கதை சுருக்கம்: சென்னையில் எதிர்பாராத விபத்து ஒன்றில் மூளைச்சாவடைந்து இறக்கும் நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக்கின் இதயத்தை, வேலூரில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ரியாவிற்கு பொருத்துவதற்காக எடுத்துச் செல்லும் பொறுப்பு ட்ராபிக் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தியிடம் கொடுக்கப்படுகிறது. பல போராட்டங்கள் திடீர் திருப்பங்களுக்கு பின் கார்த்திக்கின் இதயம் ரியாவிற்கு பொருத்தப்பட்டதா இல்லையா?
லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில், பாபி - சஞ்சய் கதை திரைக்கதையில், ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் 2011-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ட்ராபிக் (Traffic)' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'.
கதை:
சென்னையில் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கும் இளைஞன் கார்த்திக் (சச்சின்) மூளைச் சாவடைந்து உயிர் பிழைக்க முடியாத சூழலில் மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கின்றான். வேலூரில் இருக்கும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் கௌதமின் (பிரகாஷ் ராஜ்) மகள் ரியா (கேப்ரியல்லா) இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறாள். பாதிக்கப்பட்ட இதயத்துடன் ரியா ஒரு சில மணி நேரங்களே உயிர் வாழ முடியும் என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
எப்படியும் இறந்துவிடப் போகும் மூளைச் சாவடைந்த இளைஞன் கார்த்திக்கின் இதயத்தை அவன் பெற்றோர் (ஜெயபிரகாஷ் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்) ரியாவிற்கு தானமாக கொடுக்க, அந்த இதயத்தை 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்குள் வேலூரில் ரியா இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ட்ராபிக் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தியிடம் (சேரன்) ஒப்படைக்கப் படுகிறது. சத்யமூர்த்திக்கும், கார்த்திக்கின் இதயத்திற்கும் துணையாக டாக்டர் ராபின் (பிரசன்னா) மற்றும் கார்த்திக்கின் நண்பன் அஜ்மல் (மிதுன்) உடன் செல்கின்றனர்.
இந்த ஆப்ரேஷ்னை தலமையேற்று நடத்துகிறார் போலிஸ் எஸ்.பி சூர்யபிரகாஷ் (சரத்குமார்). கண்ட்ரோல் ரீமுல் இருந்து கண்காணித்தபடி சூர்யபிரகாஷ் உத்தரவுகளை கொடுக்க அவரது உத்தரவுகளின் படி சத்யமூர்த்தி பயணிக்க முடிவு செய்யப்படுகிறது.
சத்யமூர்த்தி சில வாரங்களுக்கு முன் தன் குடும்ப வறுமை காரணமாக சில ஆயிரங்கள் லஞ்சமாக பெற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அன்றுதான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். லஞ்சம் பெற்று சஸ்பெண்ட் ஆன தன்னிடம் தன் மகள் சரியாக பேசாமல் தவிர்ப்பதும், தன்னால் அவளுக்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்து எப்படி தன் மேல் விழுந்த கறையை துடைப்பது என தெரியாமல் மன உளைச்சலில் இருக்கும் சத்ய மூர்த்தி, இந்த பணியை எப்படியும் வெற்றிகரமாக செய்து தன் மேல் விழுந்துள்ள கறையை போக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
மழை பெய்து கொண்டிருக்கும் மிக மோசமான வானிலை காரணமாக சாலை மார்கமாக காரில் இதயத்தை கொண்டு செல்கின்றார்கள் சத்யமூர்த்தி, ராபின் மற்றும் அஜ்மல். அவர்களது பயணத்திற்கு தொந்தரவு இல்லாமல் இருக்க போலிசார் சென்னை முதல் வேலூர் வரையிலான சாலைகள் அனைத்திலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தி சத்யமூர்த்தி கார்த்திக்கின் இதயத்தை கொண்டு செல்லும் வாகனத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சாலை முழுவதும் வரிசையாக போலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு சத்ய மூர்த்தியின் கார் வேலூர் நோக்கி பயணிக்கிறது. சத்ய மூர்த்தியின் பயணத்தை மொத்த மீடியாக்களும் கவர் செய்கின்றன. நொடிக்கு நொடி கார் செல்லும் இடம் பற்றிய தகவல் டி.வி சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது.
பூந்தமல்லி தாண்டி சென்று கொண்டிருக்கும் கார் திடீரென மாயமாக மறைந்து போகிறது. மொத்த போலிஸ் டீம் மற்றும் மீடியாக்கள் குழப்பத்தில் ஆழ, யாருக்கும் தெரியாத ஒரு பாலைவனம் போன்ற பிரதேசத்திற்கு கத்தி முனையில் சத்ய மூர்த்தியை மிரட்டி காரை கடத்தி செல்கிறான் டாக்டர் ராபின்.
அன்று காலை. தன் மனைவியின்(இனியா) பிறந்த நாளான அன்றைய தினம், அவளுக்கு பரிசளிக்க கார் ஒன்றை புதிதாக வாங்கி செல்கிறான் ராபின். செல்லும் வழியில் தன் நண்பனுக்கும் மனைவிக்கும் கள்ள காதல் இருப்பதை அறிந்து கோபமடையும் ராபின். பரிசாக கொண்டு சென்ற காரால் தன் மனைவியை இடித்து கொலை செய்ய முயல்கிறான். மனைவியை காரல் இடித்த பின், அவள் காரில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து விட்டு, வேகமாக காரில் தப்பி சென்று தனிமையான இடமொன்றில் அழுது கொண்டிருக்கும் ராபினை அவசரமாக அழைக்கும் அவனது ஹாஸ்பிடல் நிர்வாகம், கார்த்திக்கின் இதயத்திற்கு பாதுகாப்பாக கான்ஸ்டபிள் சத்யமூர்த்தியுடன் செல்ல நிர்பந்திக்கிறது.
வேறு வழியில்லாமல் சத்யமூர்த்தியுடன் புறப்படுகிறான் ராபின். சாலையெங்கும் குவிந்திருக்கும் போலிஸ் ராபினுக்கு பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்க, மனைவி இறந்திருப்பாள் தன்னை போலிஸ் தேடும் என பயந்தபடி சத்யமூர்த்தியுடன் பயணம் செய்கிறான் ராபின். அப்பொழுது, ராபினின் மனைவி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை சத்ய மூர்த்தியிடம் செல்போனில் தெரிவிக்கிறார் எஸ்.பி சூர்யபிரகாஷ்.
செல்போனில் சத்யமூர்த்தி தனது பெயர் மற்றும் மனைவியை பற்றி பேசுவதை பார்த்து, தான் கொலை செய்ததை போலிஸ் கண்டுபிடித்து விட்டது என தவறாக புரிந்து கொள்ளும் ராபின், எப்படியாவது போலிஸிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயம் மற்றும் பதட்டத்தில் சத்ய மூர்த்தியை கத்தி முனையில் மிரட்டி காரை கடத்தி செல்கிறான்.
சத்யமூர்த்தியின் சமாதான பேச்சுவார்த்தை, ரியாவின் தாயின்(ராதிகா) உணர்வு பூர்வமான கெஞ்சல், சூர்யபிரகாஷின் ஆலோசனை என பல போராட்டங்களுக்கு பின் சமாதானம் ஆகும் ராபின் இதயத்தை எடுத்து செல்ல அனுமதிக்கிறான். மேலும் தானும் அந்த ஆப்ரேஷன் முடியும் வரை உடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறான். சத்யமூர்த்தியின் ஆதரவுடன் மீண்டும் ராபின் இதயத்துடன் பயணிக்கிறான்.
அவசரத்திலும் பதட்டத்திலும் சத்யமூர்த்தியின் செல்போன் சிக்னல் இல்லாத இடமொன்றில் வழி மாறி சென்று விடுகிறது. மீண்டும் கார் எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள் போலிஸ் மற்றும் ரியாவின் பெற்றோர்.
வழிமாறி போன சத்யமூர்த்தி மீண்டும் பல போராட்டங்களுக்கு பின் வேலூரில் ரியாவின் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு சேர்த்து, அவளை காப்பாற்றுகிறார்.