1983 மே மாதம் 19ம் திகதி. ஆள் அரவமற்ற ஓல்ட் மொஹவக் காட்டு சாலையின் ஓரத்தின் இருட்டில் நின்று யாரோ கை அசைக்க, ஏதோ அவசர உதவியாக இருக்கும் என நினைத்த டயனே, அந்த ஆளின் அருகில் காரை நிறுத்தினாள். காரில் இருந்து இறங்கி இருட்டில் நின்ற அந்த நபரின் அருகில் சென்றாள் டயனே.
பரட்டை தலையுடன் பார்ப்பதற்கு லோக்கல் ரவுடி போல் இருந்த அந்த நபர் கையில் வைத்திருந்த .22 காலிபர் பிஸ்டலை டயனேவை நோக்கி நீட்டினான். மரியாதயாக கார் சாவியை கொடு என அவன் மிரட்ட செய்வதறியாமல் சுற்றுமுற்றும் பார்த்தாள் டயனே.
இருள் சூழ்ந்த அந்த கிராமத்து சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் இருட்டு மட்டுமே இருந்தது. என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவளது எண்ணம் முழுதும் காருக்குள் இருக்கும் அவளது குழந்தைகளை நினைத்தே பதறிக் கொண்டிருந்தது.
காரின் பின் சீட்டில் டயனேவின் குழந்தைகள் 8 வயது கிறிஸ்டி ஆன், 7 வயது செரில் லின், 3 வயது ஸ்டீபன் டேனியல் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
டயனே சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் டயனேவின் இடது கையில் சுட்டான் அந்த பரட்டை தலையன். கையில் இருந்து ரத்தம் ஆறாக கொட்ட வலியால் துடித்தாள் டயனே. வேகமாக காரை நோக்கி ஓடிய பரட்டை தலையன், கார் ட்ரைவர் சீட்டை திறந்து பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கண்மூடி தனமாக சுட தொடங்கினான்.
குண்டடி பட்ட குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி வலியால் அலறி துடிக்க, டயனே தன் கையில் இருந்த கார் சாவியை இருட்டு புதரில் தூக்கி வீசுவது போல் நடிக்க, அந்த பரட்டை தலையன் வேகமாக கார் சாவியை எடுக்க, அந்த புதரை நோக்கி ஓடினான். பாய்ந்து தனது காரில் ஏறிய டயனே வேகமாக காரை திருப்பி ஹாஸ்பிடலை நோக்கி சீறி பறந்தாள்.
இரவு மணி 11. ஸ்ப்ரிங்பீல்ட் நகரின் பிரபல மெக்கன்ஸி வில்மேட் ஹாஸ்பிடல். இன்ஸெக்டர் ஜெபர்ஸனிடம் படபடப்புடனும் பயத்துடனும் தனக்கு நடந்த பயங்கரத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் 28 வயது டயனே டாவ்ன். அவளது இடது கையில் புல்லட் பாய்ந்த காயத்திற்கு கட்டு போடப்பட்டிருந்தது. டயனேவின் மகள் கிறிஸ்டி ஆன் புல்லட்டுகள் பாய்ந்ததில் கடுமையான ஸ்ட்றோக்கினால் பாதிக்கப்பட்டு மூளை செயலிழந்து பேச்சு மூச்சின்றி கிடந்தாள். மகன் ஸ்டீபன் டேனியல் இடுப்புக்கு கீழ் செயலிழந்து மயக்கமாகியிருந்தான். மகள் செர்ல் லின் இறந்து போயிருந்தாள்.
குழந்தைகளுடன் டயனே டௌன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகள், கிறிஸ்டி மற்றும் ஸ்டீபனுக்கு ICU வில், டாக்டர் ஸ்டீவன் வில்ஹைட் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
வெளியே,
உங்கள் கணவர் எங்கே? ஏன் இன்னும் வரவில்லை. அவருக்கு தகவல் தெரியாதா? என கேட்ட இன்ஸ்பெக்டர் ஜெபர்ஸனிடம் படபடக்கும் இதயத்துடன் தன் பரிதாப வாழ்க்கையை சொல்லத் தொடங்கினாள் டயனே.
1955ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் திகதி, அரிஸோனா மாஹானத்தின் பீனிக்ஸ் நகரில் பிறந்தார் டயனே. தந்தை வெஸ்லி லிண்டேனும் தாய் விலாடினேவும் ரொம்ப ஸ்ற்றிக்டான கத்தோலிக்க குடும்பம். டயனே மாடர்ன் ற்றஸ் அணிவதற்கும், மேக்கப் போடுவதற்கும் கூட தடை விதித்திருந்தார்கள்.
எப்பொழுதும் அறிவுரை சொல்லி பழைய பஞ்சாங்கம் பேசிக் கொண்டிருக்கும் அப்பா வெஸ்லியை வெறுத்தாள் டயனே. தாய் விலாடினேவை அடிமை போல் நடத்தும் தந்தை, அதை கௌரவமாக நினைக்கும் தாய் இருவருக்கிடையில் முள்ளில் சிக்கிய பட்டாம்பூச்சி போல் வாழ்ந்து கொண்டிருந்தாள் டயனே.
வெளியில் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராய், வானத்தில் இருந்து குதித்து வந்த தேவதூதனாய் தன்னை காட்டிக் கொண்ட வெஸ்லி தன் சொந்த மகள் 12 வயது சிறுமி டயனேவிடமே மிக மோசமாக தன் பலாத்கர பாலியல் சேட்டைகளை செய்தார். அதிர்ந்து அம்மாவிடம் போய் அழுத சிறுமி டயனேவிடம், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என அண்ணா போல் வசனம் போசினாள் அம்மா.
எப்பொழுது இந்த நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே ஓடிக் கொண்டிருந்தன டயனேவின் நாட்கள்.
மூன் வேலி ஹைஸ் ஸ்கூலில் படித்த டயனேவிற்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஸ்டீவ் டவ்ன் பழக்கமானார். நட்பு நாளடைவில் காதலாக மாற. மாடர்ன் ட்றஸிற்கே மல்லுக்கு நிற்கும் பெற்றோர், டயனேவை பெட்ரோல் ஊற்றி கொளுத்தாத குறையாக காதலை எதிர்த்தார்கள்.
முட்கள் குத்த குத்த வலி தாங்காமல் தப்பிக்க தன் சிறகை வேகமாக அசைக்கும் பட்டாம்பூச்சி போல், பெற்றோரின் கட்டுப்பாடுகள் டயனேவை மேலும் மேலும் சிறகடித்து ஸ்டீவிடம் ஓடிச் சென்று ஆறுதல் தேட தூண்டியது. பெற்றோரின் எதிர்ப்பவை விட வலுவாக டயானேவின் காதல் வளர்ந்தது.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2