2003 ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி. இரவு மணி 9. அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாஹானம், ஸ்டாபோர்ட் நகரின் கொழுத்த பணக்கார முதலாளி வர்க்க முதலைகள் வாழும் பங்களாக்கள் நிறைந்த சுகர் லேண்ட் பகுதியில் ஒதுக்குபுறமாக இருட்டில் காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார்கள் இரண்டு முகமூடி மனிதர்கள். இருட்டில் பதுங்கி பதுங்கி நகர்ந்தவர்கள், மெல்ல பிரபல ரியல் எஸ்டேட் மாஸ்டர் மைண்ட் மல்டி மில்லினியர் கெண்ட் விட்டேக்கரின் பங்களாவிற்குள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தனர்.
பூட்டியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை கழட்டி, உள்ளே நுழைந்த முகமூடி மனிதர்கள், இத்தாலி பளிங்குகளால் பளீரென பல்லிளித்த பங்களா முழுதும் விட்டேக்கர் கொட்டி கட்டிய டாலர்களால் டாலடித்தது. அடிக்கடி வந்து போன விருந்தாளிகள் போல், எந்த தடுமாற்றமும் இல்லாமல், விட்டேக்கரின் மகன் கெவினின் அறைக்குள் நுழைந்தார்கள். ஷெல்பில் இருந்து கெவினின் கனத்த கார்பான் 9MM பிஸ்டலை எடுத்து பொறுமையாக புல்லட்டை நிரப்பினார்கள். அவ்வப்பொழுது அவர்கள் வந்து விட்டார்களா என பங்களாவின் வாசலை பார்த்து கொண்டான் முதல் முகமூடி ஸ்டீவன் கேம்பகன்.
"இன்னும் டைம் இருக்கு, இப்ப பார்ட்டி படு ஜோராக போய்க் கொண்டிருக்கும்." என்றான் பிஸ்டலில் புல்லட்டை நிரப்பிக் கொண்டிருந்த இரண்டாவது முகமூடி க்ரிஸ் ப்ரஷீர்.
ஸ்டீவன் கேம்பஹன் - க்ரிஷ் ப்ரஷீர்
அதே நேரம். ஸ்டாபோர்ட் நகரின் பிஸியான மையப்பகுதியில் இருந்த, பிரபல பப்படாக்ஸ் ரெஸ்ட்டாரண்டில் பார்ட்டியில் இருந்தார்கள் விட்டேக்கர் குடும்பத்தினர்.
அப்பா கெண்ட் விட்டேக்கர், 54 வயது. ஹாஸ்டன் நகர, பிரபல ரியல் எஸ்டேட் கன்ஸ்ற்றக்ஷன் கம்பெனியின் CEO. தேதி ஒன்றானால் அக்கவுண்டில் வந்து விழும் ஆறு இலக்க அமெரிக்க டாலர்களில் சம்பளம். சிம்பிளாக சொன்னால் சுகர்லேண்ட் பகுதியின் கொலுத்த மில்லினியர்களில் ஒருவர்.
அம்மா பேட்ற்றிகா, வெட்டியாக வீட்டிலிருப்பது போரடிக்குது என டைம் பாஸிற்காக எலிமின்றி ஸ்கூல் டீச்சராக பணியாற்றினாலும். வேலையில் வெள்ளைகாரியாக தன்னிடம் படிக்கும் குழந்தைகளிடம் அன்பை பொழிந்து அவளும் மழலையாக மாறி விடும் 50 வயது குழந்தை. தாய் பாசத்தில் இன்னொரு சரண்யா பொன்வண்ணன்.
முதல் மகன் தாமஸ் பார்ட் விட்டேக்கர், 24 வயது. இந்த பார்ட்டியின் பிதாமகன். கோடீஸ்வர கூட்டம் படிக்கும் பிரபல ஸாம் ஹோஸ்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரியில் மாஸாக பாஸாகிவிட்ட தாமஸ் பார்ட்டை பாராட்டி கொண்டாட இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார் அப்பா கெண்ட் விட்டேக்கர்.
இளைய மகன் 19 வயது கெவின் விட்டேக்கர். கடைக்குட்டி, வீட்டின் செல்ல பிள்ளையாக வலம் வருபவன்.
அங்கே, தங்கள் வீட்டில் காத்திருக்கும் மரணம் பற்றி துளியும் அறிந்திராத, அந்த குடும்பம் குதுகலமாக பார்ட்டியை கொண்டாடிக் கொண்டிருந்தது.
மாஸ்டர் டிகிரி பெற்று விட்ட மகனின் கெட்டிகாரதனத்தை மெச்சி, 4000 அமெரிக்க டாலர்களை விட்டெறிந்து, விட்டேக்கர் ஆசையாக வாங்கி வைத்திருந்த, ரோலக்ஸ் வாட்சை மகன் தாமஸ் பார்ட்டின் கையில் கட்டி விட்டு பாராட்டினார் விட்டேக்கர்.
பார்ட்டியை முடித்து அவர்கள் நல்வரவிற்காக ஆர்வத்தோடு காத்திருக்கும் மரணத்தை ஆரத்தழுவ, வீட்டிற்கு புறப்பட்டது விட்டேக்கர் குடும்பம்.
"டைம் ஆச்சு, இப்ப வந்து விடுவார்கள்." என விறைப்பானான் பிஸ்டலை பிடித்திருந்த முகமூடி க்ரிஷ் ப்ரஷீர். பரபரப்போடு பங்களா வாசலை பார்த்தான் இரண்டாவது முகமூடி ஸ்டீவன் கேம்பகன். இப்பொழுது இருவரும் பங்களா ஹாலில், சரியாக வாசலுக்கு நேராக படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தனர். ப்ரஷிரின் கையிலிருந்த பிஸ்டல் சீக்கிரம் வாங்கடா வெடித்து விட்டு போய் வேற வேலையை பார்க்க வேண்டும் என வெறியோடு வாசலை குறி பார்த்துக் கொண்டிருந்தது.
பங்களா கேட் திறந்து விட்டேக்கரின் கார் உள்ளே நுழைந்தது. போர்ட்டிகோவில் காரை நிறுத்து விட்டு, மொத்த குடும்பமும் பங்களா வாசலை நோக்கி நடந்தனர், வாசலை நெருங்கும் பொழுதுதான் கவனித்தான் தாமஸ், அவனது செல்போன் அவனிடம் இல்லை. காரில் ஏதும் இருக்கிறதா என பார்க்க காரை நோக்கி சென்றான்.
கடைக்குட்டி கெவின் கதவை திறந்து பங்களாவிற்குள் நுழைய, க்ரிஷ் ப்ரஷீரின் கையிலிருந்த பிஸ்டல் வெறித்தனமாக வெடித்தது. மார்பில் பாய்ந்தது புல்லட் என புரிந்து கொள்ள கூட நேரமில்லாமல் நொறுங்கி கீழே விழுந்தான் கெவின். அய்யோ மகனே என அலறியபடி உள்ளே வந்த பேற்றிகாவின் மார்பை துளைத்து வெளியேறியது இரண்டாவது புல்லட்.
என்ன நடக்கிறது என யோசிப்பதற்கு கூட டைம் கொடுக்காமல், பின்னால் ஓடி வந்த அப்பா கெண்ட் விட்டேக்கரின் தோள்பட்டையை பதம் பார்த்து எலும்புகளை சிதறடித்தது மூன்றாவது புல்லட்.
அடுத்தடுத்து குடும்பத்தின் அலறல் சத்தம் கேட்டு காரில் செல்போனை தேடிக் கொண்டிருந்த தாமஸ் தாவி ஓடி வீட்டிற்கு விரைந்தான். ஏற்கனவே மூன்று பேரின் அலறல் சத்தத்தையும் பிஸ்டல் வெடித்த சத்தத்தையும் கேட்ட தாமஸ் எச்சரிக்கையாக பதுங்கி பதுங்கி வீட்டிற்குள் நுழைந்தான். இருட்டில் எங்கிருந்தோ வந்த நான்காவது புல்லட் தாமஸின் இடது கையை கிழித்து வெளியேறியது. உசாரான தாமஸ், தாவி கிரிஸ் ப்ரஷீரை பிடிக்க முயல, தாமஸின் தாக்குதலில் நிலை குலைந்த ப்ரஷீருக்கு ஆதரவாக ஸ்டீவனும் களத்தில் குதித்தான். பெரும் பிரளயத்தில் தாக்குபிடிக்க முடியாத இரண்டு முகமூடிகள் ஸ்டீவன், மற்றும் ப்ரஷீர் இருவரும், இருட்டில் பாய்ந்து பறந்து பின் வாசல் வழியாக பக்கத்து பங்களா காம்பௌண்டிற்குள் நுழைந்து தப்பி பிழைத்து ஓடினார்கள்.
ஹாலுக்கு ஓடி வந்து துடிதுடித்துக் கொண்டிருந்த குடும்பத்தை பார்த்தான் தாமஸ் பார்ட். தம்பி கெவினும் அம்மா பேற்றிகாவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள். ப்ரஷீரின் பிஸ்டல் புல்லட்டால் தோள்பட்டை எலும்புகள் நொறுங்கி ரத்தம் வடிந்து கொண்டிருக்க, வலியால் துடித்தபடி போலிஸிற்கு போன் செய்து கொண்டிருந்தார் அப்பா கெண்ட் விட்டேக்கர்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 2