ஹேய் நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்... என அடிக்கடி சிறைக்கு சென்று வரும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை விதித்துள்ளது கோவை நீதிமன்றம்.
பிரபல அரசியல் பார்வையாளர் மற்றும் விமர்சகர் சவுக்கு சங்கர். தனது சவுக்கு மீடியா மட்டுமின்றி வேறு சில யூடியூப் சேனல்களிலும் அரசியல்வாதிகளின் அநியாயங்கள் முதல் அரசு அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள் வரை சில சமயங்களில் ஆதாரங்களுடனும் பல சமயங்களில் ஊகங்களின் அடிப்படையிலும் கருத்துகளை வெளியிட்டு பரபரப்புகளை கிளப்புபவர்.
சமீபத்தில் சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்திருந்தார்.
சவுக்கு சங்கரின் பேட்டியை குறித்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கோவை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
உதவி ஆய்வாளர் சுகன்யாவின் புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கரின் மேல் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் போலிசார். மே மாதம் 4ம் திகதி, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
தேனியில் இருந்து கோவை வரும் வழியில், திருப்பூர் தாராபுரம் அருகே வரும்பொழுது போலிஸ் வேன் எதிரில் வந்த கார் ஒன்றுடன் எதிர்பாராத வகையில் மோதியதால் சிறிய விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த மூவரையும் தாராபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்த போலிசார், வேறு வாகனம் ஒன்றில் சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்தனர்.
கோவை தீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலிசார், சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா போதை பொருளை கைப்பற்றியதாக தெரிவித்து, சவுக்கு சங்கரின் மேல் கஞ்சா போதை பொருள் வழக்கை பதிவு செய்துள்ளார்கள்.