24 வயது இளம் பெண், அதுவும் ஆங்கிலத்தில் டபுள் MA படித்தவர். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர், நன்கு படித்த குடும்பத்து பெண். ஏன் தன் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்ய வேண்டும்? அதுவும் 10 மாத பிஞ்சு குழந்தை உட்பட. இப்படி கேள்விகள் இன்ஸ்பெக்டர் குப்தாவை குழப்ப, அதற்கான காரணத்தை அறிய தன் துப்பறியும் மூளையை முடுக்கி அதற்கான வேலைகளில் தொடங்கினார் குப்தா.
7 பேரின் கொடூர மரண சம்பவம் நடந்த ஏப்ரல் 14ம் திகதி இரவு, சப்னம் அலி தனது செல்போனில் இருந்து 52 முறை ஒரு எண்ணிற்கு அவுட்கோயிங் அழைப்புகள் பேசி இருந்தார். அந்த எண் யாருடையது என விசாரித்ததில் அது, பவன்கேடி கிராமத்தில் வசித்து வரும் சலீம் என்பருடையது என்பதை கண்டுபிடித்தார் இன்ஸ்பெக்டர் குப்தா.
6ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த சலீம், சவ்ஹத் அலியின் வீட்டிற்கு அருகில் உள்ள மரம் அறுக்கும் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி பார்த்துக் கொள்ளும் சூழ்நிலையில், சலீமிற்கும், சப்னத்திற்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் சவ்ஹத் அலிக்கு தெரிந்ததும் மொத்த குடும்பமும் சப்னத்தின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கூலி தொழிலாளி சலீம், நன்கு படித்த டீச்சரான சப்னத்திற்கும் ஊரில் பெரிய குடும்பமான சவ்ஹத் அலியின் குடும்பத்திர்கும் சரியான நபர் இல்லை என மொத்த குடும்பமும் சொன்னாலும், அவர்கள் சப்னம் சலீம் காதலை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தது.
சப்னம் இஸ்லாம் மதத்தில் 'சைஃபி' பிரிவை சேர்ந்தவர். சலீம் இஸ்லாம் மதத்தின் 'பதான்' பிரிவை சேர்ந்தவர். ஒரே மதமாக இருந்தாலும் வேறு பிரிவில் தங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை எடுக்க சவ்ஹத் அலியின் குடும்பம் விருப்பவில்லை. எனவே ஒட்டு மொத்த குடும்பமும் சப்னம்-சலீமின் காதலை எதிர்த்தனர்.
மொத்த குடும்பத்தின் எதிர்ப்பும் ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வர, இன்னொரு பக்கம் சப்னம்-சலீமின் காதலும் அதை விட வேகமாக வளர்ந்து வந்தது. அதற்கு சாட்சியாக சப்னத்தின் வயிற்றில் 2 மாதமாக கருவும் வளர்ந்து வந்தது.
குடும்பம் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன? சலீம்-சப்னம் இருவரும் வேறு ஊருக்கு ஓடிச்சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால், சவ்ஹத் அலியின் பெரும் சொத்து அவர்களை வேறு ஊருக்கு ஓடிச் செல்ல விடாமல் தடுத்தது. தன் தந்தை சவ்ஹத் அலியின் பெரும் சொத்துகளை விட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று போராடி வாழ சப்னம் விரும்பவில்லை. காதலுடன் சேர்த்து குடும்பத்தின் சொத்தும் வேண்டும் என்ற சப்னத்தின் கருத்தையே காதலன் சலீமும் கொண்டிருந்தான்.
வயிற்றில் கரு உருவான பின்னும் தன் குடும்பத்தினர் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கோபம், ஆதங்கத்தில். தங்கள் காதலை புரிந்து கொள்ளாத தன் குடும்பத்தினர் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என முடிவு செய்த சப்னமும் காதலன் சலீமும் சேர்ந்து சவ்ஹத் அலியின் மொத்த குடும்பத்தையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து, அதற்கு சரியான நாளாக 2008ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதியை தீர்மானித்து, தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டனர். ஆனால், இன்ஸ்பெக்டர் குப்தாவின் புத்திசாலிதனமான விசாரணையில் தப்பிக்க முடியாமல் போலிஸிடம் சிக்கிக்கொண்டனர்.
கொலை நடந்து 5வது நாளான, 2008ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி, போலிஸ் சலீம் மற்றும் சப்னத்தை கைது செய்தனர். கொலை செய்த பொழுது சலீம் – சப்னத்திடம் இருந்த ஒற்றுமை, அவர்கள் போலிஸிடம் சிக்கிய பின்னர் காணாமல் போனது.
தான் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டு மாடி வழியாக கோடாலியுடன் நுழைந்த சலீம் தன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்ததாக சப்னம் சொன்னார். தன் மொத்த குடும்பத்திற்கும் பயோபோஸ் மயக்க மாத்திரை கொடுத்து அவர்களை கோடாலியில் வெட்டி கொலை செய்த பின் சப்னம் தனக்கு போன் செய்து கொலையை மறைக்க உதவி செய்யுமாறு கேட்டதாகவும், அதற்காகவே தான் சவ்ஹத் அலி வீட்டிற்கு சென்றதாகவும் சலீம் சொன்னார்.
சப்னம்-சலீம் இருவருமே திட்டமிட்டபடி, இரவு சப்னம் பாலில் பயோபோஸ் மாத்திரைகளை கலந்து விட, அதனை குடித்த சவ்ஹத் அலியின் குடும்பத்தினர் மயக்கமடைகின்றனர். உடனே சப்னம் சலீமிற்கு போன் செய்து தகவலை சொல்ல, சலீம் சவ்ஹத் அலி வீட்டிற்கு வந்து, சலீம்-சப்னம் இருவரும் கோடாலியால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்கின்றனர். பின் சலீம் கோடாலியை எடுத்து சென்று சற்று தொலைவில் உள்ள குளத்தில் வீசி விட்டு தன் வீட்டிற்கு சென்று விட. சப்னம் ரத்த கறை படிந்த தன் ஆடையை மாற்றி விட்டு, அப்பொழுதுதான் தான் தன் குடும்பத்தினர் இறந்து விட்டதை பார்த்தது போல் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இப்படியாக தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர் போலிஸ்.
2008ம் ஆண்டு உத்திர பிரதேசத்தை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கை விசாரித்த அம்ரோஹா நீதிமன்றம் 2010ம் ஆண்டு சலீம்-சப்னம் இருவருக்கும் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இருவரின் மேல் முறையீட்டையும் 2013ம் ஆண்டு அலஹாபாத் உயர் நீதிமன்றமும். 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து. சலீம்-சப்னத்தின் மரண தண்டனையை உறுதி செய்தன.
கைது செய்யப்பட்டபோது 2 மாத கர்ப்பிணியாக இருந்த சப்னத்திற்கு சிறையில் ஆண் குழந்தை பிறந்தது. 7 வயது வரை சப்னத்துடன் சிறையில் வசித்து வந்த சிறுவன் பின் சப்னத்தின் வழக்கறிஞர் உஸ்மான் சைபியிடம் ஒப்படக்கப்பட்டு, தற்பொழுது அவருடனேயே வசித்து வருகிறான்.
தன் மகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனவே தனது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற சப்னத்தின் கருணை மனுவையும் 2016ம் ஆண்டு நிராகரித்தார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி.
விடுதலைக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின், உதிரபிரதேசதம், மத்துரா நகர சிறைக்கதவுகளுக்கு பின் தங்கள் மரண தண்டனைக்காக காத்திருக்கின்றனர் சலீம் மற்றும் சப்னம்.
சப்னத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மரண தண்டனை பெறும் முதல் பெண்ணாக சப்னத்தின் பெயர் வரலாற்றில் இடம் பெற்று விடும். அதே சமயம், சப்னத்தின் சொந்த கிராமமான பவன்கேரி கிராமத்தில் சவ்ஹத் அலியின் குடும்ப படுகொலைக்கு பின் யாரும் தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சப்னம் என்ற பெயரை வைப்பதில்லை.