பொத்தி பொத்தி ப்ரிட்ஜில் வைத்தாலும் பொணம் நான் நாறியே தீருவேன் என நான்காவது நாள் ஹார்ட்வெல்ட்டின் பாடி டீகம்போஸாகி அழுகி நாற்றமெடுக்க தொடங்கியது. இருந்த பாடி ஸ்ப்ரே, ரூம் ஸ்பிரே எல்லாம் எடுத்து அடித்து பார்த்தான், ம்கும் நாற்றம் நின்றபாடில்லை. ஹார்ட்வெல்ட்டின் மிச்ச மீதி உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தன்னிடம் இருந்த இரண்டு சூட்கேசுகளில் அடைத்தான்.
தூக்க முடியாமல் தூக்கிக் சென்று காரில் ஏற்றிக் கொண்டு பாய்ஸ் டி பவுலோக் பார்க்கை நோக்கி விரைந்தான். பாய்ஸ் டி பவுலோக் பார்க், 2088 ஏக்கர் பரப்பளவுள்ள, பாரிஸின் 2வது பெரிய பார்க். பார்க் என்று சொன்னாலும், கொஞ்ச இடத்தில் மட்டுமே பொது மக்களின் நடமாட்டம் இருக்கும் மீதி இடம் முழுவதும் ஆழமான ஏரிகளும் அதனை சுற்றி அடர்ந்த காடுகளும் கொண்ட பெரிய வனப்பகுதி பரந்து விரிந்து கிடக்கும். பாரிஸின் பொல்லாத பல சங்கதிகள் பாய்ஸ் டி பவுலோக் பார்க்கில்தான் நடக்கும்.
ஜூன் 16ம் திகதி செவ்வாய் கிழமை. பார்க்கில் ஆள் அரவமற்ற பகுதியில் காரை நிறுத்தி விட்டு, 2 சூட்கேஸுகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, பார்க்கின் ஓரத்தில் இருந்த ஏரியை நோக்கி சென்றான் சகாவா.
ச்சும்மா பார்த்தாலே சந்தேகப்படும் சைசில் இருந்த சகாவா இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்ததை பார்த்த சிலர் சந்தேகப்பட்டு போலிஸிற்கு போன் செய்ய, பார்க்கிற்கு பறந்து வந்த போலிஸ், சூட்கேஸும் கையுமாக சகாவாவை பிடித்தனர். உள்ளே ஏதும் கஞ்சா ஹெரயின் மாதிரி போதை வஸ்த்துகள் இருக்கும் என நினைத்து சூட்கேஸை திறந்த போலிஸ் உள்ளே துண்டு துண்டாக மனித உடலை பார்த்ததும் மயங்கி சரியாத குறையாக சூட்கேஸுடன் சகாவாவை ஸ்டேஷனுக்கு பேக் செய்தார்கள்.
இத்துடன் சகாவாவின் வாழ்க்கைக்கு சங்கு ஊதியாகிவிட்டது என்றே பலரும் நினைத்தனர், ஆனால் சகாவ ஜப்பானின் பிரபல எழுத்தாளராகி பல கோடிகள் சம்பாத்தித்து செலிபிரிட்டியாக வலம் வருவான் என்ற ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை. சகாவாவின் கைது மேட்டர் காதுக்கு எட்டிய அடுத்த நொடியோ, செலவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு லாயரை ஏற்பாடு செய்து சகாவாவிற்காக வாதாட வைத்தார் அப்பா அகிரோ.
பிரான்ஸ் போலிஸிற்கு சகாவா அதிகம் சிரமம் கொடுக்கவில்லை, சாக்லேட் கிடைத்த குழந்தை போல் சிரித்துக் கொண்டே, போலிஸிடம் எல்ல உண்மைகளையும் உள்ளது உள்ளபடி அப்படியே ஒப்பித்தான். தன் சிறு வயது ஆசை முதல், பாரிஸ் ப்ராஸ்டியூட்களை பதம் பார்க்க முயற்சித்து, கடைசியில் ஹார்ட்வெல்ட்டால் தன் கனவு நிறைவேறிய கடை நொடி வரை ஒன்று விடாமல் ஒப்பித்தான். ஹார்ட்வெல்ட்டின் டெட்பாடியை என்ன, எப்படி, ஏன் செய்தான் என்பது வரை ஒன்று விடாமல் விளக்கமாக போலிஸிற்கு விளங்குமாறு விளக்கினான்.
ஆனால் ஒவ்வொரு நொடியும் புத்திசாலிதனமாக, தன்னை ஒரு பைத்தியகாரன் என போலிஸை அழுத்தமாக நம்ப வைத்தான். இரண்டு வருடங்களாகாக நடைபெற்ற வழக்கில், நீதிபதி ஜேன் லூயிஸ், சகாவா மனநலம் பாதிக்கப்பட்டவன், எனவே சகாவாவை தண்டிப்பதை விட மனநல சிகிச்சை அளிப்பதே தேவையான ஒன்று என வழக்கை தள்ளுபடி செய்து, தீர்ப்பு சொல்லி திருவாய் மலர்ந்தார்.
பாரிஸில் மனநல மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்ட சகாவா மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, எழுதுவது என தன் பொழுதை போக்கிக் கொண்டிருந்தான்.
6 மாதங்கள் ஓடிப் போயிருந்த நிலையில், பர்ஸனல் வேலையாக பாரிஸுக்கு சென்ற ஜப்பானின் பிரபல எழுத்தாளர் இனுஹிகோ யோமோட்டோ, வந்தது வந்துட்டோம் அப்படியே நம் சக சிட்டிசன் சகாவாவை ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவோம் அடுத்து எழுதுவதற்கு ஏதாவது சுவாரசிய கதை கிடைத்தாலும் கிடைக்கும் என்று மனநல மருத்துவமனையில் இருந்த சகாவவை போய் பார்க்க, கதை தேடி வந்த யோமோட்டோவிடம் தான் எழுதி வைத்திருந்த கதை புத்தகத்தையே கொடுத்தான் சகாவா.
"இன் த பாக்", அதாவது "மூடு பனிக்குள்" என்ற அந்த புத்தகத்தில் ஹார்ட்வெல்ட்டை எப்படி கொலை செய்தான், அவளது உடலை என்னவெல்லாம் செய்தான் என விலாவரியாக, நொடிக்கு நொடி நடந்த அத்தனை கொடூரங்களையும் அழகியலோடு அடுக்குமொழி வர்ணணையோடு எழுதி வைத்திருந்தான்.
ஜப்பான் திரும்பிய யோமோட்டோ அந்த புத்தகத்தை வெளியிட, கரப்பான் பூச்சியிலிருந்து காட்ஸில்லா வரை சூப் வைத்து சுவைத்து பழக்கப்பட்ட ஜப்பான் மக்கள், தங்களுடன் ஒண்ணுமன்னாக இருந்த சக சிட்டிசன் ஒருவன் பிரான்ஸ் வரை சென்று மனித கறி தின்று மாபெரும் சாதனை செய்து விட்டான் என, இன் த பாக் புத்தகத்தையும் அதை எழுதிய சகாவாவையும் ஹீரோ ஆக்கிவிட்டார்கள்.
ஜப்பானில் சகாவாவிற்கு கிடைத்த பிரபலத்தை பார்த்த பிரான்ஸ் போலிஸ் அதிகாரிகள், எதற்கு இந்த பாடியை நாம் தூக்கி சுமக்க வேண்டும், ஜப்பானுக்கு சென்று என்ன கருமத்தையும் செய்து தொலைக்கட்டும் என சகாவாவை 1984ம் ஆண்டு அவனது சொந்த நாடு ஜப்பானுக்கே நாடு கடத்தினார்கள்.
டோக்யோ ஏர்ப்போர்ட்டில் இறங்கிய அடுத்த நொடியே சகாவாவை மடக்கி, மட்சுஸாவா மனநல மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள் ஜப்பான் போலிஸ் அதிகாரிகள். சகாவாவை பரிசோதித்த ஜப்பான் சைக்காரிஸ்ட் குழு, சகாவாவின் சாக்கடை மனதில் இருக்கும் பாலியல் வக்கிரங்களே அவன் ஹார்ட்வெல்ட்டை கபாளிகரம் பண்ண காரணம் என்பதை கண்டுபிடுத்து சொன்னார்கள். இரண்டு வருடங்கள் மட்சுஸாவா மனநல மருத்துவமனைக்குள் நல்லவனாக நடித்து நாடகம் போட்டுக் கொண்டிருந்தான் சகாவா.
ஜப்பானில் சகாவா எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல், நல்ல பிள்ளையாக இருந்ததால், அவனை தொடர்ந்து மனநல மருதுவமனையில் தடுத்து வைக்க ஜப்பானின் சப்பை மூக்கு சட்டத்தில் இடம் இல்லாததால், நான் நல்ல பிள்ளை, எனக்கு எந்த பிரச்சினையிம் இல்லை என சகாவா நமக்கு நாமே திட்டத்தில் அவனுக்கு அவனே சர்ட்டிபிகேட் கொடுத்து 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி மனநல மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனான்.
வெளியில் வந்த சகாவாவை, 100 நாள் பிக்பாஸ் பிரபலம் போல் ஜப்பான் மீடியாக்கள் வைரல் ஆக்கி விட்டார்கள். ரியாலிட்டி டாக் ஷோ முதல் தெருவில் நடந்த டாக் ஷோ வரை அத்தனைக்கும் சகாவாவை சீப் கெஸ்ட்டாக கூப்பிட்டு கும்மியடித்தார்கள் ஜப்பான் ஜனங்கள்.
ஒரு கொலைக்கு இப்படி கொண்ட்டடுகிறார்களே என்ற குஷியில், வந்தவரை லாபம் என கிடைத்த வாய்ப்பையெல்லாம் பணமாக்கினான் சகாவா. Unfaithful wife, Shameful Torture என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தான், ஜப்பானின் பிரபல கொலை வழக்கான 1997ம் ஆண்டு நடந்த கோபி நகர குழந்தைகள் கொலை பற்றி ஷோனன் ஏ என்ற புத்தகத்தை எழுதினான். ஜப்பான் ரெஸ்ட்டாரண்டுகள் பற்றி ரிவீவ் எழுதினான்.
இப்படி தனக்கு கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்த சகாவா 2013ம் ஆண்டு கடும் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானான். சம்பாதித்த பணமெல்லாம் சிகிச்சைக்கும் அன்றாட தேவைகளுக்கும் செலவானது. 9 வருடங்கள் படுக்கையில் கிடந்து தான் ஹார்ட்வெல்ட்டிற்கு செய்த கொடூரங்களை நினைத்து நினைத்து நலிந்து போன சகாவாவை 73வது வயதில் நிமோனியா காய்ச்சல் தாக்கியது. சிகிச்சைக்காக டோக்யோ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சகாவா, 2022ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி மரணம் அடைந்தான்.