டிசம்பர் 17 2023. அதிகாலை முதலே, தாவுத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சி நகரின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று, சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியது.
அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால், விஷம் கொடுக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாவுத் இப்ராஹிம், இறந்து விட்டதாகவும், சில தகவல்கள் பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.
தாவுத் இப்ராஹிமின் இறப்பு செய்தி, வேகமாக பரவுவதை அறிந்த பாகிஸ்தான் அரசு, உடனடியாக நாடு முழுவதும் சமூக ஊடகங்களை முடக்குகிறது. ஆனால், அதற்குள் தகவல் இந்தியா உட்பட உலகம் முழுதும் பரவி விட்டது.
இந்திய உளவுத்துறை ரா, அமெரிக்க உளவுஅமைப்பு CIA, சர்வதேச உளவுஅமைப்புகள், மற்றும் இண்டர்போல் என மொத்த உலக உளவு அமைப்புகளும் உஷாராகி தங்கள் உளவு படைகளை முடுக்கி விட்டன.
சில மணி நேரங்களிலேயே, தாவுத் இப்ராஹிமின், மரண செய்தி, உறுதிப்படுத்த முடியாத, ஓர் வதந்தி என்பதை, கண்டு பிடித்து விட்டனர், உளவு படையினர். ஆனால். பல வருடங்களாக, பொதுவெளியில் அதிகம் பேசப்படாமல் இருந்த, தாவுத் இப்ராஹிம் என்ற பெயர், மீண்டும் சமூக வலைதளங்களில் பெரிதும், பேசுபொருளாகியுள்ளது.
இந்தியவின் ரா, அமெரிக்காவின் CIA, இஸ்ரேலின் மொஸாட், இண்டர்போல் என உலகின் மொத்த உளவு அமைப்புகளையும் ஒரே சமயத்தில் பதட்டமடைய செய்யும் அளவிற்கு தாவுத் இப்ராஹிம் என்ன செய்துள்ளார்? யார் இந்த தாவுத் இப்ராஹிம்? தாவுத்தின் தொழில் என்ன? இப்படி பல கேள்விகள் சமூக ஊடகங்களில் வலம் வர தொடங்கியுள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், லியோ தாஸ், ஹெரால்ட் தாஸ், ஆண்டனி தாஸ் என திரையில் தெறிக்க விட்ட நிழல் உலக தாதாக்களை விட, பல மடங்கு பலத்துடனும் பவருடனும், மொத்த மும்பை நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிஜ தாதாதான் தாவுத் இப்ராஹிம்.
சமூக வலைதளங்கள் இல்லாத 80 மற்றும் 90ம் ஆண்டுகளில், தாவுத் பற்றிய செய்தி இல்லாத, தினசரி நாளிதள்கள் இல்லை என்றே சொல்லலாம். குறைந்தபட்சம், ஒரு கொலை செய்தியாவது, தாவுத்தின் கைங்காரியத்தில் நடந்ததாக செய்திகள் வெளிவந்து விடும். மேம்போக்காக கொலை செய்தி என்றாலும், புலனாய்வு செய்து பார்த்தால், அதன் பின்ணனியில், டன் கணக்கில் தங்க கடத்தல், உலகளவிய போதை பொருள் கடத்தல், சர்வதேச ஆயுத கடத்தல், அரசியல் கொலை, என ஏதாவது ஒர் பெரிய சதி திட்டத்தின் தொடக்கபுள்ளியாகவோ அல்லது முற்றுபுள்ளியாகவோ அந்த கொலையை நிகழ்த்தியிருப்பார்கள், தாவுத்தின் டி கம்பெனியினர்.
டி கம்பெனி.
பிராடுதனத்தை கொஞ்சம் ப்ராடாக செய்வோம், அதையும் ஒரு பிராண்டோடு செய்வோம் என, தன் தில்லுமுல்லு வேலைகளை செய்வதற்கென்று தனித்துவமாக தாவுத் ஆரபித்த நிறுவனம்தான், தாவுத் கம்பெனி. சுருக்கமாக டி கம்பெனி.
80 மற்றும் 90ம் ஆண்டுகளில் டி கம்பெனியின் அனுமதியில்லாமல் ஒரு ஹிந்தி திரைப்படமும் வெளிவரமுடியாத அளவிற்கு, திரையில் நிழல் தாதாக்களை உதைத்து பறக்கவிட்ட பாலிவுட்டின் அத்தனை கான்களும் மும்பையின் நிஜ தாதா தாவுத்தின் கட்டுப்பாட்டில் கைக்கட்டி வாய்மூடி நின்றதாக செய்திகள் சொல்லுகின்றன.
ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், போதைபொருள் கடத்தல், என இல்லீகள் பிஸினஸில் சம்பாதித்த கருப்பு பணத்தை, தன் செல்வாக்கையும், பலத்தையும் பயன்படுத்தி, ஹிந்தி திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்ததன் மூலம் வெள்ளை பணமாக மாற்றியதுடன், பாலிவுட் திரை உலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாவுத்தின் டி கம்பெனி, கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தது.
ஹிந்தி நடிகை மந்தாஹினி, மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த, பாகிஸ்தான் நடிகை அனிதா அயூப், ஆகியோர் தாவுத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பல செய்திகள் அப்போது உலா வந்தன.
பாலிவுட் தயாரிப்பாளர் ஜாவுட் சித்திக், மற்றும் புகழ்பெற்ற டி சீரிஸ் இசை நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் படுகொலைகளை செய்ததும் தாவுத்தின் டி கம்பெனிதான் என்ற செய்திகளும் பாலிவிட்டில் தாவுத்தின் தலையீடுகள் இருந்ததை உறுதிபடுத்தின.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2