முந்தைய பகுதிகள்: பாகம் 1 பாகம் 2
பிரபல மேக்ஸிம் பத்திரிகையில், கவர்ச்சி போட்டோ ஷீட், சில லோக்கல் பேஷன் ஷோக்களில் கேட்வாக், அவ்வப்போது டைகரை கவனித்ததில் கிடைத்த வருமானம் என 8 வருடங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இஷ்டப்படி கூத்தடித்துக் கொண்டிருந்த எலிசபெத்திற்கு, பிள்ளைகள் வளர்ந்து பருவம் அடைந்த பின் தொல்லைகளாக மாறிப் போனார்கள்.
வயதுக்கு வந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு வயதுக்கு மீறிய சேட்டைகளை செய்து கொண்டிருந்த எலிசபெத்தின் இம்சைகள் தாங்காத பிள்ளைகள் அப்பா டேனியலுக்கு போன் செய்து புலம்ப தொடங்கினார்கள்.
விட்டால், பாவி பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடுவாள் என்று பதறிய டேனியல், டக்கென லாரி பிடித்து தட்டு முட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு லாஸ் வேகஸ் வந்து குடியேறி விட்டார்.
டேனியலை சந்திக்க கூடாது என்ற எலிசபெத்தின் எதிர்ப்பை மீறி பிள்ளைகள் அடிக்கடி டேனியல் வீட்டிற்கு வந்து தங்கி சென்றார்கள். 8 வருடங்கள் கழித்து மீண்டும் பிள்ளைகளுடன் நெருங்கி பழகி பாசம் காட்டி மகிழ்ந்த டேனியலின் சந்தோசத்திற்கு சாவு மணி அடித்தது மூத்த மகளின் காதல் விவகாரம்.
16 வயதில் எப்படி காதல் வரும். எல்லாம் எலிசபெத்தின் வளர்ப்பு லட்சணம். கண்டிப்பு காட்டினால், கட்டாயம் திருந்தி விடுவாள் என மகளிடம் கொஞ்சம் கோபத்தை கொட்டி கட்டுபாடுகளை வித்தித்தார் டேனியல். காதலனை சந்திக்க கூடாது என வீட்டு சிறையில் மகளை அடைத்த டேனியல் மேல் வீணாக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தாள் மகள்.
எலிசபெத்தால் ஏற்பட்ட அவமானத்தை விட இது ஒன்று பெரிதல்ல, மகளின் எதிர்காலமே பெரிது என நினைத்த டேனியல், எப்படியும் மகளின் காதலை தடுத்து நிறுத்தி விடும் முயற்சியில் தொடந்து மகளை வீட்டு சிறையில் வைத்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார் டேனியல். வீட்டு சிறையில் இருந்த அவரது மகளுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. டேனியலின் தாய் கிரிஸ்டின் போலிஸிடம் சொல்லி முடித்த அதே நேரம், சைபர் க்ரைம் போலிஸ் டேனியலின் மகளின் செல்போன் லொகேஷனை கண்டுபிடித்து விட்டனர்.
அந்த லொகேஷன். சால்ட் லேக் சிட்டியின் ஒரு ஹோட்டல்.
ஹோட்டல் அறையில், ஒரு பக்கம் டீவியில் செய்தி சேனல் ஒன்றின் செய்தி ஓடிக் கொண்டிருக்க, கட்டிலில் சியாராவுடன் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தான் ஆரோன். சில்மிஷ சேட்டைகளில் மூழ்கியிருந்த இருவரின் கவனத்தையும் கலைத்தது திடீரென டீவியில் ப்ளாஷான டேனியலின் கொலை பற்றிய செய்தி. பதறி பிரிந்து டீவியை பார்த்த இருவரின் தலையிலும் இடியை இறக்கியது அந்த ப்ளாஷ் நியூஸ்.
"45 வயது டேனியல் ஹல்ஸெத்தை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அவரது மகள் 16 வயது சியாராவையும் அவளது காதலன் 18 வயது ஆரோனையும் லாஸ் வேகஸ் நகர போலிஸ் வலை வீசி தேடுவதாக" ப்ளாஷாகிய செய்தியுடன் சியாரா, ஆரோன் இருவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
பதறியடித்து, மூட்டை முடிச்சுகளை பேக் செய்து, ஹோட்டலை காலி செய்து விட்டு, டேனியலின் காரில் சென்றால் போலிஸிடம் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்ற பயத்தில் லோக்கல் ட்ரெயினில் ஏறி பறந்தார்கள் சியாரா ஆரோன் ஜோடி. அல்லு தெறித்த அவசரத்தில் டிக்கெட் எடுக்காமல் ஏறி விட்ட சில் வண்டுகளை அடுத்த ஸ்டேஷனில் அமுக்கி பிடித்தார் ஒரு TTR.
ஆரோன் - சியாரா (டேனியலை கொலை செய்த பின் எடுத்துக் கொண்ட செல்ஃபி)
ரெண்டு வாண்டும் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்ஸ் என தெரியாமல், டிக்கெட் பிரச்சினையை சொல்லி ரெயில்வே போலிஸிடம் இருவரையும் ஒப்படைத்தார் அந்த அப்பாவி டிடிஆர்.
அட ரெண்டு மூஞ்சையும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என பைல்களை புரட்டிய ரெய்ல்வே போலிஸின் கண்களில் மாட்டி தொலைத்தது, அப்போதுதான் பிரிண்ட் போடப்பட்டு சுடச் சுட டேபிள் மேல் இருந்த, டேனியலின் கொலையில் தேடப்படும் ஆரோன் சியாராவின் புகைப்படங்கள்.
பேசுவதற்கு ஒன்றுமில்லை என புரிந்து கொண்ட புதுமண தம்பதிகள் ஆரோன் சியாரா ஜோடி உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
சியாராவின் பள்ளி தோழந்தான் ஆரோன். மாடலிங் மண்ணாங்கட்டி என தாய் எலிசபெத் தற்குறியாய் சுற்றி திரிய, கடிவாளம் இல்லாத கன்னுகுட்டி சியாரா எளிதில் ஆரோனின் காதல் வலையில் விழுந்தாள்.
பிள்ளைகள் சாப்பிட்டார்களா என்று சிந்திக்கவே நேரமில்லாமல் கலைப்பணியாற்றிக் கொண்டிருந்த எலிசபெத், மகளின் காதலை எங்கே கண்டுகொள்வது? கட்டுப்பாடுகள் இல்லாமல் கன்னாபின்னவென வளர்ந்து வந்த சியாரா ஆரோன் காதலுக்கு ஸ்பீட் ப்ரேக்கராக வந்து நின்றார் டேனியல்.
ஆரோனை சந்திக்க கூடாது என கட்டுப்பாடுகள் விதித்த டேனியலின் பேச்சை மதிக்காத சியார, ரகசியமாக ஆரோனை சந்தித்து காதலை அவ்வப்பொழுது சோட்டா ரீசார்ஜ் செய்து கொண்டிருந்ததை கண்டு பிடித்து விட்டார் டேனியல். "ராங்கி வளர்த்த பிள்ளை ராங்காகதான் யோசிக்கும், கொஞ்சம் ராவாக கவனித்தால்தான் சரியாக இருக்கும்" என முடிவெடுத்த டேனியல், சியாராவை வீட்டு சிறையில் அடைத்தார்.
- தொடரும் -
அடுத்த பகுதி: பாகம் 4 - வீடியோ