வழக்கமாக நமது நாட்டில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டால் அதிலிருந்து மேலே பல அடுக்குமாடிகள் கட்டுவது தான் வழக்கம். சாதாரணமாக இந்தியாவின் வெப்பநிலை 30 முதல் 40 ஆக இருந்தாலும் ஒருபோதும் நாம் நிலத்தடியில் வீடு கட்டி வாழலாமா என்று நினைத்ததில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் 'கூபர் பேடி' என்ற நகரத்தில் வசித்து வரும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பூமிக்கு அடியே வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். நிலத்தடியில் வீடுகளா என்று கேட்பதற்கே வினோதமாக இருக்கின்றது அல்லவா? கூபர் பேடியின் 60% மக்கள் இப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர்.
"உலகின் ஓபல் தலைநகரம்" என்று அழைக்கப்படும் 'கூபர் பேடி' தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஓபல் என்பது மாணிக்க கற்களை குறிக்கிறது. முதன் முதலில் 1915 ஆம் ஆண்டு மாணிக்க கற்களை எடுப்பதற்காக இந்த நகரத்தில் சுரங்கம் தோண்டப்பட்டது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நிலத்தடியில் வாழ ஆரம்பித்தனர். ஏனென்றால் கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸை தொடுகிறது. அதனால் இங்கு வாழும் மக்கள் சூடான பாலைவன வெப்பத்தை தாங்க முடியாமல் பூமிக்கு அடியில் வீடுகளை அமைக்க தொடங்கினர்.
பாலைவனம் என்பதால் இவர்களுக்கு தண்ணீர் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கிற பகுதியிலிருந்து குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
வெயில் காலங்களில் அதிக வெப்பமாகவும், குளிர்காலங்களில் அதிக குளிரும் இருப்பதனால் தங்களை பாதுகாக்க இந்த சுரங்க வீடுகளை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள் மக்கள். இங்கு வீடுகள் மட்டுமல்ல. அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், பார், அருங்காட்சியகம் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் இயங்கி வருகின்றது.
இந்த நிலத்தடி வீடுகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், உள்ளே சென்று பார்த்தால் நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு எல்லா வீடுகளிலும் அனைத்து நவீன வசதிகளையும் அப்டேட் செய்து வைத்துள்ளனர்.
கூபர் பேடியில் மொத்தம் 3000 முதல் 4000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பூமியின் மேல் கற்களை வைத்து கட்டப்படும் கட்டிடங்கள் போலவே நிலத்தடியிலும் மிக அழகாக, ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு வடிவமைத்துள்ளனர். மேலும் இங்குள்ள சில ஆடம்பர வீடுகள் ஒரு லட்சம் டாலர்கள் வரை விற்கப்பட்டுள்ளது. இங்கு பல ஹாலிவுட் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு வெளியான 'பிட்ச் பிளாக்' படம் இங்குதான் எடுக்கப்பட்டதாம்.
முன்னதாக இப்பகுதியில் மாணிக்க கற்கள் எடுப்பதற்காக சுரங்கம் தோண்டப்பட்டது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞன் எதேர்ச்சியாக மாணிக்க கற்களை கண்டுபிடித்தான். தகவல் அறிந்து சுரங்க தொழிலாளர்கள் இப்பகுதிக்கு திரண்டு வந்தனர். 1970 கள் மற்றும் 1980 ஆம் காலகட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருந்தன. இப்படித்தான் கூபர் பேடி ஓபல் தலைநகரமாக மாறியது. ஆனால் இன்று வெறும் 100 சுரங்கங்கள் மட்டுமே உள்ளன. உலகில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அனைத்தும் இங்கிருந்து தான் கொண்டுவரப்படுகின்றன.
'கூபர் பேடி' நகரமாக எப்படி மாறியது என்பதற்கான சில கட்டு கதைகளும் இருக்கின்றன. 1963 ஆம் ஆண்டு ஒருவர் தான் வளர்த்தும் கோழிகள் அடிக்கடி காணாமல் போகின்றது என்று பல இடங்களில் தேடி உள்ளார். அதன் பிறகு கோழிகள் அனைத்தும் நிலத்திற்கு அடியே உள்ள ஒரு சிறிய துளைக்குள் சென்று பதுங்கிக் கொள்வதை கண்டுள்ளார். அப்படி உள்ளே என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில் அந்த துளையை மேலும் தோன்டியுள்ளார். தோண்டத் தோண்ட கற்கள் மற்றும் மண் சரிந்து கொண்டே இருந்தது. அப்போது அவர் ஒரு ரகசிய, செங்குத்தான பாதையை கண்டுபிடித்தார். இந்த இடத்தை மக்கள் தொலைந்து போன 'டெரின்குயு' நகரமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
கூபர் பேடி ஒரு தனித்துவமான அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கின்றதால் தற்போது சுற்றுலா பயணிகளை பெரிதளவில் ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இந்நகரம் நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறது. அடுத்த முறை நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கூபர் பேடிக்கு ஒரு விசிட் அடித்து விட்டு வாருங்கள்.