2021 ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி, டேனியல் ஹல்சேத்தின் வீட்டிற்குள் பரவியிருந்த புகை மண்டலத்தை அணைத்து புயலாக, உள்ளே நுழைந்தனர் தீயணைப்பு படை வீரர்கள். வீட்டின் ஹால், கிச்சன், அறைகள் என ஒவ்வொரு இடமாக பரவியிருந்த புகையையும், தீயையும் அணைத்து முன்னேறிய தீயணைப்பு வீரர்களை என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்கள் என வரவேற்றது பெட் ரூமில் விரைத்து, நெருப்பில் கருகி, ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த டேனியல் ஹல்சேத்தின் சடலம்.
45 வயதான டேனியல் ஹல்சேத்தின் பாதி எரிந்து கருகியிருந்த, உடலில் 70 இடங்களில் வெட்டு காயங்களும், உடலின் சில பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அறையில் ஆங்காங்கே மூலைகளில் சிதறிக் கிடந்தன. சுவற்றில் ரத்த கறைகள் கோலமிட்டிருக்க, தரையில் வழிந்திருந்த ரத்தம் தீயில் கருகி கெட்ட வாடை வீசிக் கொண்டிருந்தது. ரத்தமும் சதையுமாக ஒரு எலக்ட்ரிக் ரம்பம் அறையின் மூலையில் பாதி வேலையை மட்டுமே முடித்திருந்த அதிருப்தியில் அமைதியாக கிடந்தது.
போலிஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் பறக்க, விரைந்து வந்த லாஸ் வேகாஸ் நகர போலிஸ், ஆங்காங்கே சிதறி கிடந்த டேனியலின் உடல் பாகங்களை பெருக்கி வாரி எடுத்து மொத்தமாக மூட்டை கட்டி போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி விட்டு, வீட்டில் ஏதும் தடயம் கிடைக்கிறதா என சோதனை செய்தனர்.
அதே நேரம், சால்ட் லேக் சிட்டி, ஹை வேயில் விரைந்து கொண்டிருந்த டேனியல் ஹல்சேத்தின் காரில் குதுகலமாக, கொண்டாட்ட மூடில் பறந்து கொண்டிருந்தார்கள் 18 வயது ஆரோன் மற்றும் அவனது 16 வயது காதலி சியாரா. பிஞ்சிலே பழுத்ததோடு நிற்காமல் அழுகியும் விட்ட, அந்த காதல் ஜோடிகள், டேனியலை துடிக்க துடிக்க கொத்துகறி போட்டு கொலை செய்து, வீட்டோடு மொத்தமாக தீமூட்டி எரித்து, சாம்பலாக்கி, போலிஸிற்கு துளி தடயம் மிச்சம் வைக்காமல் துடைத்து அழித்து விட்டு, டேனியலின் காரையே திருடிக் கொண்டு, தப்பி வந்துவிட்ட தங்கள் புத்திசாலிதனத்தை புகழ்ந்து பேசி மெச்சி தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
இந்நேரம் போலிஸ் டேனியலின் சாம்பலை கைப்பற்றியிருப்பார்கள். தீயில் வெந்து கருகி பஸ்பமாகியிருக்கும் டேனியலின் சாம்பலை வைத்து போலிஸ் போஸ்ட்மார்ட்டம் கூட செய்ய முடியாது. டேனியல், தீ விபத்தில் இறந்து போய்விட்டான் என்ற முடிவிற்கு வந்திருப்பார்கள் போலிஸ். டேனியலின் குடும்பத்திற்கு அடக்கம் செய்யும் வேலை கூட மிச்சம், அப்படியே அஸ்தியை கொண்டு போய் கடலில் கரைக்க வேண்டியதுதான். ஆரோனும், சியாராவும் தங்களுக்குள் பேசி சிரித்து கொக்கரித்துக் கொண்டிருந்த நேரம், லாஸ் வேகாஸ் நகர போலிஸ் டேனியல் ஹல்சேத்தின் முதல் எதிரி, முக்கிய எதிரியாக இருந்த எலிஸபெத் நிக்கோலை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
எலிஸபெத் சாதாரண நபர் இல்லை. நவேடா மாஹாண சபை முன்னாள் உறுப்பினர். அமெரிக்காவில் மாஹாண சபை உறுப்பினர் என்பது நம்ம ஊர் MP மாதிரி. எலிஸபெத், தலைவன் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சியின் முக்கிய உறுப்பினர். முன்னாள் MP. டேனியலுக்கு முதல் எதிரியாக, முக்கிய எதிரியாக, எலிசபெத் இருக்க காரணம். இருவரும் 12 வருடங்கள் கணவன் மனைவியாக குடும்பம் நடந்தி 3 குழந்தைகளை பெற்றிருந்தனர்.
டேனியல் - எலிசபெத் குடும்பம்
ஆம், டேனியலின் முன்னாள் மனைவிதான் எலிசபெத். போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டிருந்த டேனியலுக்கும், மாடலாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த எலிசபெத்தும். ஓரகன் மாஹாணம், சேலம் நகர, கார்பன் யுனிவர்ஸிட்டியில் ஒன்றாக படித்தனர். இருவரின் ரசனைகளும், ஆர்வங்களும் ஒன்றாக இருக்கவே, காதலில் விழுந்த டேனியல், எலிசபெத் ஜோடி, 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அப்பொழுது டேனியலுக்கு 25 வயது, நிக்கோலுக்கு 18 வயது.
மாடலிங் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து வந்த எலிசபெத்தும், போட்டோகிராபியில் புகழ்பெற வேண்டுமென போராடிக்கொண்டிருந்த டேனியலும், தங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்தபடியே, கிடைத்த கேப்பில் கெடா வெட்டி மூன்று குழந்தைகளை பெற்று விட்டார்கள்.
மாடலிக் வாய்ப்புகளுக்காக பல பெரும் புள்ளிகளை சந்தித்த எலிசபெத்தின் VIP நட்பு வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டிருக்க, எலிசபெத் மேலான டேனியலின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க தொடங்கியது. தன்னை விட மனைவிக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகமாவதை பொறுத்துக் கொள்ள முடியாத டேனியலின் ஈகோ, எலிசபெத்தை கட்டுப்படுத்த தொடங்கியது.
தன் திறமையாலும் கடும் உழைப்பாலும், பெரும் புள்ளிகள் பலரின் அனுதாபத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்ற எலிசபெத்தின் நலம் விருபிகள் பலர் அவளை அரசியலில் ஈடுபட சொல்லி வற்புறுத்தினார்கள். அத்தனை பேரின் ஆதரவை நம்பி, மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தன் சிறுவயது ஆசையை நிறைவேற்றி கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைத்து அரசியல் பக்கம் கவனம் செலுத்தினாள் எலிசபெத்.
எலிசபெத்தின் தூரத்து உறவினர் டைகர் ஹெல்கலியன். அமெரிக்காவின் பிரபல கோல்ப் வீரரான டைகர் ஹெல்கலியன் பெரும் கோடிஸ்வரர். எலிசபெத்தின் அரசியல் ஆர்வம் மற்றும் வளர்ச்சி டைகரை கவர, நம்ம சொந்தகார புள்ள சாதிக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில், எலிசபெத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு நிதி உதவி செய்ய தொடங்கினார். அரசியல் ஆலோசனைகளுக்காக அடிக்கடி சந்தித்துக் கொண்ட எலிசபெத் மற்றும் டைகரின் புனிதமான பொதுநல நோக்க நட்பை கொச்சை படுத்தி பேச தொடங்கினான் டேனியல். அரசியல்வாதிகள் என்றாலே தியகிகள்தானே என தன் மேல் விழுந்த கறைகள் களங்கங்களை கண்டுகொள்ளாமல், தன் கனவு அரசியல் பயணத்தில் கண்ணாயிருந்த எலிசபெத் 2010ம் ஆண்டு அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்று, நவேடா மாஹாண செனட் உறுப்பினரானாள்.
எலிசபெத்தின் அசுர அரசியல் வளர்ச்சி பிடிக்காத டேனியல், எலிசபெத்தை கொடுமை செய்ய தொடங்கினான். தினமும் வீட்டில் அடி உதை என கொஞ்சம் கொஞ்சமாக் கொடூர உச்சத்தை எட்டிய டேனியலின் கொடுமைகளை தாங்க முடியாத எலிசபெத் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து, டொமஸ்டிக் வயலன்ஸ் புகாரில் டேனியலை கம்பி எண்ண வைத்தாள்.
சிறையில் இருந்து வந்த பின்னும் திருந்தாத டேனியல், தொடர்ந்து தன் கை கால்களை கட்டுப்படுத்தாமல் எலிசபெத்தை காயப்படுத்த, எரிமலையான எலிசபெத் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டை நாடினாள். ஓரளவுக்குதான் பொறுமை டேனியல் என பொங்கிய கோர்ட், 3 பிள்ளைகளையும் எலிசபெத் வசம் ஒப்படைத்து, இனி தொந்தரவு செய்தால் தொலைத்து விடுவோம் என டேனியல் தலையில் தட்டி துரத்தி விட்டது.
டைவ்ர்ஸிற்கு பின், குழந்தைகளுடன் லாஸ் வேகாஸ் நகரிற்கு வந்து குடியேறி விட்டாள் எலிசபெத். 8 வருடங்கள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த டேனியல், முதல் மகள் பருவ வயதை எட்டியதும், லாஸ் வேகாஸிற்கு குடிபெயர்ந்து, 3 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை செய்ய தொடங்கினான். பாவியாக இருந்தாலும் பெத்த பாசம் இருக்கதானே செய்யும் என நினைத்து பிள்ளைகளை அப்பாவை பார்க்க அனுமதித்தாள் எலிசபெத்.
பார்த்தவுடன் பாசத்தை கொட்டுவார் அப்பா என்ற நப்பாசையில் டேனியலின் வீட்டிற்கு சென்ற பிள்ளைகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தான் டேனியல். பிள்ளைகளை தன் வீட்டில் தங்கச் சொன்ன டேனியல், தனது மூத்த மகளிடம் சில்லறைத்தனமாக பாலியல் சேட்டைகளை செய்தான். தன் 16 வயது மகளை வீட்டில் அடைத்து வைத்து தன் பாலியல் இச்சைகளுக்கு பணிந்து போகுமாறு மிரட்டினான்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2