1978ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி, இரவு மணி 10. ஜோன்ஸ்டவுனில் வசித்து வந்த ஆண், பெண், முதியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 918 பேரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர், அவர்களின் தலைவர் ஜிம் ஜோன்ஸ் நடுவில் நின்று அலறிக் கொண்டிருந்தார்.
"அவர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள், மொத்தமாக கொலை செய்து விடுவார்கள், அவர்களுக்கு முன் நாம் செயல்பட வேண்டும், இப்பொழுது நாம் செய்ய போவது ஒரு மாபெரும் புரட்சி."
ஜிம் ஜோன்ஸ் கத்திக் கொண்டிருக்கும் போது, சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர், அவர்களை சுற்றி ஆயுதம் தாங்கிய ஜிம் ஜோன்ஸின் காவலர்கள் நின்று கொண்டிருந்தனர்.
ஜிம் ஜோன்ஸ் என்ன செய்ய சொல்ல போகிறார் என மக்கள் அதிர்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்க, ஜிம் ஜோன்ஸின் நெருங்கிய விசுவாசிகள் சிலர் சென்று பல பாட்டில்களில் சயனைட் விசத்தையும், ஊசி போட பயன்படும் சிரிஞ்சுகளையும் கொண்டு வந்தனர்.
"நாம் அனைவரும் தற்கொலை செய்ய போகிறோம், நம்மை விட்டால் நம் குழந்தைகளுக்கு யாரும் இல்லை, எனவே முதலில் குழந்தைகளில் இருந்து தொடங்குவோம்."
என ஜிம் ஜோன்ஸ் சொல்ல, ரவுலட்ட பவுல் என்ற பெண் தன் 1 வயது குழந்தையுடன் முன்னாள் வந்தாள் அவளிடம் சயனைட் நிரப்பப்பட்ட சிரிஞ் கொடுக்கப்பட கனத்த இதயத்துடன் சிரிஞ்சின் மூலம் சயனைடை தன் ஒரு வயது குழந்தைக்கு கொடுத்து விட்டு தானும் சில துளி சயனைடை அருந்தினாள்.
சில நிமிடங்களில் இருவரும் கீழே விழுந்து துடி துடித்து உயிருக்கு போராட தொடங்கினர்.
மற்றவர்கள் அனைவரும் சயனைடை பெற்றுக் கொள்ள வரிசையில் தயாராக நிற்க, அவர்களை குரூரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜிம் ஜோன்ஸ்.
பீப்பிள்ஸ் டெம்பிள் குழந்தைகளுடன் ஜிம் ஜோன்ஸ்
ஜிம் ஜோன்ஸ். அமெரிக்காவின் மிக பிரபலமான புரட்சியாளன், மத போதகர். 1931ம் ஆண்டு, மே 13ம் திகதி அமெரிக்காவின் இண்டியானா மாஹணத்தில் க்ரீட் என்ற சிறிய ஊரில் பிறந்தவன்.
அப்பா ஜேம்ஸ் துர்மன் ஜோன்ஸ் முதல் உலகப்போரில் பங்குபெற்ற ராணுவ வீரர். சிறு வயதில் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த ஜிம் ஜோன்ஸ் ரஷ்ய அதிபர் ஸ்டாலின், கம்யூனிச தந்தை கார்ல் மார்க்ஸ், சீன புரட்சியாளர் மா சே துங், இந்தியாவின் மஹாத்மா காந்தி, ஜெர்மனியின் அதிபர் அடால்ப் ஹிட்லர் என உலகின் சிறந்த தலைவர்களை பற்றியும் அவர்களின் கொள்கைகளை பற்றியும் படித்தான்.
யாருடனும் சேராமல் அதிகம் தனிமையை விரும்பிய ஜிம் ஜோன்ஸ் மதம் மற்றும் இறப்பு பற்றி அதிகம் பேசினான். இறந்த விலங்குகளை தனது வீட்டு தோட்டத்தில் புதைத்து அவற்றிற்கு மரியாதை செலுத்தி வந்தான் ஜிம் ஜோன்ஸ்.
இரண்டாம் உலக போர் முடிந்து ஜெர்மன் சிறையிலிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்பிய பொழுது அவர்களை பார்த்து நாஸி சல்யூட் வைத்தான் சிறுவன் ஜிம் ஜோன்ஸ், அந்த அளவிற்கு ஹிட்லர் மேல் மோகம் கொண்டிருந்தான் ஜிம் ஜோன்ஸ்.
1948 ம் ஆண்டு சிறந்த மாணவனாக கல்லூரி படிப்பை முடித்த ஜோன்ஸ், ரிச்மண்ட் ரெய்ட் ஹாச்பிடலில் வேலை பார்த்தான், ஹாச்பிடலில் ஜிம் ஜோன்ஸின் விசித்திரமான நடவடிக்கைகளால் பலரும் அவனை பார்த்து பயந்தார்கள், அங்கு நர்ஸாக வேலை பார்த்த மர்ஸிலின் பால்ட்வின்னை காதலித்து திருமணம் செய்தான் ஜிம் ஜோன்ஸ்.
அமெரிக்க அதிபர் ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலனேர் ரூஸ்வெல்ட்டின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஜிம் ஜோன்ஸ் அமெரிக்காவில் நிலவி வந்த கருப்பர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்க்க தொடங்கினான். உலகில் அனைவரும் சமம், கருப்பர் வெள்ளையர், சீனர், ஆசியர், ஆப்ரிக்கர், என அனைத்து மக்களுக்கும் பொதுவானது உலகம். என பிரச்சாரம் செய்ய தொடங்கிய ஜிம் ஜோன்ஸ் மெல்ல வெளி உலகத்தில் பிரபலமாக தொடங்கினான்.
ஜிம் ஜோன்ஸிடமிருந்த புத்தக வாசிப்பு அறிவும், சிறந்த பேச்சு திறனும் மிக வேகமாக அவனை மக்களிடம் கொண்டு சேர்த்து, அமெரிக்கா கம்யூனிஸத்தை வெறி கொண்டு வெறுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது, அப்போதே ஜிம் ஜோன்ஸ் தீவிர கம்யூனிஸ்டாக ரஷ்யாவை ஆதரித்து அமெரிக்காவில் பிரச்சாரம் செய்து வந்தான்.
1954ம் ஆண்டு ரெயின் போ பேமிலி அதாவது வானவில் குடும்பம் என்ற பெயரில் பல வெள்ளையரல்லாத குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தான் ஜிம் ஜோன்ஸ். ஆக்னஸ் என்ற அமெரிக்க ஆதி குடியை சேர்ந்த பெண் குழந்தை, லீ, ஸ்டீபனி, சூஸன் என்ற மூன்று கொரியன் குழந்தைகள், இண்டியாணா மாஹாணத்தில் முதல் கருப்பர் இன குழந்தையை தத்தெடுத்தான் ஜிம் ஜோன்ஸ், அந்த குழந்தைக்கு ஜிம் ஜோன்ஸ் ஜீனியர் என தனது பெயரையே வைத்தான்.
1959ம் ஆண்டு ஜீன் மாதம் ஜிம் ஜோன்ஸிற்கும் மனைவி பால்ட்வின்னிற்கும் முதல் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு ஸ்டீபன் காந்தி என பெயரிட்டான் ஜிம் ஜோன்ஸ்.
பீப்பிள்ஸ் டெம்பிள் - கொலை களம் - மறு நாள் காலை
1960ம் ஆண்டு இண்டியானாணாபொலிஸ் மாஹாண மேயர் சார்லஸ் போஸ்வெல், மனித உரிமை கமிசனின் தலைவராக ஜிம் ஜோன்ஸை நியமித்தார். பதவிக்கு வந்ததும் ஜிம் ஜோன்ஸ் அந்த பகுதியில் கருப்பர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கொடுமைகளையும் எதிர்த்து தட்டி கேட்டான், ஹோட்டல், ஹாஸ்பிட்டல், கோயில் என எங்கெல்லாம் கருப்பர்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் சென்று தட்ட் கேட்டான், இதனால் பல வெள்ளையின பணக்காரர்களுக்கு எதிரியானான், அதே சமயம் பல கருப்பின மக்களை ஆதரிக்கும் தொழிலதிபர்களுக்கு செல்ல பிள்ளையானான்.
1970ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து பிரச்சாரத்தை தொடங்கினான் ஜிம் ஜோன்ஸ், பைபிள் பெண்கள் மற்றும் வெள்ளையினமல்லாத மக்களுக்கு எதிரானது என்றான். தன்னை இயேசு, மஹாத்மா காந்தி, புத்தர், மற்றும் ரஷ்ய அதிபர் லெனினின் மறு பிறபி என பிரச்சாரம் செய்தான், அமெரிக்காவில் கம்யூனிசத்தை வளர்க்க மதம் ஒன்றே சரியான கருவி என முடிவெடுத்த ஜிம் ஜோன்ஸ், மத போதனைகள் மூலம் மக்களை ஒன்று திரட்டி அமெரிக்க கருப்பின மக்களுக்காக போராட தொடங்கினான். 1977ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல விருதான மார்ட்டின் லூதர் கிங் விருது பெற்றான் ஜிம் ஜோன்ஸ்.
ஜிம் ஜோன்ஸின் பேச்சால் கவரப்பட்ட பலரும் அவனை கடவுள் எனவே நம்ப தொடங்கினர், பீப்பிள்ஸ் டெம்பிள், மக்களின் கோவில் என்ற அமைப்பை தொடங்கிய ஜிம் ஜோன்ஸை லட்சம் கணக்கில் மக்கள் பின் தொடர தொடங்கினர். பல செல்வந்தர்களும் ஜிம் ஜோன்ஸிற்கு நன்கொடைகள் கொடுக்க, பீப்பிள்ஸ் டெம்பிள் அமைப்பு மிக வேகமாக அமெரிக்காவில் வளர தொடங்கியது.
பீப்பிள்ஸ் டெம்பிள் - சயனைட் பேரல்
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் பிரன்ஸிஸ்கோ, லாஸ் ஏஞ்செல்ஸ், நியூயார்க், என ஜிம் ஜோன்ஸின் பீப்பிள்ஸ் டெம்பிள் அலுவலகங்கள் திறக்கப்பட்டன, அமெரிக்காவிற்கு மிகப்பெரும் ஆபத்தாக ஜிம் ஜோன்ஸ் உருவாகி வருகிறான் என்பதை அமெரிக்க அரசு வெகு விரைவிலேயே கண்டு பிடித்து விட்டது. அரசின் நெருக்கடிகள் தொடர, ரஷ்யாவில் தனது தொடர்புகளை வளர்க்க தொடங்கினான் ஜிம் ஜோன்ஸ், அதே சமயம் தென் அமெரிக்காவில் கயானா நாட்டில் 3000 ஏக்கரில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கி ஜோன்ஸ் டவுன் என பெயரிட்டு தனது பீப்பிள்ஸ் டெம்பிள் உறுப்பினர்களை அங்கு குடி அமர்த்தினான். மிக சரியாக சொல்ல போனால் நித்தியானந்தாவின் கைலாசா நாடுதான் ஜிம் ஜோன்ஸின் ஜோன்ஸ் டவுன்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2