அந்த அதிகாலை நேரத்தில் சவுஹத் அலி வீட்டிலிருந்து வீறிட்டு வெளிப்பட்ட சப்னம் அலியின் அலறல் சத்தம், அக்கம்பக்கத்து வீட்டாரின் தூக்கத்தை விரட்டி அவர்களை சவுஹத் அலியின் வீட்டை நோக்கி விரைந்து செல்ல வைத்தது.
உள்ளூர் தொடக்கப்பள்ளி ஆசிரியையான, 24 வயது சப்னம் 55 வயது சவ்ஹத் அலியின் மகள். இவர்கள் குடும்பம்தான் பவன்கேரி கிராமத்தில் நன்கு படித்த குடும்பம். இந்த அதிகாலை நேரத்தில் எதற்கு சப்னம் அலறி கத்துகிறாள் என ஓடி வந்த அக்கம்பக்கத்தினருக்கு அதிர்ச்சி.
சவ்ஹத் அலியின் குடும்பத்தினர் 7 பேரும் தங்கள் படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். ஷப்னம் அவர்கள் அருகில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தாள். இறந்த 7 பேரில், சவ்ஹத் அலியின் பேரன் 10 மாத கைக் குழந்தை அர்ஷ் அலியும் ஒருவன். ஏழு பேரின் கழுத்தும் கோடாறியால் கொடூரமாக வெட்டப்பட்டு, அனைவரும் இறந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
மொத்த குடும்பத்தையும் இழந்து அலறி துடித்துக் கொண்டிருந்த ஆசிரியை சப்னத்தை ஆறுதல்படுத்த முயன்ற அக்கம்பக்கத்தினரிடம், கொள்ளையர்கள் தங்கள் வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்ததாகவும், அவர்களை எதிர்த்த தனது மொத்த குடும்பத்தையும் கொள்ளையர்கள் கோடாறியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் இரண்டாவது மாடியில் பால்கனியில் தூங்கிக் கொண்டிருந்த தான் இப்பொழுதுதான் கீழே வந்தபொழுது மொத்த குடும்பமும் கொலை செய்யப்பட்டு விட்டதை அறிந்ததாகவும் சொல்லி கதறி அழுதால் சப்னம்.
தகவல் அறிந்த அம்ரோஹா நகர போலிஸ் இன்ஸ்பெக்டர் RP குப்தா உடனடியாக சவ்ஹத் அலியின் வீட்டிற்கு வந்து விட்டார். வந்த வேகத்தில் தன் போலிஸ் வேலையை தொடங்கிய குப்தா, படுக்கை அறையில் இறந்து கிடந்தவர்களின் பெட்ஷீட் மற்றும் போர்வைகள் கசங்காமல் அப்படியே அழகாக மடித்து வைக்கப்பட்டு இருப்பதை கவனித்தார். எனவே இறந்தவர்கள் யாரும் உயிர் போகும் தருணத்தில் உயிர் பிழைக்க போராடவில்லை என்ற முடிவிற்கு வந்தார்.
மேலும் படுக்கை அறை மற்றும் வீட்டின் மற்ற அறைகளுக்குள் பொருட்கள் கலையாமல் அடுக்கி வைக்கப்பட்டபடி அப்படியே இருந்தது. எனவே குடும்பத்தினர் யாருடனும் சண்டையிட்டு போராடவில்லை என்ற முடிவிற்கு வந்தார் இன்ஸ்பெக்டர் RP குப்தா.
இறந்தவர்கள் யாருடனும் யாருடனும் சண்டையிடாமலும், உயிருக்காக போராடாமல் இறந்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் உயிர் பிரியும் நேரத்தில் அவர்கள் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார் RP குப்தா.
பவன்கேடி கிராமம் உத்ர பிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், எனவே இறந்த 7 பேரின் உடல்களும் போஸ்ட்மார்டத்திற்காக தொலைவில் உள்ள அம்ரோஹா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சவ்ஹத் அலி குடும்பத்தில் மீதமிருந்த சப்னத்திடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் குப்தாவிடம், மீண்டும் மீண்டும் தங்கள் வீட்டிற்குள் வந்த கொள்ளையர்களே தன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்தார்கள் என சப்னம் சொல்லிக் கொண்டிருந்தார், சப்னம் சொன்னதுபடி, சவ்ஹத் அலியின் வீட்டிற்குள் கொள்ளையர்கள் யாரேனும் நுழைந்திருப்பார்களா என்ற சந்தேகத்தில், ஏதேனும் துப்பு கிடைக்குமா என வீட்டின் இண்டு இடுக்குகளை எல்லாம் சோதனை செய்த இன்ஸ்பெக்டர் குப்தாவிற்கு, சவ்ஹத் அலியின் வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் நுழைந்திருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை, ஆனால் அவருக்கு வீட்டின் குப்பையில் இருந்து கிடைத்தது சில காலியான பயோபோஸ் மயக்க மருந்து மாத்திரை அட்டைகள்.
பயோபோஸ் மாத்திரைகள் ஒருவித பெயின் கில்லர் தூக்கமாத்திரைகள் ஆகும். இந்த பையோபோஸ் மாத்திரை அட்டைகள் பற்றிய இன்ஸ்பெக்டர் குப்தாவின் கேள்விகளுக்கு சப்னத்திடமிருந்து சரியான பதில்கள் கிடைக்கவில்லை. எனவே சப்னத்தின் மேல் சந்தேகம் கொள்ள தொடங்கினார் இன்ஸ்பெக்டர் குப்தா. சப்னத்தின் அறையை சோதனை செய்தபொழுது ரத்த கறை படிந்த சப்னத்தின் ஆடை ஒன்று போலிஸாருக்கு கிடைத்தது. அந்த ரத்த கறைபடிந்த ஆடை குறித்தும் சப்னத்திடம் தெளிவான பாதில் இல்லை. சப்னத்தின் மேல் இன்ஸ்பெக்டர் குப்தாவிற்கு சந்தேகம் இருந்தாலும், எதையும் உறுதிப்படுத்தாமல் முடிவு எடுக்க வேண்டாம் என இறந்த 7 பேரின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டிற்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் குப்தா.
இன்ஸ்பெக்டர் கணித்தபடியே, இறந்தவர்களில் 10 மாத குழந்தை தவிர மற்ற 6 பேரும் மரணிக்கும் பொழுது, பயோபோஸ் மயக்க மாத்திரைகளால் மயக்கத்தில் இருந்ததாக, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், பளிச்சென பதில் சொன்னது. அத்துடன் இறந்த 7 பேரும் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பால் அருந்தியிருந்தார்கள் என்பதும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்திருந்தது.
வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்த இன்ஸ்பெக்டர் குப்தா, சவ்ஹத் அலியின் குடும்பத்தினரில் யாரோ ஒருவர்தான் பாலில் பயோபோஸ் மாத்திரையை கலந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அந்த யாரோ ஒருவர்தான் 7 பேரும் மயக்கத்தில் இருக்கும் பொழுது அவர்களை கோடாலியால் வெட்டி கொலை செய்திருக்க வேண்டும். அந்த யாரோ ஒருவர் வேறு யாருமல்ல சவ்ஹத் அலியின் குடும்பத்தில் மிச்சமாக இருக்கும் சவ்ஹத் அலியின் மகள் சப்னம் அலிதான் என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்தார் இன்ஸ்பெக்டர் குப்தா.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2. வீடியோ