முந்தைய பாகம்: பாகம் 1
அவ்வப்போது கிடைத்த சுகம், அடிக்கடி கிடைத்து திகட்ட தொடங்கியதும், இயான் டயஸ் மிச்சல்லே ஜோடிக்குள் சிறு சிறு சண்டைகள் வரத்தொடங்கின. வாய் சண்டைகள் வரம்பு மீறி இருவரும் கைகலப்பில் களம் இறங்கும் நிலைக்கு சென்றதும், இதற்கு மேல் இது தொடர்ந்தால் யாரேனும் ஒருவர் டெட்பாடி போஸ்ட்மார்ட்டம் போவது உறுதி என புரிந்து கொண்ட இயான் டயஸ் மிச்சல்லேவின் தொடர்பை துண்டித்துக் கொண்டார். ஒரே வீட்டில் எவ்வளவு நாள் பேசிக் கொள்ளாமல் குடும்பம் நடத்துவது, பொறுத்து பொறுத்து பார்த்த மிச்சல்லே, பொட்டியை கட்டிக் கொண்டு பொறந்த வீட்டிற்கு புறப்பட்டாள் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் மிச்சல்லே சகவாசத்தை முடித்துக் கொண்ட இயான் டயஸ்.
அந்த காவிய காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்து 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏஞ்சலாவை திருமணம் செய்து கொண்டு, தன் முன்னாள் காதலி மிச்சலேவுடன் லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த வீட்டில், ஏஞ்சலாவுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார்.
எனக்கு கிடைக்காதவனுக்கு எவளும் கிடைக்க கூடாது, எதுவும் கிடைக்க கூடாது என நீலம்பரி சபதம் எடுத்த மிச்சல்லே, ஏஞ்சலாவையும் அவளது கருவில் வளரும் இரட்டை குழந்தைகளையும் இயான் டயஸிடமிருந்து பிரிக்கும் முயற்சியாகவே ஈ மெயில் மிரட்டல்களை விட்டு பார்த்தாள், அவை வேலைக்காகவில்லை என தெரிந்ததும் க்ளாஸிபைட் வெப்ஸைட்டில் ஏஞ்சலா பெயரில் கற்பழிக்க கட்டழகன் தேவை விளம்பரம் கொடுத்து, யாரோ ஒரு முகமூடி முரடனை அனுப்பி ஏஞ்சலாவை கற்பழித்து கொலை செய்ய முயன்றிருக்கிறாள்.
பொறுமையாக புகாரை பெற்றுக் கொண்ட போலிஸ், ஒண்டாரியொ நகரில் பெற்றோருடன் வசித்து வந்த மிச்சல்லே ஹாட்லேவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார்கள். இயான் டயஸுடனான காதல் பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொன்ன மிச்சல்லேவின் செல்போன், லேப்டாப்களை சோதனை செய்தார்கள் போலிஸ்.
மிச்சலேவின் மெயிலில் இருந்து இயான் டயஸிற்கு ஏகப்பட்ட மெயில்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் அவை ஏஞ்சலாவிற்கு வந்திருந்த மிரட்டல் மெயில்கள் அல்ல, மாறாக, இயான் டயஸ் மிச்சலேவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்ய சொல்லியும் முடியவில்லை என்றால், இயான் டயஸ் ஏஞ்சலே தம்பதிகள் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டல் தொனியில், பல பைபிள் வசனங்கள், சாபங்கள், வசவுகளுடன் எழுதப்பட்டிருந்தன அந்த ஈ மெயில்கள்.
ஏஞ்சலாவிற்கு வந்திருந்த மிரட்டல் மெயில்களுக்கும், மிச்சல்லே இயான் டயஸிற்கு அனுப்பியிருந்த மெயில்களுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன.
.
பயன்படுத்தியிருந்த வார்த்தைகள், மிரட்டல் ஸ்டைல், பைபிள் வசன மேற்கோள்கள், சாபங்கள், குறிப்பிட்ட வார்த்தைகளில் தொடர்ந்து நடந்திருந்த எழுத்து பிழைகள், என இயான் டயஸிற்கு மெயில் அனுப்பிய நபர்தான், ஏஞ்சலாவிற்கு மிரட்டல் மெயில் எழுதியிருக்க வேண்டும் என பச்சை குழந்தை கூட பளிச்சென சொல்லி விடும். அமெரிக்க போலிஸ் என்ன தக்காளி தொக்கா? தொக்காக மிச்சலேவை தூக்கி சிறையில் அடைத்தார்கள் அனஹேம் நகர போலிஸ்.
வெளியில் விட்டால், ஆதாரங்களை அழித்து விடுவாள் என நீதி மன்றத்தில் அனுமதி வாங்கி, அனஹேம் நகர பெண்கள் சிறையில் மிச்சல்லேவை அடைத்து விட்டு மேற்கொண்டு மிச்சல்லேவின் குற்றத்தை வலுவாக நிரூபிக்க ஆதாரங்களை தேடி களம் இறங்கினார்கள் அனஹேம் நகர போலிஸ்.
முதலில் லோக்கல் கிளாஸிபைட் வெப்ஸைட்டில் ஏஞ்சலா பெயரில் வெளி வந்திருந்த 'கற்பழிக்க கட்டழகன் தேவை' விளம்பரத்தை ஆய்வு செய்தனர் போலிஸ். VPN பயன்படுத்தி போஸ்ட் செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில் காண்டக்ட் விவரங்களாக ஏஞ்சலாவின் மெயில் ஐடி, செல் போன் நம்பர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. VPN எல்லாம் எங்களுக்கு வெஜ் பிரியாணி மாதிரி என லெப்ட் ஹெண்டில் டீல் செய்த அமெரிக்காவின் ஸைபர் க்ரைம் கில்லாடிகள், அந்த விளம்பரத்தை போஸ்ட் செய்த IP அட்ரஸை ட்ரேஸ் செய்தார்கள். ஆரஞ்ச் நகரில் இருந்த அந்த வீட்டு காலிங் பெல்லை அமுக்கிய போலிஸை என்ன இந்த பக்கம் என ஏதும் அறியாத குழந்தை போல் வரவேற்றாள் ஏஞ்சலா.
சுதாரித்த போலிஸ், ச்சும்மா என சொல்லி சமாளித்து விட்டு, நீங்க எங்க இங்கே என்று விசாரித்தார்கள். இது என் அப்பா அம்மா வீடு என்றாள் ஏஞ்சலா. அப்படியா சங்கதி என அங்கிருந்து அப்பிட்டான போலிஸ் தங்கள் சந்தேக வலைக்குள் ஏஞ்சலாவை சத்தமில்லாமல் சுருட்டிக் கொண்டார்கள்.
க்ளாஸிபைட் வெப்ஸைட்டில்,
'கற்பழிப்பு பணிக்கு கட்டழகன் தேவை' விளம்பரம் போஸ்ட் செய்யப்பட்ட தேதி, நேரத்தில் ஏஞ்சலா தனது பெற்றோரின் வீட்டில்தான் இருந்தாள் என்பதை தங்கள் உள்ளடி உளவு வேலைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டனர் போலிஸ்.
ஏஞ்சலாவிற்கு வந்திருந்த மிரட்டல் மெயில்களில் சில அதே ஆரஞ்ச் நகரில் இருந்த ஏஞ்சலாவின் பெற்றோரின் வீட்டு இண்டர்நெட் IP அட்ரஸில் இருந்து VPN பயன்படுத்தி அனுப்பப்பட்டிருந்ததும், அந்த நாட்களில், நேரத்தில் ஏஞ்சலா தன் பெற்றோர் வீட்டில் இருந்தாள் என்பதும் போலிஸின் புலனாய்வில் தெளிவானது.
சம்பவம் நடந்த ஜூன் மாதத்தில் 3 மாத கர்ப்பமாக இருந்த ஏஞ்சலாவின் வயிறு 5 மாதங்கள் கடந்தும், இன்னும் ஏழாம் அறிவு போதி தர்மனின் வயிறு மாதிரி உள் வாங்கியிருந்ததே தவிர, உள்ளே இரட்டை குழந்தைகள் வளர்ந்து, வயிற்றை வீங்க வைப்பதாக இல்லை. அடிக்கடி விசாரணைக்காக ஏஞ்சலாவை சந்தித்த போலிஸிற்கு ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் மண்டையை குடைந்து கொண்டிருந்தாலும், வயிற்றை பற்றி நமக்கென்ன கவலை நாம் வழக்கை கவனிப்போம் என கடமையில் கண்ணயிருந்தனர் போலிஸ். ஆனால் எல்லா இடத்திலும் இருப்பது போல், அந்த போலிஸ் டீமில் இருந்த புறணி விரும்பி பொம்பள போலிஸ் ஒருத்தி, ஏஞ்சலாவிடம் வெட்கத்தை விட்டு கேட்டே விட்டாள்.
"அந்த சிறுக்கியின் சாபம் என் குழந்தைகள் கருவிலேயே அபார்ஷன் ஆகி விட்டார்கள்", என சொல்லி மூக்கை சிந்தினாள் ஏஞ்சலா. ஐயோ, பாவம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துயரமா என கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு கடமையில் கவனம் செலுத்தினார்கள் போலிஸ்.
- தொடரும் -
அடுத்த பாகம்: பாகம் 3