு கற்களால் மூடப்பட்ட தைமூரின் சவப்பெட்டி வெளியில் எடுக்கப்பட்டது. 

மறுநாள் ஜூன் 20-ம் திகதி தைமூரின் சவப்பெட்டி திறக்கப்பட்டது. 

சவப்பெட்டி திறக்கப்பட்ட அடுத்த நொடி அங்கு மின்சாரங்கள் தடைபட்டன கல்லறை கிடங்கிற்குள் பெரும் இருள் சூழ்ந்து கொண்டது.

சவப்பெட்டிக்குள் இருந்து பெரும் வாசனை வெளியேறி அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 500 வருடங்களான கல்லறைக்குள் இருந்து எப்படி இப்படியொரு வாசனை வரமுடியும் என அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். 

அவசர அவசரமாக மின் இணைப்புகளை சரிபார்த்து மீண்டும் மின்சார இணைப்பை பெற்று விளக்குகள் ஏற்றப்பட்டன. சற்று பீதி கலந்த கலக்கத்துடனேயே அனைவரும் தைமூரின் சவப்பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார்கள். 

அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தைமூரின் சவப்பெட்டிக்குள் எழுதப்பட்டிருந்த வாசகங்கள். 

"என் கல்லறை திறக்கப்படும் பொழுது உலகம் நடு நடுங்கிப்போகும். என் கல்லறையை திறப்பவனின் ஆட்சி  என் படையெடுப்புகளை விட பெரும் கொடூர படையெடுப்பை சந்திக்கும்."

அதிர்ந்து மிரண்டு போன ஸ்டாலினின் ஸ்பெஷல் கல்லறை தோண்டி அணி, மிச்ச மீதி அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தலைநகர் மாஸ்கோ சென்று தலைவர் ஸ்டாலினிடம் பகிர்ந்து கொள்வோம் என முடிவெடுத்து, தோண்டி எடுத்த சவப்பெட்டிகளை மூடி கட்டி பார்சல் செய்து கொண்டு மாஸ்கோவிற்கு விரைந்தது.

தைமூரின் சவப்பெட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இறங்கிய அடுத்த நாள்.

ஜூன் 22ம் திகதி ஜெர்மனியின் நாஜிப் படைகள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ரஷ்ய எல்லைக்குள் புகுந்து வெறியாட்டம் போத்த்தொடங்கினர். எதிர்பாரத தாக்குதலால் நிலை குலைந்த ரஷ்ய படைகள் சிதறி ஓட, பெரிய எதிர்ப்புகள் ஏதுமின்றி கல்யாண ஊர்வலம் போல் முன்னேறி சென்றனர் நாஜி படைகள்.

சுதாரித்து தன் மொத்த படைகளையும் ஒன்று திரட்டி ரஷ்யாவின் மேற்கு பகுதிக்கு அனுப்பினார் ஸ்டாலின். ஆனால், அதற்குள் காலம் கடந்து விட்டது. நாஜிப் படைகள் ரஷ்யாவின் மையத்தை நோக்கி நெருங்கி விட்டிருந்தார்கள். 

தொழில் புரட்சி என்ற பெயரில் மக்களையும் ராணுவத்தையும் ஆலையிலிட்ட கரும்பாக கசக்கி பிழிந்து, மொத்த சாறையும் எடுத்து விட்டு, வெறும் சக்கையாக வைத்திருந்த ஸ்டாலினின் காட்டு கத்து உத்தரவுகளை செயல்படுத்த, உடலிலும் மனதிலும் தெம்பு திராணியின்றி, வெறி கொண்ட நாஜிப் படைகளின் தாக்குதலாலில் சிக்கி தங்கள் சொந்த நாட்டு தெருக்களில் அநாதைகள் போல் செத்து விழுந்தார்கள் ரஷ்ய மக்களும் ராணுவ வீரர்களும்.

இன்னும் சில நாட்கள் இந்த நிலை நீடித்தால் மொத்த ரஷ்யாவும் காலியாவதுடன், ஹிட்லரின் கையில் சிக்கினால் தன் நிலை என்ன ஆகும் என்ற பயத்தில் பதறி துடித்த ஸ்டாலின் நினைவுகளில் தைமூரின் கல்லறை வாசகங்கள் வந்து கொக்கரித்து சிரித்தன. பீதியில் பதறிய ஸ்டாலின் உடனடியாக தைமூரின் மிச்ச மீதி உடல் பாகங்களை சவப்பெட்டியில் வத்து மீண்டும் தைமூரின் கல்லறையில் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார். 

1942-ம் ஆண்டு நவம்பர் மாதம், மிச்ச மீதி தைமூரின் உடல்  பாகங்கள் அப்படியே மீண்டும் அவரது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் சமர்கண்ட் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, இஸ்லாமிய முறைப்படி அனைத்து மரியாதைகளும் செலுத்தப்பட்டு மீண்டும் அதே இடத்தில் தைமுரின் சவப்பெட்டி கல்லறைக்குள் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின் ஸ்டாலினின் ரஷ்ய படைகளிடம் ஸ்டாலின்கிராட் யுத்தத்தில் சிக்கி மரண அடி வாங்கிய ஹிட்லரின் நாஜிப் படைகள் தலைதெறிக்க வந்த வழியே ஜெர்மனி நோக்கி ஓடத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் மொத்த வரலாறும் ரஷ்ய மக்களின் மாபெரும் எழுச்சியால் மாற்றி எழுதப்பட்டது. ஹிட்லரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டிய உலகம், ரஷ்ய மக்களின் வெறித்தனமான போரினால்   காப்பாற்றப்பட்டது.

ஆனால் இவை அனைத்தும் கற்பனையான கதை என சொல்கிறார்கள் பல வரலாற்று ஆய்வாளர்கள். எதிர்பாராமல் நடந்த சில பல சம்பவங்களின் ஒற்றுமை தன்மையை லாஜிக்கலாக கோர்த்து எளிதில் நம்பும்படி சொல்லப்பட்ட கட்டுக்கதை என்கிறார்கள்.

சீனாவிற்கு செல்லும் வழியில் ஒட்ரன் நகரில் இறந்த தைமூரின் உடல் அவரது விருப்பப்படி தலைநகர் சமர்கண்டில் புதைப்பதற்காக எடுத்து வரப்பட்டது. அப்பொழுது உடல் கெட்டு போகாமல் இருப்பதற்காக் தைமூரின் உடல் பதப்படுத்தப்பட்டது. அந்த பதப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வீரியம் மிக்க வாசனை திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களின் வாசனையே 500 ஆண்டுகள் ஆனாலும் அப்படியே சவப்பெட்டிக்குள் இருந்தன.

சவப்பெட்டியை திறந்தவுடன் மின் இணைப்புகள் துண்டானது, அந்த இடத்தை இருள் சூழ்ந்தது எல்லாம் தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள்.

தைமூரின் சவப்பெட்டிக்குள் இஸ்லாமிய இறைவாக்கியம் ஒன்றும் தைமூரின் முன்னோர்களின் பெயர்களுமே எழுதப்பட்டிருந்தன. மொழி தெரியாத சிலர் அந்த வாக்கியங்களை சாபமாக சொல்லி புரளி கிளப்பி விட்டார்கள்.

ஹிட்லரின் படைகள் ஆரம்பத்தில் வெற்றி வாகை சூடினானாலும் நீண்ட நெடிய போர், பல நாட்கள் வேறு நாட்டில், வேற கால சூழ்நிலைகளில் போராடிய சோர்வு, ரஷ்யாவின் கடும் குளிர், மற்றும் ரஷ்ய மக்களின் எழுச்சியாலேயே ஸ்டாலின்கிராட் பொரில் தோல்வியை தழுவினார்கள். மற்றபடி தைமுரின் கல்லறைக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என வாதிடிகிறார்கள் பல வரலாற்று ஆய்வாளர்கள்.

தைமூர் கல்லறை - இன்றைய தோற்றம்.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஜப்பான் சென்ற தமிழ் நடிகைகள். என்ன விசேஷம் தெரியுமா?
சினிமா / 05 நவம்பர் 2024
ஜப்பான் சென்ற தமிழ் நடிகைகள். என்ன விசேஷம் தெரியுமா?

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை தான் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் நெப்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி