முந்தைய பகுதிகள்: பாகம் 1 மற்றும் பாகம் 2
செரில் லின்னின் இறுதி காரிய கடமைகளுக்காக வந்திருந்த டயனேவின் பெற்றோர் மற்றும் சில உறவினர்களை விசாரித்தார் இன்ஸ்பெக்டர். அடுக்கடுக்காக வந்து விழுந்தன டயனேவின் தகிடுதத்தங்கங்கள்.
சிறு வயதில் பள்ளி படிக்கும் பொழுதே, இளம் பெண் போல் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து மேக்கப் போட்டு இளைஞர்களுடன் டேட்டிங் சென்றுள்ளார் டயனே, கடுப்பான அவளது அப்பா வெஸ்லி கன்னாபின்னாவென கத்தியதுடன் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்தார். வேலி தாண்டிய வெள்ளாட்டை வீட்டிற்குள் முடக்கப்பார்த்த அப்பா வெஸ்லி மேல் அபாண்டமாக பாலியல் குற்றசாட்டை வைத்தாள் டயனே. வெஸ்லியை பற்றி எங்களுக்கு தெரியும் என மண்டையில் ரெண்டு போட்டு டயனேவை பொய்யை புறக்கணித்தார்கள் உறவினர்கள்.
1972ம் ஆண்டு பசுபிக் கோஸ்ட் பேப்டிஸ்ட் பைபிள் காலேஜில், ஹாஸ்டலில் தங்கி படித்த பொழுது, பல ஆண்களுடன் டேட்டிங் சென்று தகாத உறவு வைத்திருந்த டயனேவை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்ய, டயனேவின் கல்லூரி படிப்பு பாதியில் நின்றது. மீண்டும் மீண்டும் மகளால் தொடர்ந்து அவமானங்கள் ஏற்பட வெறுப்பான வெஸ்லி வீட்டை விட்டு வெளியில் செல்ல கூடாது என டயனேவை சிறைப்படுத்தினார். நித்தம் ஒரு ஆண், என பித்து பிடித்து திரிந்த டயனேவால் வீட்டிற்குள் முடங்கி சிறைப்பறவையாக இருக்க முடியவில்லை, வெஸ்லி அசந்த நேரம் பார்த்து, வீட்டை விட்டு ஓடிச்சென்று 1973ம் ஆண்டு ஸ்டீவை திருமணம் செய்து கொண்டார் டயனே.
மேஜர் பெண்ண்ணின் முடிவு என சட்டங்கள் சொன்னதால், சனியன் தொலைந்தது என விட்டு விட்டார் வெஸ்லி.
அடுத்து, டயனேவின் முன்னாள் கணவர் ஸ்டீவை சந்தித்தார் ஜெபர்ஸன். சொப்பனசுந்தரியின் முன்னாள் ஓனரான ஸ்டீவ் வண்டியை பற்றி வண்டி வண்டியாக வண்டவாளங்களை வாரிக் கொட்டினார்.
1969ம் ஆண்டு கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது, தன் நண்பன் ஒருவன் மூலம் மூன் வேலி ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த டய்னேவை சந்தித்தார் ஸ்டீவ். ச்சும்மா ஒரு நாள் டேட்டிங் என சென்றவர், வீட்டில் தன்னை ரொம்ப கொடுமை செய்கிறார்கள் என டயனே கண்களை கசக்க, மோகத்தில் மூழ்கி கிடந்த ஸ்டீவ் பரிதாபப்பட்டு டயனேவுடன் நட்புடன் பழக ஆரம்பித்தார்.
பணக்கார குடும்ப பின்ணனி கொண்ட ஸ்டீவின் பழக்கம் டயனேவிற்கு நல்ல பண புழக்கத்தை கொடுத்தது. டயானேவின் அழகில் ஸ்டீவும் ஸ்டீவின் பணத்தில் டயானேவும் மயங்கி நட்பூ காதலாக கனிந்து இருவரும் அடிக்கடி சந்தித்து கசிந்துருக ஆரம்பித்தனர்.
காலேஜில் இருந்து மேட்டர் மேட்டரால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட டயனே, ஸ்டீவிடம் உண்மையை மறைத்து, என்னை வீட்டில் அடைத்து வைத்து நம் காதலுக்கு கள்ளி பால் ஊற்ற பார்க்கிறார்கள் என கதற, காதலை காப்பாற்ற, ஹீரோயிஸம் காட்டி, கிளம்பி வா யார் வருகிறார்கள் பார்ப்போம் என தொடையை தட்டிய ஸ்டீவ், 1973ம் ஆண்டு டயனேவின் விரலில் மோதிரத்தை மாட்டி, தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டார்.
வந்த வேகத்தில், காதல் மோகத்தில், ஒரே வருடத்தில், முதல் குழந்தையை பெற்றெடுத்தார்கள் ஸ்டீவ் டயனே தம்பதிகள். அதன் பின்தான் மெல்ல மெல்ல கற்புக்கரசி கலர் கரைந்து டயனேவின் கருப்பு பக்கங்கள் ஸ்டீவின் கண்களுக்கு தெரிய வந்தன.
நேவியில் பணிபுரிந்த ஸ்டீவ் மாதக்கணக்கில் கடலில் கிடக்க, டயனே தன் பால்ய பலான ஆண் நண்பர்களுடன் கட்டிலில் புரண்டாள். கணக்கு போட்டால் கால்குலேட்டர் கதறிவிடும் அளவிற்கு டயனேவிற்கு ஆண் நண்பர்கள். ஆடம்பர செலவு, அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் மேட்டர் என சுற்றிக் கொண்டிருந்த டயனேவுடன் நித்தம் சண்டை போட தொடங்கினார் ஸ்டீவ்.
சண்டை ஒரு பக்கம் நடந்தாலும் டயனேவின் அழகிலும் பாசாங்கிலும் ஏமாந்த ஸ்டீவ் ஏதோ ஒரு தருணத்தில் தன்னை மறந்து செய்த தவறால் 1976ம் ஆண்டு இரண்டாவது மகள் செரில் லின் பிறந்தாள். விட்டால் எலிமிண்டிரி ஸ்கூல் வைக்கும் அளவிற்கு வீட்டில் பிள்ளைகள் பெருகி விடும் என பயந்த ஸ்டீவ் 1977ம் ஆண்டு, வஸ்க்டமி என்னும் கருத்தடை ஆப்ரேஷன் செய்து விட்டார்.
ச்சும்மாவே பேயாட்டம் ஆடும் டயனே, ஸ்டீவின் கருத்தடை மேட்டர் தெரிந்ததும் சுடுகாடு ஆட்டமே ஆடத் தொடங்கினாள். டயனேவின் டேட்டிங் பார்ட்னர்களில் ஒருவனான மார்க் சாகர் என்பவன் மூலம் 1979ம் ஆண்டு மூன்றாவது குழந்தை ஸ்டீபன் டேனியல் பிறந்தான்.
ஊருக்கு பிள்ளை பெற்று பேருக்கு நம்மளை அப்பாவாக்கி விட்டாளே என்ற கோபத்தில் ஸ்டீவ் 1980ம் ஆண்டு டயனேவை டைவர்ஸ் செய்தார்.
விசாரணையின் போது ஸ்டீவ் சொன்ன மிக மிக முக்கியமான விசயம் டயனேவிடம் .22 காலிபர் பிஸ்டல் ஒன்று உள்ளது. இதை கேட்டதும் இன்ஸ்பெக்டர் முகத்தில் மெல்லிய புன்னகை.
காரணம் டயனேவின் கற்பனை பரட்டை தலை நம்பியார் .22 காலிபர் துப்பாக்கியால்தான் குழந்தைகளை சுட்டிருந்தான். அதே சமயம் சம்பவம் நடந்த காரில், டயனே பரட்டை தலை நம்பியார், குழந்தைகளை சுட்டதாக சொன்ன ட்றைவர் சீட் பக்கம் ரத்த கறைகளே இல்லை, மேலும் அந்த பகுதியில் துப்பாக்கி புல்லட் பவ்டர் துகள்கள்களும் இல்லை.
சம்பவம் நடந்த அன்று இரவு, ஹாஸ்பிடலுக்கு காரில் வேகமாக வந்ததாக புழுகிய டயனேவின் காரை பார்த்தவர்கள், அதிகபட்சம் 10 கிலோமீட்டர் ஸ்பீடில் கல்யாணம் ஊர்வலம் போல தான் கார் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தது என்றார்கள்.
ஹாஸ்பிடல் மருத்துவர்கள், புல் பாடி செக்கப்பிற்கு வந்து புது பேஷண்ட் போல், டயனே ரொம்ப கேஸ்வலாக பேசியதாகவும், ஒரு பயங்கர கொலை சம்பவத்தில் இருந்து தப்பி வந்த பதட்டமோ, குழந்தை இறந்து இரண்டு குழந்தைகள் சீரியஸாக இருக்கும் கவலையோ, டயனேவிடம் துளி கூட இல்லை என இன்ஸ்பெக்டரிடம் சொல்லியிருந்தார்கள்.
இப்படி டயனே, பரட்டை தலை நம்பியார் இருவரை தவிர ஊரில் உள்ள அத்தனை பேரின் விரலும் டயனேவையே டார்கெட் பண்ணின. ஆனால், வழக்கில் பாதிக்கப்பட்ட முக்கிய சாட்சிகள் மற்றும் முழு உண்மைகளும் தெரிந்தவர்கள், டயனேவின் குழந்தைகள் ஸ்டீபன் டேனியல் மற்றும் கிறிஸ்டி ஆன்.
ஸ்டீபன் டேனியலுக்கு 3 வயது எனவே அவனால் என்ன நடந்து என சொல்ல முடியாது, கிறிஸ்டி ஆனுக்கு 8 வயது ஆனால் டயனேவின் அதிர்ஷ்டம், கிறிஸ்டி புல்லட் காயங்களால் உடலின் ஒரு பக்கம் செயல் இழந்து, பேச முடியாமல் படுத்த படுக்கையாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தாள்.
ஹாஸ்பிடலுக்கு தன் குழந்தைகளை பார்க்க வந்த போதெல்லாம் டயனேவின் சொந்த ஊரான பீனிக்ஸை சேர்ந்த ராபர்ட் நிக்கர்போக்கர் என்பவரை துணைக்கு அழைத்து வந்திருந்தாள் டயனே. கண்டிப்பாக டயனேவின் கில்மா ப்ரண்டில் ஒருத்தனாகதான் இருக்க வேண்டும் என சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர், ராபர்ட் நிக்கர்போக்கரின் ஹிஸ்ட்ரியை தோண்ட தொடங்கினார்.
- தொடரும் -
இறுதி பாகம்: பாகம் 4 - வீடியோ