Monday 23rd of December 2024 - 03:43:19 PM
அம்மாவின் சினிமா மோகம். மகளை சீரழித்த அப்பா. - டேனியல்-ஹெல்சேத் 2
அம்மாவின் சினிமா மோகம். மகளை சீரழித்த அப்பா. - டேனியல்-ஹெல்சேத் 2
எல்லாளன் / 16 மே 2024

முந்தைய பகுதி: பாகம் 1 

டேனியலிடமிருந்து மகளை காப்பாற்ற எலிசபெத் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில்தான் டேனியல் கருகி காலமான சம்பவம் நடந்து விட்டது. என் மகளுக்கு என்ன ஆனது என முதலில் கண்டு பிடிக்க வேண்டும், அதுதான் எனக்கு முக்கியம் என தன்னிலை விளக்கம் கொடுத்தாள் எலிசபெத்.

எலிசபெத்தின் எக்ஸ்ட்ரா பில்டப் அலப்பறைகளை அறிந்திராத போலிஸ், அவளின் விளக்கங்களை பெற்றுக் கொண்ட், அடுத்து டேனியலின் தாய் கிரிஸ்டினை விசாரிக்க முடிவு செய்தார்கள்.

இரவு மணி 8. சால்ட் லேக் சிட்டியை அடைந்த ஆரோன் சியாரா ஜோடி, நல்ல ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டார்கள். ஆற அமர அலுப்பு தீர ஒரு ஜோடி குளியலை போட்டு விட்டு, சாவகாசமாக சாப்பாட்டை முடித்து, டீவியில் தீயில் கருகி செத்த டேனியலின் மரண செய்தி வருகிறதா என ஆர்வத்தோடு செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்க்கத் தொடங்கினார்கள்.

மறுநாள், ஏப்ரல் 10ம் திகதி, டேனியலின் தாய் கிரிஸ்டினை விசாரித்தார்கள் லாஸ் வேகாஸ் போலிஸ்.

மாடலிங், மண்ணாங்கட்டி என சுற்றிக் கொண்டிருக்கும் பெண் குடும்பத்திற்கு ஆகாது, என மறுத்த பெற்றோரின் எதிர்ப்பை மீறி எலிசபெத்தை திருமணம் செய்தான் டேனியல். மூன்று குழந்தைகளை பெற்ற பின்னும் மாடலிங் செய்வேன் என மல்லுக்கட்டிக் கொண்டிருந்த எலிசபெத் அப்படியோ கோடீஸ்வரன் டைகர் ஹெல்கலியனின் நட்பை பெற்றாள். தன் கோல்ப் பிரபலம் மற்றும் பல கோடிகளின் மூலம் ஹாலிவுட்டில் நல்ல தொடர்புகளை வைத்திருந்த டைகரிடம் அளவுக்கு மீறி அனுசரித்து செல்ல தொடங்கினாள் எலிசபெத்.

டைகர் - எலிசபெத்

எலிசபெத்தின் அழகிலும், கன்னபின்னா கவனிப்பிலும் மயங்கி, அவளே கதியென்று கிடந்த டைகருக்கு கட்டம் சரியில்லாத நாள் ஒன்றின். மாலை வேளையில், எலிசபெத்தின் மடியில் மதி மயங்கிய நிலையில், போதையில் புரண்டு கொண்டிருந்த டைகர், "என்ன பெரிய மாடலிங்? நான் உன்னை அமெரிக்காவின் பிரஸிடெண்ட் ஆக்குகிறேன் பார்." என அமைதிப்படை மணிமாறன் ரேஞ்சில் உளற. அதை அப்படியே பிடித்துக் கொண்ட அமாவாசை எலிசபெத், மாடலிங்கை மூட்டை கட்டி விட்டு, டைகரின் பணம், பழக்கவழக்கங்களை பயன்படுத்தி அரசியல் களம் புகுந்தாள்.
     
ஓவர் நைட்டில் ஓபாமா ரேஞ்ச் அரசியல்வாதியான பின், மிட்நைட் மீட்டிங்குகள், பிரச்சார சுற்றுப்பயணங்கள், கொள்கை விளக்க கூட்டங்கள் என எலிசபெத், டைகர் இருவரின் அரசியல் ஆலோசனைகள் எல்லை மீறி, இருவரும் அரசியலின் அடி ஆழம் வரை சென்று நோண்டி நொங்கெடுக்கத்  தொடங்கினார்கள்.

எலிசபெத்தின் மலைக்க வைக்கும் மாடலிங் சாதனைகளால் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த டேனியல், அவளின் அரசியல் அவதாரத்தால், அப்படியே ஆடிப் போய் விட்டான்.  அரசியல் எல்லாம் வேண்டாம் ஒழுங்காக குடும்பத்தை கவனி என எலிசபெத்தை கட்டுப்படுத்த தொடங்கினான் டேனியல். இது எதிர் கட்சிகளின் திட்டமிட்ட சதி என டேனியலின் கட்டுப்பாட்டை காலில் போட்டு மிதித்த எலிசபெத், டைகரின் பங்களாவில் தீவிர அரசியல் ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருந்தாள்.

டைகரின் பணம் எலிசபெத்தின் அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்க, எலிசபெத் டைகரின் பங்களாவில் அவனின் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள் என எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை வைத்தும், 2010ம் ஆண்டு எலிசபெத் நவேடா மாஹாண செனட்டராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு சென்றாள்.

ச்சும்மாவே டேனியலுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த எலிசபெத், செனட்டரானதும், செம்ம காட்டு காட்டத் தொடங்கினாள். எலிசபெத் டைகர் ஜோடியின் அரசியல் ஆலோசனைகள் வெள்ளை மாளிகை வரை வெட்ட வெளிச்சமாகி, டேனியலை பார்த்து, நம்ம ஊரில் சந்தி சிரிப்பது போல் அமெரிக்காவின் அத்தனை அவென்யூக்களும் சிரிக்க தொடங்கின.
 
அடியாத மாடு படியாது என ஆக்ஷன் அவதாரம் எடுத்த டேனியல், எலிசபெத்தை வீட்டில் போட்டு பொளந்து கட்ட, MP என்மேலேயே கை வைக்குறியா என எகிறிய எலிசபெத், டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸில் டேனியலை கம்பி எண்ண வைத்து விட்டாள்.

சிறையில் இருந்து வெளியில் வந்த வேகத்தில் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எலிசபெத்தை டைவர்ஸ் செய்தார் டேனியல். மூன்று குழந்தைகளையும் எலிசபெத் வசம் ஒப்படைத்தது நீதிமன்றம்.

அப்பாடா நிம்மதி என, 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காதலன் டைகரின் ஊரான லாஸ் வேகாஸிற்கு குடி போனாள் எலிசபெத். 

இப்பொழுது தன்னை விட்டால் எலிசபெத்திற்கு வேறு நாதியில்லை என புரிந்து கொண்ட டைகர், அப்படியே எலிசபெத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுடன், மீன் மொத்தமாக மாட்டிய பின் மண்புழுவை ஏன் வீணாக்க வேண்டும் என,  தன் டாலர்களை வீணாக்கிக் கொண்டிருந்த எலிசபெத்தின் அரசியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். 

அரசனை நம்பி புருசனை கைவிட்ட எலிசபெத், இனி டைகரை நம்பி பயனில்லை என புரிந்து கொண்டு, காரியமான பின் கழட்டி விடலாம், இப்போதைக்கு, எதற்கும் ஸேப்டிக்கு இருக்கட்டும் என டைகரை சைடில் டீல் செய்தபடியே, தன் பிரபலத்தை பெருக்கிக் கொள்ள மீண்டும் மாடலிங் உலகத்திற்குள் புகுந்தாள். 

- தொடரும் -

அடுத்த பகுதி: பாகம் 3

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ரியல் 'வேட்டையாடு விளையாடு' சைக்கோ நண்பர்கள். பிட்டேக்கர் - நாரிஸ் 1
உலகம் / 15 மே 2024
ரியல் 'வேட்டையாடு விளையாடு' சைக்கோ நண்பர்கள். பிட்டேக்கர் - நாரிஸ் 1

கொலை செய்வதற்கென தனி செட்டப்புடன் ஒரு ஆம்னி டைப் GMG வெண்டுரா வகை வேன், உள்ளே ப்ரிட்ஜ், ப்ரிட்ஜ் நிற

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி