2001ம் ஆண்டு பாய்லர் யுனிவர்ஸிட்டியில் சேர்ந்த ப்ராட்டின், அடாவடி அட்டூழியங்களால் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்டான், என்னடா என சலித்துக் கொண்டாலும், தொல்லை தந்தாலும் பிள்ளையாச்சே என பாசம் காட்டிய பெற்றோர் ஸாம் ஹோஸ்டன் ஸ்டேட் யுனிவர்ஸிட்டியில் சேர்த்து விட்டார்கள். அங்கும் ப்ராட்டின் பித்தலாட்டங்கள் ப்ராடுதனங்கள் தொடர, கல்லூரியில் இருந்து ப்ராடை டிஸ்மிஸ் செய்தார்கள் கல்லூரி பெரும்புள்ளிகள்.
அடுத்தடுத்து அப்பா அம்மாவிற்கு தொந்தரவு கொடுத்தால், பாக்கெட் மணியிலிருந்து பவுசு வாழ்க்கை வரை எல்லாவற்றிற்கும் எண்ட் கார்ட் போட்டு விடுவார்கள் என பயந்த தாமஸ் ப்ராட். காலேஜ் டிஸ்மிஸ் மேட்டரை வீட்டில் மறைத்து விட்டு, தினமும் காலேஜ் செல்வது போல் டிப் டாப்பாக வ்புறப்பட்டு, வெளியில் கிளம்பி ஸ்டீவன் கேம்பகன், க்ரிஷ் ப்ரஷீர் போன்ற சில்லறை திருடர்களுடன் சுற்றி வந்தான். விட்டேக்கர் காலேஜ் பீஸாக கொடுத்த பல ஆயிரம் டாலர்கள், ப்ராட்டின் பகட்டு வாழ்க்கைக்கு பயன்பட்டது.
காலேஜ் படிப்பு முடியும் காலமும் வந்து விட்டது, தான் மாஸாக மாஸ்டர் டிகிரி முடித்து விட்டதாக பெற்றோரிடம் உருட்டினான் தாமஸ் ப்ராட், இதற்கு மேல் அவர்களை ஏமாற்றி பணம் கறக்க முடியாது என்ற நிஜம் ப்ராட்டின் மூளையில் உறைக்க, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுவோம் என முடிவெடுத்த ப்ராட், தன் சகாக்கள் ஸ்டீவன் கேம்பகன், க்ரிஷ் ப்ரஷீரை நம்பி, தன் குடும்பத்தை கூண்டோடு கைலாசத்திற்கு பேக் செய்யும் பணியை கொடுத்தான். சன்மானமாக சில ஆயிரம் டாலர்கள் விலை பேசப்பட்டு முடிவானது.
நாள், தேதி குறித்து பக்காவாக ப்ளான் போட்டு, கொள்ளை நாடகம் அரங்கேற்றி, கெவின், பேற்றிகாவை கொலை செய்து, ப்ராட்டின் மேல் சந்தேகம் வரமால் இருக்க அவ்னனது கையில் சுட்டு பக்காவாக திட்டத்தை நிறைவேற்றிய ப்ராட்டின் துரதிர்ஷ்டம் அவன் அப்பா மயிரிழையில் உயிர் தப்பி, போலிஸிற்கு போன் செய்து விட்டார்.
அன்று கெண்ட் விட்டேக்கர் போலிஸிற்கு போன் செய்யாமலிருந்திருந்தால், ப்ராட் தன் தந்தையை கொன்று விட்டு கொஞ்ச நேரம் கழித்தே போலிஸிற்கு போன் செய்திருப்பான். ப்ராட்டின் புல் பிராடு பயோ டேட்டா ஹிஸ்ற்றியுடன், வீட்டு கதவை தட்டிய போலிஸை விரக்தியோடு வரவேற்றார் விட்டேக்கர். நானே ஸ்டேஷனுக்கு வரலாம் என்று இருந்தேன் அத்ற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள் என்றார். என்ன ஆச்சு என விசாரித்தார்கள் போலிஸ்.
என் மகன் தாமஸ் ப்ராட்டை 3 நாளாக காணவில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு. என்றார் விட்டேக்கர்.
எனக்கு ஏன் இந்த சோதனை, என மகனின் மகத்துவம் தெரியாமல் மனம் வருந்திய விட்டேக்கரிடம், நோகாமல் தாங்கள் வந்த நோக்கத்தை சொல்லி, தாமஸ் ப்ராட்டின் பித்தலாட்டங்களை ஆதரங்களோடு புரிய வைத்தார்கள் போலிஸ்.
2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஸ்டீவன் கேம்பகன், க்ரிஷ் ப்ரஷீர் இருவரையும் கைது செய்த ஸ்டாபோர்ட் நகர போலிஸ், எங்கே மாயமானான் என தாமஸ் ப்ராட்டை தேடத்தொடங்கியது.
ஒன்றரை வருடங்கள், டெக்ஸாஸ் தாண்டி அமெரிக்காவின் அத்தனை மாஹாணங்களிலும் சந்து பொந்தெல்லாம் சல்லடை போட்டு தேடி விட்டார்கள் போலிஸ், ஆனால், தாமஸ் ப்ராட் எங்கும் இல்லை. வேறு வழியில்லாமல் தாமஸ் ப்ராட் பற்றி தகவல் சொன்னால் 25,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்கள் ஸ்டாபோர்ட் நகர போலிஸ்.
சரியாக ஒரு மாதத்தில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி, போலிஸ் டீமிற்கு வந்தது ஒரு போன் கால். தன்னை ரூடி ரியோஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டவன். தாமஸ் பிராட் பற்றி ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றான்.
அவனை நேரில் சந்தித்து விசாரித்தது போலிஸ்.
2004ம் ஆண்ட், பிப்ரவரி மாதம், தாமஸ் ப்ராட்டிடம், மூவாயிரம் டாலர்கள் பணம் பெற்றுக் கொண்டு, தன்னுடைய ஐடி கார்ட், மற்றும் சில போலி டாக்குமெண்டுகளுடன், ஈகிள் பாஸ் நகர் வழியாக மெக்ஸிகோவிற்கு அனுப்பி விட்டதாக சொன்னான். இப்பொழுது தாமஸ் பிராட் மெக்ஸிகோவின் செர்ரல்வோ நகரில், ரூடி ரியோஸாக வாழ்ந்து வருவதாக வத்தி வைத்தான் ஒரிஜினல் ரூடி ரியோஸ். எதற்கு எங்களுக்கு உதவி செய்கிறாய் என அப்பாவியாய் கேட்ட போலிஸிடம், மூவாயிரத்தை விட 25 ஆயிரம் ரொம்ப பெருசு என பல்லிளித்தான் ஒரிஜினல் ரூடி ரியோஸ். சரியாக ஒரு வாரம் கழித்து. 2005ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி.
மெக்ஸிகோ – அமெரிக்க பார்டர். ஈகிள் பாஸ் நகரம். சொன்ன இடத்தில் வந்து நின்ற மெக்ஸிகோ போலிஸின் வண்டியில் இருந்து இறங்கிய ரூடி ரியோஸ் என்ற தாமஸ் ப்ராட்டை கஸ்டடி எடுத்தார்கள் அமெரிக்க ஸ்டாபோர்ட் நகர போலிஸ்.
ஸ்டாபோர்ட் நகர போலிஸை பார்த்ததுமே, தன் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறி விட்டதை புரிந்து கொண்ட ரூடி ரியோஸ் என்ற தாமஸ் ப்ராட், நவ தூவாரங்களையும் பொத்திக் கொண்டு போலிஸ் சொன்னதை பாலோ பண்ண தொடங்கினான்.
ஆல்ரெடி அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்த போலிஸ், பார்மாலிட்டிக்கு ப்ராட்டை விசாரித்து பின் கைது செய்தார்கள்.
தன் குடும்பத்தை கொன்ற குற்றவாளி தாமஸ் ப்ராட்டை, பல போராட்டங்களுக்கு பின் பிடித்து விட்ட போலிஸை விட்டேக்கர் பாராட்டுவார் என நினைத்தால், அவர் தாமஸ் ப்ராட்டை குற்றவாளியாக பார்க்காமல் மகனாக பார்த்தார்.
யாருமில்லாத அநாதையாக நிற்கும் தனக்கு இப்போது ஒரே ஆறுதல் தாமஸ் ப்ராட்தான் என நினைத்த விட்டேக்கர் வக்கீல் வைத்து தன் மகனின் விடுதலைக்காக போராடினார். இரண்டு வருடங்கள் நடந்த வழக்கில், 2007ம் ஆண்டு மார்ச் 2ம் திகதி, சொத்துக்கு ஆசைப்பட்டு தம்பி கெவின், தாய் பேற்றிகாவை கொலை செய்து, தந்தை விட்டேக்கரை காயப்படுத்தியதற்காக, தாமஸ் ப்ரட்டிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள் ப்ரட் பெல்க்மென் மற்றும் ஜெப் ஸ்ட்ரேஞ்.
மேல்முறையீடு செய்த தாமஸ் ப்ரட்டின் மனு 2017ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி நிராகரிக்கப்பட்டு, 2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி மாலை 6 மணிக்கு. தாமஸ் ப்ராட்டிற்கு லெதல் இஞ்செக்ஷன் மூலம் மரண தண்டானைக்கு நாள் குறிக்க்கப்பட்டது.
மகனின் மரண தண்டனையை நிறுத்த அப்பா கெண்ட் விட்டேக்கர் கடும் முயற்சிகள் செய்தார். அவரது அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகிக் கொண்டிருந்தன. கடைசியாக தாமஸ் ப்ராட்டை கழுவேற்றும் நாளும் வந்தது.
2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி.
சிறையில் மாலை 6 மணிக்கு தாமஸ் பிராட்டிற்கு லெதல் இஞ்செக்ஷன் மூலம் மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் நீதி மன்றத்தில் பிராட்டின் மரணதண்டனையை ரத்து செய்ய கோரிய விட்டேக்கரின் மனு அவசர மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
தாமஸ் பிராட்டின் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு, சரியாக 40 நிமிடங்களுக்கு முன், மாலை 5:20 மணிக்கு அவனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார் டெக்ஸாஸ் மாஹான கவர்னர் க்ரேக் அப்பாட்.
அப்பாடா என நிம்மதி பெரு மூச்சு விட்டார் அப்பா விட்டேக்கர்.
தற்போது, டெக்ஸாஸ் மாஹாணம், பீவில்லே நகரில், வில்லியம் ஜார்ஜ் மெக்கொன்னல் சிறையில் தன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான் தாமஸ் ப்ராட்.
இந்த தகவல்கள் அனைத்தையும் போலிஸ் விசாரணை, தேடி வந்த மீடியாக்கள், மற்றும் ஒரிஜினல் ரூடி ரியோஸ் மூலம் தெரிந்து கொண்ட பின்னும், தாமஸ் பிராட் ரூடி ரியோஸாக தனக்கு சொன்ன விபச்சாரி அம்மா, தற்கொலை முயற்சி, மிலிட்டரி, ஆப்கானிஸ்தான் போர், கையில் துப்பாக்கி புல்லட் காயம், மனம் திருந்திய வாழ்க்கை, என அனைத்தும் உண்மை என நிரூபித்து ஒரு நாள் ரூடி ரியோஸ் தன்னை திருமணம் செய்வது போல் அடிக்கடி கனவு கண்டு திடுக்கிட்டு விழித்து மெக்ஸிகோவின் ஒரு மூலையில் தினமும் தனது கிடாரை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறாள் சிண்டி சாலினஸ்..